ஒரு சுத்த சன்மார்க்க மாநாட்டில் அழைப்பின் பேரில் கலந்துக் கொண்ட பெரும்மதிப்பிற்குரிய உயர்திரு மடாதிபதிகள் தங்களின் ஆசி உரையில் வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை போன்ற திருவார்த்தைகளும் மற்றும் ஜீவகாருண்யம், ஆன்ம நேயம் இவைகளும் முறையே மகான்கள் மாணிக்கவாசகர், சேக்கிழார் மற்றும் சாந்தலிங்க அடிகளாரிடம் வள்ளலார் பெற்றுக் கொண்டே மகாமந்திரம் மற்றும் உபதேசதம் நல்கியுள்ளார் என்றார்கள்.
மற்றொரு மடாதிபதி அவர்கள், சுத்த சன்மார்க்கத்தில் சன்னியாச துறவு நிலை (தீட்சை?) பெற்றுக் கொள்ளுங்கள். நான் இதுவரை 451 பேருக்கு சந்நியாச துறவு நிலை கொடுத்துள்ளேன். அதில் ஒருவர் மட்டுமே உங்கள் சன்மார்க்கம் சார்ந்தவர். அதனால் நீங்கள் எல்லோரும் வள்ளற்பெருமான் வாக்குப்படி சந்நியாச துறவு பெற்றுக் கொள்ளுங்கள் என்று அருளாசி உரை வழங்கினார்கள்.
நிற்க! இதற்கான மறுப்பு உரையை நாம் இங்கு பணிவுடன் வழங்கும் கடமையில் மற்றும் கட்டாயத்தில் உள்ளோம். காரணம் அருட்பாவா? மருட்பாவா? என்று விவாதங்கள் வள்ளலார் காலத்திலேயே அவருக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு வந்தது. அதன் பின்பும் 1902 வாக்கில் மீண்டும் வந்தது. இவை அவரின் சமய ஸ்தோத்திரப் பாடல்களின் மீதே என்பது ஆச்சரியம், ஆனால் உண்மை.
அடுத்து, ஞானசபை பூசகர் மற்றும் சிலரின் ஆதிக்கத்தில் வள்ளலார் வளாகத்தில் சாத்திர சடங்குகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட காலம் இவை பல வருடங்கள் நிலைத்திருந்தது. வள்ளலாரை மீண்டும் சமயத்துக்குள் கொண்டுவரும் முயற்சி இதனால் முடிபான நெறியில் கட்டப்பட்ட சத்திய ஞான சபையில் வேத சடங்குகள் எல்லாம் புகுந்துப்பட்டுவிட்டன. நிலையத்து புத்தகத்தில் சமயநெறி சார்ந்தப் பகுதிகள் புகுத்தப்பட்டது. இவற்றையெல்லாம் எதிர்த்து சுமார் இருபது வருடங்கள் இருபத்தியேழு வழக்குகள் தொடுக்கப்பட்டு நம்மால் பெறப்பட்ட ஆணையர் ஆணைகள், நீதிமன்ற உத்தரவுகள் மூலமே வடலூர் நிலையம் மீண்டது. அங்கே மீண்டும் வள்ளலார் வழிபாட்டு விதிபடி தரிசனம், சுத்த சன்மார்க்கம் நிலைப்பெற்றது.
இந்நிலையில் தான் இந்த கடமையையும் அருளால் நாம் ஆற்ற வேண்டி உள்ளது.
அருட்பெருஞ்ஜோதி
“சுத்தம்” என்பதற்கு வள்ளலார் தரும் விளக்கத்தை நாம் ஒவ்வொருவரும் எல்லோரும் இங்கு தெரிந்துக் கொள்ள வேண்டும்.
சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில்: சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்கு பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மத அனுபவங்களைக் கடந்தது. சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை: அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம். இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலை பெறில் விளங்கும்.
