September 6, 2026
tamil katturai APJ arul

வள்ளலார் வழியை காட்டும் ஆறு அகவல் வரிகள்

வள்ளலார் வழியை காட்டும்

ஆறு அகவல் வரிகள்.🙏

அன்புடன்:

APJ அருள்.

👉 : (1)

“பிறிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்

னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி. “

(பிறிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என் அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி)

# பொருள் #

எந்தக் காலத்திலும் பிரிந்து போவதையோ அல்லது விலகி இருப்பதையோ அறியாத ஒரே பொருளாக (ஓன்றெனும் ஒன்றாக) விளங்குகின்றதும், எனது அறிவினுள் இருந்து சுத்த அறிவைச் செலுத்துகின்ற அறிவாகவே இருக்கின்ற உண்மையே அருட்பெருஞ்ஜோதி!

👇

“பிறிவுற்று அறியா” (Pirivutru Ariyaa)

இதன் பொருள்:

👇

“ஒரு போதும் பிரிவை அறியாத” அல்லது “என்றைக்கும் பிரியாத” என்பதாகும்.

👇

பிறிவுற்று = பிரிவு + உற்று (பிரிவை அடைந்து)

அறியா = அறியாத (அனுபவிக்காத / உணராத)

👉 : (2)

“சாதியும் மதமும் சமயமும் காணா

ஆதி அனாதியாம் அருட்பெருஞ் ஜோதி”

👇

இதன் பொருள்:

👇

சாதி, மதம், சமயம் என்ற எந்தப் பிரிவுகளுக்குள்ளும் அடங்காத, காலத் தொடக்கமும் இல்லாத, அதற்கு அப்பற்பட்ட பேரொளியே அருட்பெருஞ்ஜோதி ஆகும்.

👇

சொல் விளக்கம்

👇

ஆதி = தொடக்கம் (Beginning).

அனாதி = தொடக்கம் இல்லாதது / காலத்திற்கு முற்பட்டது (Beginningless / Eternal).

👇

இறைவனுக்கோ அல்லது மெய்ப்பொருளுக்கோ எந்தவொரு பிறப்போ அல்லது ஆரம்பப் புள்ளியோ இல்லை என்பதை உணர்த்தவே இத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

👇

எங்கும் பரிபூரணராக நிரம்பியுள்ள ஒளி.

👉 (3):

“பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே

அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி”

👇

பொதுவுணர் உணரும் போதலாற்: இதன் விளக்கம்:

👇

நமது கண், காது போன்ற ஐம்புலன்களையோ அல்லது சாதி, மதம், இனம், சடங்குகள் போன்ற பாகுபாடுகளையோ கொண்டு இறைவனைத் தனித்துப் பார்க்கக் கூடாது.

👇

அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதும் ‘பொது உணர்வு’ (Universal Consciousness / ஒத்த ஆன்ம உணர்வு) நம்மிடம் ஓங்கும்போது மட்டுமே உண்மை கடவுள் (அருட்பெருஞ்ஜோதி சொரூபம்) நமக்கு வெளிப்படும்.

பிரித்தே அதுவெனிற் தோன்றா:

👇

இதன் பொருள்:

இறைவனை மற்றொன்றில் இருந்து “பிரித்து”, ஏதோ ஒரு குறிப்பிட்ட உருவத்திலோ அல்லது “அது தான் கடவுள்” என்று சுட்டிக்காட்டியோ பார்க்க முயன்றால், அவன் அங்கே தோன்ற மாட்டான். அதாவது, எல்லைக்குட்பட்ட மற்றும் சுட்டறிவுக்கு (சுட்டிக் காட்டும் அறிவுக்கு) இறைவன் அகப்பட மாட்டான்.

👉 (4):

“உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்

அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி”

👇

இதன் சுருக்கமான பொருள்:

இறைவனை அவனது “உள் ரகசியத்தை (உளவை) அறிந்து உணர்ந்தாலொழிய, நமது அறிவைக் கொண்டு அளந்து பார்க்க முயன்றால் அவன் நமது அளவைகளுக்குள் அடங்காதவன்” என்பதாகும்.

👇

உளவினில் அறிந்தால் ஒழிய (உளவு + இல் + அறிந்தால்):

👇

‘உளவு’ என்றால் ரகசியம் அல்லது நுட்பமான வழி என்று பொருள். வள்ளலாரின் மார்க்கத்தில் இது “திருவருள் காட்டும் குறிப்பு” ஆகும்.

👇

நமது வெளிப்படையான தர்க்க அறிவால் இறைவனைத் தேடாமல், அகத்தில் சிரசின் உள்ளே இருக்கும் அந்த நுட்பமான வழியை (உளவை) நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, கண்ணீர் விட்டு வேண்டினால் மட்டுமே இறைவனைக் காண முடியும் என்கிறார் வள்ளலார்.

