May 4, 2024
tamil katturai APJ arul

‘உணர்ந்து  உணர்ந்து” எதை உணர்ந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி -2

ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள்.

‘உணர்ந்து உணர்ந்து” எதை உணர்ந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி –2 

2) உணர்ந்து உணர்ந்து ..

இங்கு எதை உணர வேண்டும்? 

அதற்குமுன் ,

நம் வள்ளலார் பல பாடல்களில் வெளிப்படுத்தியது;

“உணர்ந்துணர்ந்து உணரினும் உணராப் பெருநிலை…” என்றும்

“உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள எட்டானை.. “என்றும், மேலும்,

“எந்த வகையிலும் உணர்ந்து கொளற்கரியதாய்..” மற்றொரு பாடலில்

“உணர்ந்துணர்ந்துணரா ஒரு தனிப் பெரும்பதி..” என்றும்,

“ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்துணர்வாம்

உருவுறச் செய் உறவே”

என்கிறார்.

ஆக,

 புறத்தில், 

படிப்பால், 

ஓதுவதால் 

கடவுளை உணர முடியாது என வள்ளலார் சொல்கிறார்கள். 

பின்பு, இங்கு எதை

 “உணர்ந்து உணர்ந்து” என்கிறார் வள்ளலார் ? 

இதற்கு அருட்பெருஞ்ஜோதி அட்டகம் 8 பாடல்களில் 3 முதல் 7 வரை பாடல்களை ஊன்றி வாசித்தல் வேண்டும்.

அப்பாடல்கள்;

#

கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்

கருவினால் பகுதியின் கருவால்

எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்

இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்

விண்முதல் பரையால் பராபர அறிவால்

விளங்குவ தரிதென உணர்ந்தோர்

அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

#

நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே

நண்ணியும் கண்ணுறா தந்தோ

திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்

திரும்பின எனில்அதன் இயலை

இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்

இசைத்திடு வேம்என நாவை

அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

#

சுத்தவே தாந்த மவுனமோ அலது

சுத்தசித் தாந்தரா சியமோ

நித்தநா தாந்த நிலைஅனு பவமோ

நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ

புத்தமு தனைய சமரசத் ததுவோ

பொருள்இயல் அறிந்திலம் எனவே

அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

#

ஏகமோ அன்றி அனேகமோ என்றும்

இயற்கையோ செயற்கையோ சித்தோ

தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ

திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ

யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ

உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்

ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

#

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்

தத்துவா தீதமேல் நிலையில்

சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்

சிவநிலை தெரிந்திடச் சென்றேம்

ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்

ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்

றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

அன்பர்களே!

ஆக, மேற்படி பாடல்களில் மூலம் நாம் உணரவேண்டியது யாதெனில்;

நாம் இது நாள் வரை,

# இந்திரிய கருவிகள் கண்டதையோ, கரண கருவிகள் கண்டதையோ,

உணர்வால் அறிவால் விளங்கியதோ,

# மாமறைகள் உரைத்ததோ,

# வேதாந்தம் சித்தாந்தம் அனுபவமோ,

# உரைத்த எதுவுமோ,

# தத்துவங்களோ, அதையும் கடந்த தத்துவாதீதமோ, சித்தியலோ இல்லை.

அப்படியெனில்,

— இவை முறையே;

# விளங்க அரிதாகிய

# இசைத்திட முடியாத

# முடிந்த நிலை மேலாகிய

# உரைத்திடாத

# எல்லாம், எல்லோருக்கும் மேலாகிய

– புதிய வடிவில்,

– தனி அனுபவமாகிய,

– இயற்கை உண்மையாகிய,

– அருட்பெருஞ்ஜோதியே

     என நாம் உணர்ந்து உணர்ந்து வேண்டுதல் வேண்டும் எனத் தெரிந்துக்கொண்டோம் இன்று.

இதை மேலும் உறுதிப் படுத்துகிறது கீழ் வரும் பாடல்:

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே 
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே 
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே 
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே 
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க 
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே 
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் 
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே

மற்றொரு பாடலில்;

அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர் 
அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம் 
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே 
காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம் 
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர் 
யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன் 
உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா 
ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.

ஆக,

வள்ளலார் வழியாகிய சுத்தசன்மார்க்கத்தை மட்டுமே சார்ந்து, மார்க்க மரபுகள் நான்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்துணர வேண்டும்.

அன்பர்களே!

இன்னொரு முக்கிய பாடல்; அது;

 

வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி

வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி

சாகாததலைஅறிந்து சின்னம் பிடி

 சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.

சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்

#

வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் – சாகாத்

தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை

நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.”

அன்பர்களே!

 உணர்ந்து கொள்ள வேண்டியதாக நாம் உறுதி எடுத்துக்கொண்டது;

# இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாமல்,சாதி சமய மதங்கள் , புராணங்கள் இதிகாச கலைகள் எதிலும் லட்சியம் வையாது, எல்லாப் பற்றுகளும் காரணமான ஆசார வகைகளை விட்டு உண்மை கடவுளை தொழுவதை மட்டுமே என உணர்ந்தேன்.

ஆனால் ,

இப்போது ‘வேகாத கால்’ என்பதையும் உணர்துதல் வேண்டும் என்றால் இந்த வேகாத கால் என்றால் என்ன? 

நிற்க!

 நம் அறிவில் இந்த வேகாத கால் என்ன என்று உணர வைக்கும் தயவு கடவுள் தயவு ஆகும்.

இதோ அதன் பாடல்;

சாகாத தலைஇது வேகாத காலாம்

தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே

போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே

பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே

ஆகாத பேர்களுக் காகாத நினைவே

ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே

தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

#

ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்

றேகாத லாற்சொன்னீர் வாரீர்

வேகாத காலினீர் வாரீர். வாரீர்

ஆக, 

சாகா கல்வியை கற்க வேண்டும் என்றும், அக்கல்வி கடவுளின் நிலை நாம் காணும் போது, கடவுள் அருளால் நமக்கு உரைக்கப்படும் என்பதை தெரிந்து, சாகா கல்வி உண்மை தெரிவிப்பதில் ஒன்றாகிய வேகாத கால் உணர்ந்துணர்வோம். 

அன்புடன்

ஏபிஜெ அருள், கருணை சபை சாலை.

அன்பர்களே!

ஒருவாறு நம் நன்முயற்சியால்

நினைந்துநினைந்து -எது என்பதையும்

உணர்ந்துணர்ந்து – எது என்பதையும்

தெரிந்துக்கொண்டோம்.

அடுத்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து எது என அடுத்த நல்ல விசாரத்தில் காண்போம்.

With thanks – apjarul.

தொடரும்…

unmai

Channai,Tamilnadu,India