சுத்த சன்மார்க்கமாவது குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதங்களினது அனுபவம் அன்று. சுத்த சன்மார்க்கம் என்பது சத் சன்மார்க்கமேயாம். சுத்தமென்பது ஒன்றுமில்லாதது. ஆதலால், சுத்தமென்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன் வந்தமையால், முன் சொன்ன சமய மதங்களைத் தாண்டினது. அதன் அனுபவங்களையும் கடந்தது.
நிற்க! ஆக,
வள்ளலார் அவர்தம் மார்க்கத்தில் சுத்த சன்மார்க்கத்தில் அருளால் கண்ட ஜோதி மற்றும் அருட்பெருஞ்ஜோதியை, சுத்த ஜோதி என்றும் சுத்த அருட்பெருஞ்ஜோதி என்கிறார் சுத்தம் என்பதற்கான வள்ளலார். தந்த விளக்கத்தை மேலே கண்டோம். சமய சன்மார்க்கத்தில் வெளிப்பட்டுள்ள ஜோதியை மற்றும் அரும்பெருஞ்ச்ஜோதியை மறுத்து கடந்து, “சுத்த ஜோதி” என்றும் “சுத்த அருட்பெருஞ்ஜோதி” எனக்குறிப்பிட்டு அதன் பின்பு தான், பாடல்களில் ஜோதி என்றும் அருட்பெருஞ்ஜோதி என்றும் அழைத்திருப்பார் வள்ளலார். சன்மார்க்கம் என்று ஒருவர் சொன்னால் சொல்பவர் சார்ந்து பார்க்க வேண்டும். அவர் சமய சன்மார்க்கமா, மத சன்மார்க்கமா அல்லது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமா என்று. அது போல் தான் அருட்பெருஞ்ஜோதி.
“சுத்த” அருட்பெருஞ்ஜோதி எனச்சுட்டும் பாடல்:
உலகப்பேறு
பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
சுத்த ஜோதி எனச் சுட்டும் சிவசிவ ஜோதி பாடல் :
சிவமய மாம்சுத்த ஜோதி – சுத்த
சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
உவமையில் லாப்பெருஞ் சோதி – என
துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
சமயப்பற்று இருந்தாலும் உண்மை நிலையை காண இடைவிடாது நன்முயற்சி செய்தார் அல்லவா. அதில் அவர் கண்ட பொது உண்மை கடவுளின் சொரூபம் தான் அருட்பெருஞ்ஜோதி ஆகும். இந்த சொரூபத்தை அகத்திலே மட்டும் தான் கண்டு அனுபவிக்க முடியும் என்கிறார் வள்ளலார். கவனிக்க:
எங்கும் பரிபூரணமாக நிரம்பி விளங்கும் ஒளியை புறத்தில் காண முடியாது என்ற உண்மை வள்ளலாருக்கு முன்பே சமய மத ஞானிகளால் வெளிப்பட்டிருக்கிறது.
ஆண்டவரின் திருக்காட்சியை அகத்தில் தான் உணர முடியும் என்பதும் வள்ளலாருக்கு முன்பே சமய மத ஞானிகளால் வெளிப்பட்டிருக்கிறது.
உலக சமய சன்மார்க்கங்களில் உயரிய மார்க்கமே சைவ சமயம். நிற்க!
அகத்தில் இறைவனை கண்டு தரிசிக்க ஞானிகள் முயற்சிக்கும் போது ஏற்படுத்திக் கொண்ட மார்க்கம் (வழிகள்) பல. சில மார்க்கங்கள் இறைவனின் அடி, முடி காண முடியவில்லை என்றும் சில மார்க்கங்கள் இறைவனின் திருக்காட்சி (பார்த்தளவில்) இங்கனமே என்றும், இன்னும் பல முடிபுகளை உலக மார்க்கங்கள் தெரிவித்துள்ளது. இதுவே அந்தந்த மார்க்கங்களின் அந்தம் எனப்படுகிறது.முக்கிய அந்தங்கள் ஆறாகும்.