👇

மற்று அளக்கின் அளவினில் அளவா: இதன் பொருள்:

👇

மனிதர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் காட்சி, அனுமானம், வேதம் போன்ற ‘அளவைகளை’க் (தர்க்க சாஸ்திர அளவுகோல்கள்) கொண்டு இறைவனை அளக்க முயன்றால், அவன் அந்த எல்லைகளுக்குள் பிடிபட மாட்டான். அவன் அளவிட முடியாத பேராற்றல் (அருட்பெருஞ்ஜோதி) ஆவார்.

வள்ளலார் காட்டும் ‘உளவு’ (வழி) எது?

👇

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறிப்படி இந்த ‘உளவு’ என்பது இரண்டு முக்கிய இரண்டு தூண்களைக் கொண்டது:

👇

ஜீவகாருண்யம் (எல்லா உயிர்களிடத்தும் தயவு):

👇

பசி, பிணி, துன்பம் எய்தும் பிற உயிர்களிடம் இரக்கம் காட்டி, அவற்றின் துயர் துடைப்பது. எல்லா உயிர்களிடத்தும் தயவு காட்டுதல். அதாவது, எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல். இது நமது புற வழிபாடு ஆகும்.

இரண்டாவது ; ஆண்டவரிடத்து அன்பு.

👇

ஆண்டவரித்து அன்பு வைக்க, நாம் உண்மை கடவுள் நிலையை காண வேண்டும். இதற்கு நல்ல விசாரம் செய்தலே வழி என்கிறார் வள்ளலார்.

👇

“நான் யார்? இறைவன் யார்?” என்று நமது அகத்துள் நின்று உண்மைப் பொருளைத் தேடுவது. சுருக்கமாகச் சொன்னால், முந்தைய வரியில் சொன்ன “பொதுவுணர்வை” நம்முள் கருத்தில் கொண்டு வந்து, மேற்படியாக உளவு வழியில் சென்றால் மட்டுமே அருட்பெருஞ் ஜோதியை கண்டு களிக்க முடியும். நமது லட்சியமாகிய நித்திய வாழ்விற்கான வரத்தை ஆண்டவரிடம் பெற முடியும். இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.

👇

மேற்படியாக சுத்த சன்மார்க்க வழியால் மட்டுமே பெற முடியுமே தவிர வெறும் புத்தக அறிவாலோ, தர்க்கத்தாலோ, காணிக்கை செலுத்தி பக்தி கொள்வதினாலோ இறைவனை அளக்க மற்றும் காண முடியாது என்கிறார் வள்ளலார்.

👉 (5):

“தனுகரணாதிகள் தாம் கடந்தறியுமோர் அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி”

👇

பொருள்:

“உடல், ஐம்புலன்கள் மற்றும் மனக் கருவிகள் (தனுகரணாதிகள்) ஆகிய அனைத்தையும் கடந்து நிற்கும் நிலையில் ஆன்மா பெறுகின்ற ஒரு தனிப் பெரு அனுபவமாய் விளங்குவது அருட்பெருஞ்ஜோதி” என்பதாகும்.

வள்ளலார் தெளிவாக

சொல்கிறார்:

என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை.

👉 (6) ::

உனுமுணர் உணர்வாய் உணர்வெலாங் கடந்த

அனுபவாதீத அருட்பெருஞ்ஜோதி.

இதன் விளக்கம்:

👇

உனுமுணர் உணர்வாய்:

உன்னும் + உணர்வு + உணர்வாய்.

‘உன்னுதல்’ என்றால் உள்ளே நினைத்தல் அல்லது தியானித்தல். நம் ஆன்மாவுக்குள் நாம் உன்னிப்பாகப் பார்க்கும் உள்-உணர்வாக (Inner Consciousness) இறைவன் இருக்கிறான்.

👇

உணர்வெலாங் கடந்த:

இதன் பொருள்.

👇

மனிதர்களாகிய நாம் நமது ஐம்புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றால் பெறுகின்ற கோபம், மகிழ்ச்சி, தர்க்க அறிவு போன்ற அனைத்து உலகியல் உணர்வுகளையும் (All Human Emotions and Intellect) தாண்டி நிற்கும் எல்லையற்ற பேருணர்வு.

👇

இது மற்ற மார்க்கங்களில் சொல்லப்படுகின்ற அனுபவங்களையும் கடந்து விளங்கும் அனுபவாதீதம் என் கிறார் வள்ளலார்.

🙏
🙏

நன்றி அருட்பெருஞ்சோதி.அருள் @ இளங்கோ.

👆

ஆம், வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்கம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தனி நெறி ஆகும். வணக்கம்.💐🙏

 

unmai

Channai,Tamilnadu,India