February 15, 2026
tamil katturai APJ arul

வடலூர் வள்ளலார் தெய்வநிலையம்அரசின் இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருப்பதே நமக்கு நலம்.இது குறித்து நல்ல விசாரம் செய்வோம்.

வடலூர் வள்ளலார் தெய்வநிலையம்
அரசின் இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருப்பதே நமக்கு நலம்.
இது குறித்து நல்ல விசாரம் செய்வோம்.

— APJ அருள் @ நா.இளங்கோ.

வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நூற்றுஆறு ஏக்கர் நிலத்தில் தர்மசாலை உட்பட எட்டுச்சாலைகளை நிறுவ விருப்பம் கொண்டவர் திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள். வருடம் 1867 ல், திருவருட்பிரகாச வள்ளலாரால் தோற்றுவிக்கப்பட்டது சத்திய தரும சாலை ஆகும். 1872 சத்தியஞான சபையை கட்டினார்கள்.
30-01-1874 அன்று இரவு, மேட்டுக்குப்பம், திருவறையில் திருக்காப்பிட்டு கொண்டு, சுத்த சன்மார்க்கப் பயனாகிய, அதாவது கடவுள் அருளால் பெற்ற ஒளி தேகத்தில் வள்ளலார் வெளிப்பட்டார்கள்.
வருடம் 1874 – 1905 :
அதன் பின்பு, வள்ளலார் தோற்றுவித்த சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை உட்பட மொத்தம் சுமார் 80 காணியிடம் / 106 ஏக்கர் இடம் வள்ளலாருக்கு பின்பு சன்மார்க்க அன்பர்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. வள்ளலாரால் விலக்கி வைக்கப்பட்ட வேத சமயப்பூசாரி மீண்டும் நிலையத்தில் பூசை செய்ய நுழைந்து, பூசாரியானார்.
சில வருடங்களில், தெய்வ நிலையத்தின் பல ஏக்கர் நிலங்களுக்கு கிஸ்து (வரி) கட்டாமல் (???) விடப்பட்டுள்ளது. இதனால் பல இடங்கள் மீண்டும் அரசுக்கு மாறியுள்ளதை பதிவேட்டில் காண முடிகிறது.
நிலையத்தின் பல ஏக்கர் இடங்களுக்கு பராமரித்து வந்தவர்கள் கிஸ்து/ வரியை கட்டத் தவறிவிடுகிறார்கள் (அல்லது திட்டமிட்டே கட்டாமல் விடப்படுகிறது.??). இதனால் வள்ளலார் பெயரில் இருந்த பல ஏக்கர் நிலங்கள் அரசுக்கு போய் விடுகிறது.. இதை மீண்டும் மீட்காமல், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அன்றைய பூசாரி, அதே இடங்களை பல ஏக்கர் நிலங்களை அரசிடமிருந்து தனக்கு, குடும்பத்துக்கு பெற்றுக் கொள்கிறார். இது போக பல ஏக்கர் இடங்கள் இவராலும் மற்றச் சிலராலும் ஆக்கிரமிக்கவும் படுகிறது. அதன்பின்பு இடங்களை சன்மார்க்கச் சங்கங்களே அவரிடமிருந்து விலைக்கு பெற்றுள்ளனர். இப்படியாக 1905 ஆம் ஆண்டுக்குள் சுமார் 34 ஏக்கர் நிலங்கள் பல பெயரில் பட்டாவாக மாறியுள்ளது எனப் பார்க்க முடிகின்றது. ஆக, 1874 — 1905 வருடங்களிலேயே சுமார் முப்பது ஏக்கர் நிலங்கள் சிலர் பெயரில் மாற்றம் ஆகியுள்ளதை காண முடிகிறது.
வருடம் 1938 :
அன்பர்களால் தொடர்ந்து “பராமரிக்க முடியாத நிலையில் இருந்து வந்த” மேற்படி நிலையம் 1938 ஆம் ஆண்டு, ஆங்கில ஆட்சி காலத்தில், இந்து சமய அறநிலையத்துறையிடம் வருகிறது. நிற்க!
அறநிலையத்துறை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் போது நிலையத்திற்கு சொந்தமாக இருந்த இடங்கள் 72 ஏக்கர் மட்டுமே. அதாவது அரசுக்கு வரும் முன்பே, ஒரு சிலரால் 34 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருந்தது என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிற்க ! நிலங்கள் மட்டும் அபகரிக்கப்படவில்லை. நிலையத்தில் நடைப்பெற்ற வழிபாடுகளும், வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க நெறிக்கு முரணாகவே இருந்தது. நிலையத்தில் நியமிக்கப்பட்ட சிவாச்சாரியார் அவர்களால் வேத ஆசாரங்கள் படி வழிபாடுகள் மாற்றப்பட்டிருந்தது. முரணான இந்த பூசைகளை பெரியளவில் அன்றைய அன்பர்கள் எதிர்த்ததாக தெரியவில்லை.