ஆக, அக அனுபவத்தை பெறுவதற்கான வழி முறையில் மற்றும் பெற்றுக் கொண்ட அனுபவங்களிலும் தான் சன்மார்க்கங்கள் வேறுபடுகிறது என்பதை முதலில் உறுதி செய்துக்கொண்டு தான், வள்ளலார் வழி குறித்த விசாரணைக்கு செல்ல வேண்டும்.
இந்நிலையில் வள்ளலார் சமயம் தாண்டி செய்த அவரின் உண்மை நிலை குறித்த தேடுதலில் அருளால் அவர் கண்ட மெய் வழி எதுவெனில்;
ஆண்டவரே வந்து உண்மை தெரிவிப்பதாக உள்ளது. ஆண்டவரின் அருளைப் பெறுவதற்கு எந்தொரு கட்டுப்பாட்டு ஆசாரமில்லாத கருணையை மட்டுமே சாதனமாகக் கொண்டு, ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் நம் கருத்தில் கருதி, இடைவிடாது கருணை நன்முயற்சியில் வழிபாடு செய்யும் வழியை கண்டு அதில் பயணித்தார். அவ்வழியில் கண்ணீர் விட்டு தொழுது இரங்கி நின்றார்,வென்றார், நித்தியவாழ்வு பெற்றார் என்கிறது சுத்த சன்மார்க்கம்.
இப்ப சொல்லுங்க; ஆண்டவரே வந்து உண்மை தெரிவிப்பதாக உள்ளது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார் தானே. இதற்கு சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்பதையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார் தானே. எல்லோரும் ஏற்றுக்கொள்ளுவது என்பது தானே பொது ஆகும். ஆண்டவரே வந்து தெரிவித்தால் அது பூரணம் தானே. அது உண்மை தானே. இந்த நெறி உண்மை பொது நெறி தானே.
அவ்வளவு தான் சுத்த சன்மார்க்கம். இதுவே சுத்த மெய்ஞ்ஞான யோகா. இது ஞானிகள் தரத்தில் இல்லை. எல்லோரும் பெறக்கூடிய சாதாரண தரத்தில் உள்ளது.
இப்ப சொல்லுங்க இது மாணிக்க வாசகப் பெருமான் சொன்ன அரும்பெரும் சோதியா? உலக சமய மத ஆசார வழியா?
கருணை – பெருங்கருணை
சமய மத சன்மார்க்கங்களில் வெளிப்பட்டுள்ள கருணையையோ, பெருங்கருணை யையோ வள்ளலார் அங்ஙனமே எடுத்துக் கொள்ளவில்லை. அதை உள்வாங்கி, கடந்து வள்ளலார் கண்ட உண்மை அறிவு, உண்மை இரக்கம் உண்மை இன்பமாகிய சத்திய சொல்லே “தனிப்பெருங்கருணை” ஆகும். விசாரம் செய்வோம் உறுதிப்படுத்த.
வள்ளலார் நன்முயற்சியில் பயன்படுத்திய ஒரே சாதனம் “கருணை”.
வள்ளலார் நன்முயற்சியில் கண்ட உண்மை கடவுள் “தனிப்பெருங்கருணை”
சுத்த சன்மார்க்கத்தில் சொல்லப்படும் கருணை: சமய மத சன்மார்க்கத்தில் பயன்படுத்தப்படும் கருணை போன்றது அல்ல இது சத்தியம்.
