நம்மவர்களா? யோசியுங்கள், இது முக்கியம்.வணக்கம். ஏபிஜே. அருள்
எல்லாம், எல்லோரும் கடவுளின் அம்சங்களே. இரக்கமும், சுத்த சன்மார்க்கக் கோட்பாடுகளும் இவை பெற்றிருப்பவர்கள் நம்மவர்கள். இன்று வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி உலகில் விரைந்து பரவி வருகிறது. இந்த கருணை நெறி பரவினால் சாதிகளும், வருணாசிரமம், வேத ஆகமங்களும் சமய கட்டுப்பாட்டு ஆசார வகைகளும் இல்லாது போய்விடும்.
அதனால், வள்ளலார் இருந்த காலத்திலிருந்தே எதிர்ப்புகளும், பொய் பிரச்சாரங்களும், வீண் வாதங்களும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத் தனி நெறி மீது தொடுக்கப்பட்டே வருகிறது. இந்த தாக்குதல் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ நடைபெறுகிறது.
இதில் மறைமுக தாக்குதல் என்பது; நம்மவர்கள் போல் காண்பித்துக் கொண்டு, எப்படியெனில்; வேத ஆகமம், சாதி, சமயத்தில் பற்றுள்ளவர்கள் இவர்கள், சுத்த சன்மார்க்கம் என்றப் பெயரிலேயே விழா எடுப்பது, கூட்டம் நடத்துவது, இவை போன்று செய்வார்கள். இவர்கள் தங்களின் சொற்பொழிவில் அல்லது கட்டுரைகளில் வள்ளலாரை ஜீவகாருண்யத்தில் மட்டுமே வெளிப்படுத்துவது, வள்ளலாரையே தெய்வமாக்குவது, சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவது இவை போன்றவைகளை இவர்கள் செய்வார்கள்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கருணை நெறியை விரும்பும் மற்றும் தழுவும் நம்மவர்கள் இவர்களை அடையாளம் எப்படிக் காண்பது? என்பதே இன்றைய விசாரம். அன்பர்களே!
உண்மையான சுத்த சன்மார்க்கக் கூட்டமெனில்;
அங்கு மூன்று விசயம் இருக்க வேண்டும்.
1) அச்சங்கத்தினர் ஒவ்வொருவரும் வள்ளலாரால் வகுக்கப்பட்ட தகுதியை, தாங்கள் பெற்றுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலத்தை கொடுத்திருக்க வேண்டும். சங்கங்கள் அதை பெற்றிருக்க வேண்டும்.
2) வள்ளலாரால் செய்து தரப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஒழுக்கம், கூட்டத்தில் ஆண்டவரை நினைந்து எல்லோராலும் விண்ணப்பிக்க வேண்டும்.
3) நித்திய வாழ்வைப் பெற்றுத்தரும் கருணையின் விருத்திக்கு தடையாக உள்ள பதின்மூன்று ஆசாரங்களை விட்டொழித்துக் கொண்டு, உண்மை அறிவைப் பெற்று, பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் லட்சியமாகும். இதை எழுத்தாலும், சொல்லாலும் மற்றும் செய்கையாலும் வெளிப்படுத்துவது என் கடமை, என்ற உறுதிமொழியை அளித்தல் வேண்டும்.
ஆம், இந்த மூன்றும் உண்மை பொது நெறியாம் சமரச சுத்த சன்மார்க்கத்தின் சத்திய கொள்கையை உறுதிச் செய்யும். இந்த மூன்று அடிப்படை விசயத்தை மறைத்துக்கொண்டு மாநாட்டையோ, விழாவையோ, கூட்டத்தையோ நடத்தினால், அவர்கள் நம்மவர்கள் அல்லர். அன்பர்களே!
உண்மை பொது நெறியை தெரிந்துக்கொள்ள எல்லோரும் வர வேண்டும், மக்களை வரவேற்க வேண்டும், வாரீர் வாரீர் என அழைக்க வேண்டும்.
ஆனால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை நம்மவர்கள் தான் நடத்திடக்கூடும். இது வள்ளலாரின் கட்டளை.
மேலே உள்ள மூன்றும் இங்கே கீழே தரப்பட்டுள்ளது. நன்றி. நல்ல விசாரம் தொடர்ந்து செய்வோம். அன்புடன் ஏபிஜே. அருள்.
1.சுத்த சன்மார்க்கத்தார்கள் பெற்றிருக்க வேண்டிய மூன்று தகுதிகள்:
(வள்ளலாரின் சத்திய வாக்கியம் : பக்கம் 411)
- சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம், மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவன் என்றும்,
- காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவன் என்றும்,
- கொலை புலை தவிர்த்தவன் ஆவேன் என்று உறுதிமொழி செய்கிறேன்.
- எல்லோரும் எடுத்துக் கொள்ளவேண்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க விண்ணப்பம். (வள்ளலாரின் சத்திய வாக்கியம் : பக்கம் 644) :
“எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய
ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!”
3.சுத்த சன்மார்க்கத்தார்களின் கடமையையும் லட்சியத்தையும்
(எழுத்தால், சொல்லால், செய்கையால் உறுதி செய்தல்)
( வள்ளலாரின் சத்திய வாக்கியம் : At page 418);
தயவை விருத்தி செய்வதற்கு தடையாக இருக்கும்
சமய ஏற்பாடு சாதி ஏற்பாட்டு ஆசாரங்களாகிய;
சாதி ஆசாரம், குல ஆசாரம், ஆசிரம ஆசாரம், லோக ஆசாரம், தேச ஆசாரம், கிரியை ஆசாரம், சமய ஆசாரம், மத ஆசாரம், மரபு ஆசாரம், கலை ஆசாரம், சாதனம் ஆசாரம், அந்தம் ஆசாரம், சாஸ்திர ஆசாரம் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து போகச் செய்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தைப் பெற்று, பொது நோக்கத்தை வருவித்துக் கொள்வது என் கடமை. ஆண்டவரின் அருளை பெறுவதே என் லட்சியம். இது சத்தியம்.
(கூட்டங்களில் மட்டுமில்லை சங்கங்களும் மேற்படி தகுதி மற்றும் ஒழுக்க உறுதிமொழியை, விண்ணப்பத்தை உறுப்பினர்களிடமிருந்து பெற வேண்டும்.)
நன்றி: ஏபிஜே அருள் @ இளங்கோ. 8778874134.