ஆங்கில ஆட்சியில் பல வருடங்கள் இப்படியாகவே தொடர்கிறது. சுதந்திரம் அடைந்து, பல வருடங்கள் கழித்து, மிக சிலரே இதை எதிர்த்து உள்ளனர். துறவி திரு கந்தசாமி அய்யா அவர்கள் இது விசயமாக கோர்ட் வரை சென்றுள்ளார்கள். ஆனால் அவர் மறைவுக்கு பின்பு வேறு எந்த ஒருவராலும் சரியான முறையில் (வழக்கிட்டு) எதிர்க்கப்படவில்லை.
வருடம் : 1985
சபையின் பூசாரியாக இருந்த ஒளி சிவாச்சாரியார் மற்றும் சிலர் சுமார் நான்கு முதல் ஆறு ஏக்கர் நிலங்களை சில 1967 ஆம் ஆண்டு ஆவணங்களை தாசில்தாரிடம் காட்டி, தங்கள் பெயருக்கு பட்டா போட்டுக் கொண்டனர். இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது எங்கள் (2012) வழக்குகளே. அவர்கள் காட்டிய ஆவணம் சரியானது அல்ல எனச்சொல்லி பட்டாவை ரத்து செய்துக் கொடுத்தோம். அப்பீல் சென்று அவர்கள் மீண்டும் பட்டாவைப் பெற்றுள்ளனர். அதை எதிர்த்து தற்சமயம் அரசு மேல் முறையீடு செய்துள்ளது. (CASE NO.WA.2780/2024)
நமது சட்டப் போராட்டம் 2005 – 2025 :
நமது முயற்சியில் (2005 லிருந்து) என் துணைவியார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் துணையுடன் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. சபை வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்புகள் மூலமே முரணான வழிபாடுகள் ஞான சபையில் தடுக்கப்பட்டன. சுமார் ஆறு ஏக்கர் நிலங்களும் மீட்டுக் கொடுக்கப்பட்டன. ஆனால் நில வழக்கில் அப்பீல் இன்றும் நிலுவையில் உள்ளது.
நமது வழக்குகள் (2006) மூலமாகத்தான், அன்றைய நிலைய அதிர்காரி மற்றும் அறங்காவலர் குழு, வள்ளலாரின் தனி நெறி குறித்து தெளிவாக அப்போது தான் அறிகிறார்கள் எனலாம். முதலில் நமக்கு வேண்டிய தகவல்களை (2004-2005) தர மறுக்கிறார்கள்.அதுவும் அங்கு இருந்த (கணக்குபிள்ளை எனபர்) ஒரு ஊழியர் மிகவும் முட்டுக்கட்டையாக இருந்தார்.
வேத சமயப்பூசாரியின் செயலை கண்டுக்கொள்ளாமல் இருந்த அன்றைய அறங்காவலர்கள், பின்னாளில் நமது வழக்குகளில் நமக்கு சாதகமாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்பு, நமது எல்லா வழக்குகளிலும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நமக்கு சாதகமாகவே கோர்ட்டில் வாக்கு மூலங்களை தாக்கல் செய்கின்றனர். சுத்த சன்மார்க்க நெறிக்கு முரணாக பூசை செய்த சிவாச்சாரியாருக்கு எதிராகவே வாதங்களையும் அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதுவே (சத்தியம்) உண்மை.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்கள் நமக்கு சாதகமாக (2006) சத்திய ஞான சபை வழக்கில் தீர்ப்பு கொடுத்தார்கள். அதன்பின்பு அப்பீலிலும் திரு ஆணையர் அவர்கள் வள்ளலாரின் வழிபாடு விதிகளை உறுதிபடுத்தி, நமக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்து, வேத பூசாரியின் அப்பீலை தள்ளுபடி செய்தார்கள்.
ஆக, தெய்வ நிலையத்தின் நிலங்கள் இது நாள் வரை காப்பாற்றி வந்தது “இந்து சமய அறநிலையத்துறையே” ஆகும். இத்துறைக்கு நிலையம் வந்த பிறகு ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பதற்கும் நடவடிக்கையை துறை எடுத்துள்ளது. வழக்குகள் நீதிமன்றத்தில் இன்று நிலுவையிலுள்ளது.
அன்பர்களே !