வள்ளலார் கருணைக்கு தரும் பொருள் புதிய பொருள் எனலாம். வள்ளலார் கருணையை அறிவாக பார்க்கிறார். இந்த அறிவு புறத்திலும் அகத்திலும் எங்கும் நிறைந்துள்ள உண்மை அறிவு ஆகும். கருணைக்கு வள்ளலார் தரும் பொருள்;
“கருணை என்பது’ எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் தயவும்,
சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் விசாரம் அகத்தில் மட்டுமே. புறத்தில் எந்தொரு கடவுள் வழிபாடும், மந்திரம், தவம், விரதம் போன்ற எந்தொரு பயிற்சி முறைகளும் கிடையாது. ஆனால், நமது அக வழிபாட்டுக்கு தகுதியை உருவாக்கிக் கொள்வது புறத்தில்தான் உள்ளது. ஆம், புறத்தில் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் உணர்வை வருவித்தலும், எல்லா உயிர்களிடத்து தயவு செயலுமே நம்மை அக விசாரத்திற்கு தகுதியை ஏற்படுத்திக் கொடுக்கும். இல்லையேல் அக விசாரம் கைக் கூடாது, ஆண்டவர் அருளும் கிட்டாது. இது சத்தியம் ஆகும்.
ஆக, புறத்தில் எல்லா உயிர்களிடத்தும் தயவும், அகத்தில் ஆண்டவரிடத்தில் அன்பும் என்பதே கருணை ஆகும். (இதுஇயற்கை மற்றும் அறிவியல் சார்ந்த விளக்கம் ஆகும்)
வள்ளலாருக்கு முன்பே, மேற்படி சொல்லப்படும் வழி நமது முன்னோர் சமய மத ஞானிகளும் வியம்பி உள்ளனர் என்றாலும் அவர்களால் நீடித்த வாழ்வை தான் அவர்களின் முயற்சியில் பெறமுடிந்தது. அதற்கு காரணம், கருணை சாதனத்தை சமய ஞானிகள் கையாண்ட முறை வேறு. வள்ளலார் கருணை சாதனத்தை கையாண்ட முறை வேறு. அதற்குமுன் நாம் ஒன்றைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சைவ நெறியில் சிவனின் அருளைப் பெறுவதற்கு வகுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் மொத்தம் 28 சிவாகமங்கள் உள்ளன. அவையாவன; சிவபேத ஆகமங்கள் (10) ஆகும்.
காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம, அசிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சம, சுப்பிரபேதம் போன்றவை மற்றும் ருத்ரபேத ஆகமங்கள் (18 ஆகும்.: வீரம், நாசம், கிரணம், வாதுலம், சௌமியம், சாரோகியம், பரமேஸ்வரம், கிரீடம், சித்தம், அம்சுகம், சுப்பிரபதம், விசயம், நிஸ்வாசம, சுவாயம்புவம், தாளம், அர்ஜுனம், நிக்குவாம், சூட்சுமம் ஆகும். இவை சைவ சமயத்தின் ஆசாரங்கள் ஆகும். ஆக, இறை முயற்சில் கருணையுடன் இந்த ஆசாரங்கள் இவர்களுக்கு கட்டளையாக்கப் பட்டுள்ளது.
ஆனால், வள்ளலார் ஓர் உண்மையை அருளால் கண்டார்கள். அதுவே சுத்த சன்மார்க்கத்தின் முதன்மையான மற்றும் முக்கிய பகுதியாகும். அதுஎதுவெனில்;
கருணை நம்மிடையே விருத்தியாவதற்கு தடையாகவுள்ள பதின்மூன்று கட்டுப்பாட்டு ஆசாரங்களை கண்டு பிடிக்கிறார் வள்ளலார். இந்த பதின்மூன்று ஆசார வகைகளை விட்டு ஒழித்து, உண்மை அறிவைப் பெற்று, பொது நோக்கம் வருவித்துக் கொண்டால் தன் உண்மை கடவுளின் அருள் கிட்டும் என்கிறார் வள்ளலார். சுத்த சன்மார்க்கத்தார்கள் விட்டொழிக்க வேண்டிய ஆசாரங்கள் அவையாவன;
ஆக, விட்டொழிக்க வேண்டிய மேற்படி பதின்மூன்று சாதி சமய கட்டுப்பாட்டு ஆசார வகைகளும், உண்மை அறிவால், பொது நோக்கம் கொண்டு செய்யப்பட வேண்டிய விசாரத்தில் பயன்படுத்தும் சாதனம் “கருணை” ஆகும் என்கிறது சுதசன்மார்க்கம்..