இந்து சமய அறநிலையத்துறை என்பது ஒரு அரசு துறையாகும். அரசு என்பது மக்களின் ஜனநாயக அமைப்பு ஆகும். இதற்கான தனிச் சட்டத்திட்டங்கள் உண்டு. சாதாரண ஊழியர்கள் முதல் மேல்நிலை அதிகாரிகள் பலருண்டு. அரசு துறையிடம் ஒரு நிலையம் இருக்கும் போது, அந்நிலையத்தில் தவறுகள் நடக்கும் பட்சத்தில், நாம் எளிதான முறையில் துறையின் அதிகாரிகளிடம் வழக்கு தொடுக்க சட்டம் வழி வகுத்துள்ளது. அடுத்து, நீதிமன்றம் செல்லவும் H.R. & C.E. ACT ல் இடம் உள்ளது. ஆனால் நாம் தான் முறையிட வேண்டும். திரு துறவி கந்தசாமி அய்யாவை தவிர, வேத பூசாரின் முரணான செயல்களை H.R. & C.E. சட்டத்தின் வாயிலாக யார் தட்டிக் கேட்டார்கள்? இன்று H.R. & C.E கீழ் நிலையம் கூடாது என்று இன்றுச்சொல்பவர்கள் சுத்த சன்மார்க்கத் தனி நெறியை நிலை நாட்ட தொடுத்த வழக்குகள் என்ன?
அன்பர்களே, எங்களின் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுப்பதற்கும், அதில் அனைத்திலும் வென்றதுக்கும் ஒரு முக்கிய காரணம், வள்ளலார் நிலையம் அரசு கட்டுப்பாட்டில் இருந்ததினால் மட்டுமே. எல்லா வழக்குகளிலும் பூசாரி செயலுக்கு எதிராகவே அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். (பூசாரி வள்ளலாரைப் பற்றி வைத்த விஷயங்களை பற்றி இங்கு வேண்டாம். நமது சப்ஜெக்ட் மாறிவிடும்)
நிற்க! சட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் பங்கு என்ன என்றுத் தெரியுமா? நிலையத்தின் சொத்தை பாதுகாப்பது, நிர்வாகத்தை கண்காணிப்பது மட்டுமே. மற்றப்படி நெறிப்படி வழிபாடு, நிலைய மேன்மைத் திட்டம் இதற்கு அதிகாரம் கொண்டது அரசால் நியமிக்கப்படும் “அறங்காவலர் குழுவே”. இதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
இதன் அடிப்படையில் கூட நாம் போட்ட வழக்குகள் மூன்று உண்டு. அதில் நம் கோரிக்கை யாதெனில்; ஐந்து அறங்காவலர்களும் புலால் உண்ணாதவர்களாக இருக்க வேண்டும். அறங்காவலர்கள் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும். ஐந்தில் மூன்று பேர்கள் வடலூர் நிலையத்தின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திலிருந்து தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். இதுவே எங்கள் வழக்கு. ஆனால், நாம் யாரும் நிலையத்தின் வள்ளலார் ஆரம்பித்த சங்கத்தை மேன்மப்படுத்தவில்லை. மிகக்குறைவாகவே உறுப்பினர்கள் அப்போது இருந்தனர். சரி விசயத்திற்கு வருவோம்.
இப்படி தான் நாம் போராட வேண்டும். அதாவது, அறங்காவலர் பதவிகள் சுத்த சன்மார்க்கிகளுக்கு வழங்க வேண்டும் என்று கேட்பதை விட்டு விட்டு, மொத்த நிலையத்தையும் எங்களிடம் கொடு என்றால்???
வள்ளலார் நிலையங்கள் இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து அகற்றிவிட்டு, நிலையத்தை நடத்த யார் கையில் கொடுக்க, என்ன திட்டம் உள்ளது? அது குறித்து எந்தொரு தெளிவான அறிக்கையும் இல்லையே? தலைமை சங்கமா? தலைமை சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ? முதலில் ஆரம்பித்தவர்கள் மீது எல்லோரும் ஒரு குற்றச்சாடை சொன்னார்களே? அந்த குற்றச்சாட்டு என்ன? இப்ப செயல்படும் தலைமை சங்கத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளாமல் வைக்கப்படும் குற்றச்சாட்டு என்ன? அடுத்து, சமயம் பொய், மதம் பொய், வேத ஆகமம் கூடாது என்ற சுத்த சன்மார்க்கக் கோட்பாட்டுக்கு நேர்மாறாக சமய ஆசாரத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களும் மாவட்ட சங்கங்களில், ஏன், தலைமை சங்கத்தில் உள்ளனரே. அவர்களிடம் வடலூர் நிலையம் சென்றால் என்னவாகும்?