இப்ப சொல்லுங்க, இது சேக்கிழார் மகான் சொன்ன கருணையா? சமய சன்மார்க்கச் சாதனமா?
கடவுளின் நிலையை நம் ஞானிகள் பலவாறு திருக்குறிப்புகளால் வருணித்துள்ளனர் என்று தனது முதல் விண்ணப்பத்தில் வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள். அதன் ஒரு திருக்குறிப்புத்தான் “அருட்பெருஞ்ஜோதி” என்கிறார். வள்ளலார் தனது தனி (பொது) வழியில் கண்ட கடவுளை “தனிப்பெருங்கருணை” என்றுப் பெயரிட்டு அழைக்கிறார்.
சுத்த சன்மார்க்கத்தின் மகாமந்திரம் வள்ளலாருக்கு அவர் விரும்பிய மரணமில்லா பெருவாழ்வை அருளியது. இந்த உண்மை பொது நெறியில் மட்டுமே சாகா வரம் பெற முடியும். நான் பெற்றேன் இது சத்தியம் இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியே சுத்த சன்மார்க்கம்:
அன்பர்களே, இரு ஆயிர ஆண்டுகளுக்கு முன்பு உலக ஞானிகள் பல தவ யோக நிலையில் கடவுள் மற்றும் இயற்கைப் பற்றிய குறிப்புகளை தந்துள்ளது எவ்வளவு சிறப்பு மற்றும் அறிவு செயல் ஆகும். அதன் வழியில் தொடர்ந்து உண்மை குறித்த விசாரத்தில் வள்ளலார் புதியது காண்கிறார்கள். அவர் கண்டது உண்மையாகவும் உலக உயிர்களுக்கே பொதுவாகவும் உள்ளது. அவர் கண்ட வழிபாடு ஆகட்டும், வள்ளலார் தான் அனுபவத்தில் கண்ட உண்மை கடவுளும் ஆகட்டும் இவை எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறி மற்றும் உண்மை பதி என்கிறார். ஆம், இதை எல்லோரும் ஒத்துக் கொள்ளுவர் இது சத்தியம் எனலாம். இதோ:
ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
சைவ முதலாக நாட்டும் – பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இதுவந்து பாரீர் – திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
இவரே கடவுள் இல்லை இல்லை அவரே கடவுள் என்று ஒவ்வொரு சமயங்களும், மதங்களும், மார்க்கங்களும் வியம்புகின்ற தனித்தனி கடவுளர் எல்லாமும் ஏற்று அவை மட்டுமல்ல மற்றவையையும் கொண்டு மற்றும் அவை அல்லாதனாவாயும் சொல்லப்பட்டு, ஒன்றேனும் ஒன்றாகிய ஒரு மெய்ப்பொருளே உண்மை கடவுளாக உள்ளது என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம். இது அக அனுபவமே என்கிறது.
தோழிக் குரிமை கிளத்தல்
பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
அதாவது, உலக சமய மத மார்க்கங்களில் அவற்றின் கடவுள் கொள்கையில் அவர்கள் முடிபாக உரைத்து உள்ளதை அந்தம் என்பார்கள். அவை ஆறு அந்தங்கள் ஆகும். வள்ளலார் இவற்றில் சமரசம் காண்கிறார்கள். ஆம் வள்ளலார் கண்டது சமரச சன்மார்க்கமே. இதோ சமரசம் என்பதற்கு வள்ளலார் தரும் விளக்கம்.
சமரசமென்பது யாது? எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தில் நின்று மருவியதால் சமரசமாயிற்று. இதற்கு நியாயம்:
விந்து பரவிந்து இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த விந்துவானது போலும்:
சிவம் பரசிவம் இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது போலும்;
சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இவ்விரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம்.
ஆகவே ஷடாந்த சமரசசுத்த சன்மார்க்க மென்று மருவியது.
ஆம் வள்ளலாருக்கு முன்பு வெளிப்பட்டிருந்த ஆறு அந்தங்களை வள்ளலார் சமரசம் செய்கிறார்கள். அதாவது ஐக்கியப்படுத்துகிறார்கள். ஐக்கியப்படுத்தும் முறைகளை காண வள்ளலாரின் உரைநடைப்பகுதி காண்க. ஆக,
ஆறு அந்தங்களும் ஒன்றாக ஒளிரும் இடமே சமரசம்;
ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
இந்த சமரச ஒருமையில் தான் உலகம் ஓங்கும் என்கிறார் வள்ளலார்.
இன்னும் பல உபதேசங்களை வள்ளலார் அருளியுள்ளார்கள். அவற்றில் ஒன்று;
சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது (சுத்த) சன்மார்க்கக் கொள்கை. மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.
ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் – திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி
ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை
உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
என்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
ஆறாம் திருமுறை / திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை
ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
அனுபவ மாலை
துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.
திருவடி நிலை
அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம்
பரைபரம் பரன்எனும் இவர்கள்
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
துணையடிப் பாதுகைப் புறத்தே
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
ஏத்துவன் திருவடி நிலையே.
ஆக, தத்துவங்களை கடந்த மார்க்கம்:
ஆறாம் திருமுறை / இனித்த வாழ்வருள் எனல்
தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
சமயம் மதம் இவை பொய் என வள்ளலார் சொல்லக் காரணம் என்ன?
வள்ளலார் உண்மை கடவுள் நிலை குறித்து தொடர்ந்து விசாரம் செய்கிறார்கள். ஆம் தான் பற்றுக்கொண்டுள்ள சைவ சமயத்திலேயே முடிவாக இருந்து விடாமல் உண்மையின் பூரணக் காட்சியை கண்ணால் கண்டு களிக்க நன்முயற்சி செய்தார்கள்.
நிற்க! நீங்கள் கேட்க கூடும். அவர் பற்று வைத்திருந்த சைவ நெறியில் உயர்ந்த ஞானிகளே (திருமூலர், தாயுமானவர் போன்றோர்) முடிபாக கொண்டு சைவ நெறியை காட்டி, சிவத்தை வணங்கி வந்த போது, வள்ளலாருக்கு ஏன் இப்படியொரு தேடுதல்?
தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கங்களில் கற்பனை வடிவங்களும், வீண் மந்திர ஆசாரங்களும் எனக் கண்டார் வள்ளலார். சகமார்க்கத்தில் சாதாரண யோக பயிற்சிகள் கடவுளின் உண்மையை காட்டாது என்கிறார். சன்மார்க்கத்தில் சமயமும் மதமும் உண்மையை புறம் கவியச் சொல்லவில்லை என்றும், உரைத்தவை உண்மையின் ஏகதேசமே, அதனால் சமய மதங்களை பொய் என்கிறார். நிற்க!
ஆம், வள்ளலாருக்கு ஒரு அதிதீவிர விருப்பம் ஏற்பட்டது அது எதுவெனில்; மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவததைகளை நீக்கிக்கொண்டு எக்காலத்திலும் அழியாத நித்திய தேகத்தில் வாழ விருப்பம் கொண்டதே.
ஆக, உண்மையின் பூரணக் காட்சியை கண்ணால் கண்டு களிக்கவும், நித்திய தேகத்தை பெற்று பேரின்ப பெருவாழ்வில் வாழவும் வள்ளலார் விருப்பம் கொண்டார். தன் விருப்பத்தை நிறைவேற்றும் வழியை தேட ஆரம்பித்தார்.