அடுத்து; வள்ளலார் கிருஷ்ணர் அவதாரம் போல், வள்ளலார் சனாதனத்தின் உச்சம், வள்ளலாருக்கு விழா எடுத்து அங்கு வெளியிட்ட காவி உரையில் திருவருட்பா, வள்ளலாரை பல ஆயிர சிலைகள் செய்து சமயக் கோவிலில் வைத்து வரும் செயல், சுத்த சன்மார்க்க விழா என்றுச் சொல்லி ஆதினங்களும் ஜீயர்களும் அழைத்தல், சுத்த சன்மார்க்கச் சங்கங்களை, பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணா மலை, காசி, கைலாஸ், போன்ற சமய தலங்களில் மற்றும் வளாகத்தில் நடத்துதல், வள்ளலாரால் விட்டுவிடச் சொன்ன சமய ஸ்தோத்திர திருவருட்பாக்களை அச்சிடுதல், ஓதுதல், நமசிவாய என்றுச் சொல்லும் சங்க நிர்வாகிகள், நமக்கில்லை வள்ளலாருக்கு மட்டுமே சாகாநிலை சாத்தியம் என்றுச் சொல்லும் சங்க நிர்வாகிகள், இன்னும் காவி வேஷ்டி, ருத்திராட்ச மாலை, விபூதி குங்குமம் பொட்டு வைக்கும் சங்க நிர்வாகிகள், இப்படி பல வகையில் வள்ளலாரின் கட்டளைக்கு எதிராக செயல்படுவர்கள், இவர்கள் உள்ளனரா இல்லையா ?
இவர்கள் நாளை சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் ஆவார்களா மாட்டார்களா ? அவர்கள் கையில் வடலூர் நிலையம் சென்றால்……???? (இங்கு யாரையும் மதிப்பு குறைத்தோ, குற்றம் சொல்லியோ, இதை குறிப்பிடவில்லை. நாங்கள் எல்லோரையும் வயதின் அடிப்படையில், அவர்களிடமுள்ள ஜீவகாருண்ய உணர்வு அடிப்படையில் மிக்க மரியாதையை அவர்களுக்கு கொடுப்பவர்களே. ஏன்? சமயத்திலும், மதங்களிலும் உள்ளவர்கள் பலர் மதிக்கக்கூடிய பண்பாளர்கள் உள்ளனர். ஆனால்.. அது வேறு. சுத்த சன்மார்க்கத் தனி நெறி சம்பந்தப்பட்டது வேறு. கடவுள் ஒரு நல்ல நம்பிக்கையே. ஆனால் நம் மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம் இல்லையா) உங்களுக்கு தெரியுமா?
தனித் தன்மையோடு திகழ்ந்திருந்த “இராம கிருஷ்ண மடங்கள்” இன்று, சீரடி சாய் பாபா கோவில்கள், இவைகளில் மாற்றங்களை காணலாம். மதுரையில் அன்று ஜைனக் கோவிலாக இன்று பலி கொடுக்கும் பாண்டி கோவிலாக, வள்ளுவருக்கு காவி உடை, ஏன், நேற்று வரை தனித்தன்மையோடு திகழ்ந்த பாண்டிச்சேரி ஆசிரமம், இன்று அதன் நிலை?, இதன்வரிசையில் நாளை, வள்ளலாரும், வள்ளலார் நிலையமும் ……????.
நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க தனி நெறியில், ஆசாரமில்லா கருணை வழிபாட்டில், நாம் பயணித்தாலே போதும், அப்போது தெரியவரும் நம் அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்தவர்கள் யார் என்று. உண்மைதானே. சுத்த சன்மார்க்க பொது நெறியில் தான் நாம் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட முடியும். இது வள்ளலார் கட்டளை.
சரி தான் சார், இப்ப நாம் கேட்கவோ அல்லது போராடவோ எதுவுமே இல்லையா? அப்படி யார் சொன்னா? நிறைய உள்ளது. அவைகள்:
 நியமிக்கப்படும் அறங்காவலர்கள் சுத்த சன்மார்க்கத்தில் நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும்.
 வடலூரில் வள்ளலாரால் ஆரம்பிக்கப்பட்ட, இன்றும் அரசால் இயக்கப்பட்டு சந்தா பிரித்து வரும், “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமே” நம் எல்லோரின் தலைமை சங்கம் ஆகும். இதில் தான் நாம் சந்தா செலுத்தி உறுப்பினர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
 மேற்படி சங்கத்தில் உறுப்பினாராக விருப்பம் உள்ளவர்கள் வள்ளலாரின் மூன்று கட்டளைகளை உறுதி மொழியாக தர வேண்டும். அவையாவன;
–கொலை புலை தவிர்த்துவன்,
–காமம் குரோதம் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால தடுத்துக் கொள்ள உறு‌தி செய்கிறேன்,
–சமய மத மார்க்கங்களில் முற்றும் பற்றற கைவிட்டவன.
–வள்ளலார் கட்டளைப்படி பதின்மூன்று ஆசாரங்களை விட்டொழித்து உண்மை அறிவால் நல்ல விசாரம் செய்து, பொது நோக்கத்தை வருவித்துக் கொள்வேன். நித்திய வாழ்வு பெறுவதே லட்சியம்.
 மேற்படி வள்ளலார் ஆரம்பித்த சங்கம் அருளால் சரியாக செயல்பட்டு நிலைபெறும். இதன் உறுப்பினர்களிலிருந்து குறைந்தது மூன்று அறங்காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும்.
 வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைப்படியும், நீதிமன்றத்தீர்ப்புகள் அடிப்படையில் நிலையம் பிறழாது நடைப்பெற “நிர்வாகத் திட்டத்தை” தயார் செய்யப்பட வேண்டும்.
 வள்ளலார் விரும்பிய மீதமுள்ள சாலைகளை நிறுவி தர வேண்டும்.
 ஒரு சாலையில் “சுத்த சன்மார்க்க நன்முயற்சி பயிற்சியை” மூத்த சன்மார்க்க அடியார்கள், சாதுக்கள் மூலம் வழங்க வேண்டும்.
 மற்றொரு சாலையில் தினம் மூத்த சன்மார்க்கச் சான்றோர்கள் கொண்டு “சொற்பொழிவுகள் மற்றும் விண்ணப்பங்கள்” வாசிப்பு நடக்க வேண்டும். சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள், திரு அகவல் பாராயணம் தினம் காலை மாலை வேண்டும்.
 மற்றொரு சாலை அமைப்பில் வள்ளலார் சொல்லியப்படி அமைதியாக வடக்கில் அமர்ந்து தெற்கு நோக்கி அக விசாரத்தில் இருக்க “சுத்த மெய்ஞ்ஞான யோக கூடம்” சுமார் 200 பேர் அமருமாறு வேண்டும்.
 நூல்கள், புத்தகங்கள் எப்பொழுதும் கிடைக்கும் வண்ணம் பெரிய புத்தக கூடம் வேண்டும். மூத்த சன்மார்க்க பெரியோர்களின் ஒப்புதல் பெற்ற எங்கள் அன்பர்களின் புத்தகங்களும் கிடைக்க வழி வகை வேண்டும்.
 ஏழைகள், பெரியோர்கள், சிறுவர்கள் வளாகத்தில் அமர்ந்து செல்ல வசதிகள் வேண்டும். மதியம் உட்பட எல்லா ஜோதி தரிசினத்தை மழை வெயில் இவையால் தடைபடாது வரிசையாக நின்று செல்ல பாதை (கோயில்களில் உள்ளது போல்) வேண்டும்.
 ஜோதி பார்க்க நிற்குமிடம் உடனே சரிப்படுத்த வேண்டும்.
 சத்திய தர்ம சாலையில் வழங்கப்படும் உணவு, இடம் மேன்மைப்படுத்தி தர வேண்டும். குறைந்தது 500 பேர் அமரும்படி விரிவுபடுத்த வேண்டும்.
 வள்ளலார் காட்டியது போல் ஜோதி தரிசனத்தை எட்டு கதவுகளும் திறந்து காட்ட வேண்டும். வள்ளலார் உண்மை செய்விக்கும் இடம் என்பதால் தினம் காலை, மாலை, இரவு மூன்று வேளையும் ஜோதி வழிபாடு நடைப்பெற வேண்டும்.
 எங்கள் அன்பர்கள் சாலை உட்பட நிலையங்களில் தொண்டாற்ற முறையான அனுமதியை அறங்காவலர் குழு தர வேண்டும்.
 வள்ளலார் மார்க்கத்தில் சிறப்பு நிறங்கள் வெண்மை பொன்மை இந்த வர்ணங்களில் தான் நிலையச்சுவர்கள் வர்ணம் பூச வேண்டும், சபை சாலை விரிவுப்படுத்த வேண்டும். சுற்றுச்சுவர் அமைத்து வளாகம் சுத்தமாக இருக்க வேண்டும். நிலையத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு, வள்ளலார் ஆரம்பித்த சங்கத்திற்கான தனி கட்டிடம் வேண்டும்.
 சந்தை போல் வியாபார ரீதியில் கடைகளோ, சங்க அமைப்பு பெயரில் கூடாரமோ, ராட்டினங்களோ, எதுவும் வளாகத்தினுள் கூடாது. அடிப்படை அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.
 அங்குள்ள ஏழைகள் மற்றும் எந்தொரு ஆதரவுமில்லாதவர்கள் கருணை அடிப்படையில் அவர்களுக்கான ஓர் இல்லம் அமைக்க வேண்டும்.
 வள்ளலாரின் மூலிகைகள் குறித்த ஆய்வும், ஏழைகளின் பிணி துன்பம் போக்கும் வகையில் ஓர் மருத்துவமனையும் அமைக்க வேண்டும்.
 (மேற்படி வைக்கப்பட்ட கோரிக்கைகள் பாதிக்கு மேல் அரசு செய்து கொடுக்க ஏற்கனவே சர்வதேச மையத்திட்டத்தில் நிதி ஒதுக்கி உள்ளது என இங்கு சத்தியமாக தெரிந்துக்கொள்ள வேண்டும். அரசுக்கு நன்றி.)