அந்த வழி, தான் பற்று வைத்திருந்த சைவ நெறி உட்பட எந்தொரு சமய மதங்களில் இல்லை என்றும், சமய மத ஞானிகள் அவர்கள் முயற்சியில் நீடித்த வாழ்வை தான் பெற்று இருந்தனர் எனக் கண்டார் வள்ளலார். தான் விரும்பிய மரணம் தவிர்த்து வாழுவதற்கான வரத்தை ஆண்டவரே தருவதாகவுள்ளது என்றும், அதனால் ஆண்டவரை நேரில் கண்டே, நாம் வரம் பெற வேண்டி உள்ளதையும் அருளால் அறிவிக்கத் தெரிந்துக் கொண்டார் வள்ளலார்.
ஆக, சமயமத மார்க்கங்கள் நல்காத ஒரு வரத்தை தான் வள்ளலார் சுத்த சன்மார்க்க தனிச் சாதனம் ஆசாரமில்லா கருணையில் பெற்றுத் திகழ்கிறார் எனலாம்.
மரணம் நீக்கும் மாமருந்து நல்குவது இந்த சமரசத்திலே, இங்கு மட்டுமே.
அடுத்து; மடாதிபதி அடிகள் ஆற்றிய உரையில் ஜீவகாருண்யம் மற்றும் ஆன்ம நேயம் இவைகள் அடிகள் சாந்தலிங்கம் மகானிடமிருந்து பெற்றார் வள்ளலார். ஆம், இது சரியே எனலாம். வள்ளலார் சொல்கிறார்கள்; சமய சன்மார்க்கங்களின் இயல்புகளாக உள்ளவை எவையெனில்; கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரியநிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் வாச்சியானுபவம் பெற்றுச் சொரூபானுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.
ஒருவர் எந்தொரு சமயம் மத மார்க்கங்களில் இருந்தாலும் எந்தொரு கடவுள் கொள்கையில் பற்றுக் கொண்டிருந்தாலும் அவர்களிடத்தில் இருக்க வேண்டிய இயல்புகளே ஜீவகாருண்யம் மற்றும் ஆன்மநேயம் ஆகும். இதை அவர்கள் கட்டாயப் படுத்தவில்லை, ஆனால், ஆசாரங்கள் கட்டாயம். இது வேதனை மற்றும் வேடிக்கை.
வள்ளலார் அடிப்படை ஒழுக்கங்களை சமயத்தில் பெற்றார் என்பது சரியே. ஆனால் வள்ளலார் கண்ட உண்மை கடவுள், உண்மை கடவுளின் அருளாகிய சாகா வரம் மற்றும் பூரண சித்திகள் இவையெல்லாம் வள்ளலாரின் தனி நெறி உண்மை பொது வழி மூலமே என உணர்க. வாரீர் வாரீர் வடலூருக்கே. — நன்றி APJ அருள்.
வள்ளலார் மார்க்கத்தார் பெற்றுக்கொள்ள வேண்டியது சந்நியாச துறவு நிலை என்பதற்கான மறுப்பு உரை. இதை பணிவுடன் தெரிவிப்பது
எனது கடமை மற்றும் அருளால் கட்டாயம்.
வள்ளலார் உபதேசித்தது: சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜ பழக்கமே.
ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
பரிபாஷை – இவை பலனின்மை:
அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.
சந்நியாசமும் காவி உடையும்
மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை. சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்; தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது; தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி. வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை. தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்; தயவென்பது சத்துவம், சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மலமென்பது வெள்ளைவருணம், வெள்ளை என்பது ஞானம், ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.
நன்றி, பெரும்மதிப்புகுரிய சமய சன்மார்க்கச் சொன்றோர்களே, தாங்கள் இவ்வாறு கூறியது வள்ளலாரின் உண்மை பொது நெறி குறித்த நல்ல அறிவு விசாரத்திற்கே. எல்லாம் தெரிந்தே நடக்கிறது. அருள்செயலே. இனி சுத்த சன்மார்க்க காலமே..