 மேதகு தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறை தான் நமது திருவருட்பிரகாச வள்ளலாருக்கு பல பெருமைகள் செய்தாலும், எங்களின் நியாயமான முக்கிய கோரிக்கையை ஒன்று உள்ளது;
அது எதுவெனில்;
 “வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறியானது சாதி, சமயம், மதம், வேத ஆகமம், புராண இதிகாசங்கள் ஆசாரங்கள் எதன் கீழும் வராது விளங்கும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தனி நெறி என்பதை அரசு அறிவிக்க வேண்டும். ஆணையர் மற்றும் நீதிமன்றம் வழக்குகளில் சுத்த சன்மார்க்கத் தனி நெறி உறுதிபடுத்தப்பட்டிருந்தாலும், மேதகு அரசின் அறிவிப்பு வேண்டும்.

எனவே,
எல்லா வகையிலும், நமது வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருப்பதே நமக்கு நலம். -– நம்மவர்களின் மேலான பார்வைக்கு பணிவுடன்: APJ அருள்

அன்பர்களே !வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம், எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்கும். அதே நேரத்தில், சுத்த சன்மார்க்கத்தின் எக்காலத்தும் முக்கியத் தடைகளாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்றும், இவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களில் மற்றும் வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களில் நம் மனம் பற்றக்கூடாது. என்கிறார் வள்ளலார்.

ஆசாரமில்லா கருணை தனி நெறியாம், சமரச சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி ஒன்றே உலகமெங்கும் வேண்டும், அதனால் இது விரைந்து பரவிட அரசே முன் வந்து தனி வாரியம் அமைக்கும் காலம் விரைவில்.
உண்மை, நம்புவோம் – ஏபிஜே அருள் 8778874134


எல்லாம், எல்லோரும் கடவுளின் அம்சங்களே.
நம் ஆன்ம நேய சகோதரர்களே. எல்லா சமய மதங்களும் கடவுளை போற்றி நல்லதையே சொல்லுகிறது. ஆனால் சமரச சுத்த சன்மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
🙏

unmai

Channai,Tamilnadu,India