December 9, 2025
tamil katturai APJ arul

முதல் ஐந்து திருமுறைகளை அப்படியே ஓதலாமா? சமய ஸ்தோத்திர அருட்பா கொண்டு தேர் இழுக்கலாமா?தலைமை சங்கம், சான்றோர்கள் முன் வரவேண்டும்

 
முதல் ஐந்து திருமுறைகளை அப்படியே ஓதலாமா?
👉 சமய ஸ்தோத்திர அருட்பா கொண்டு தேர் இழுக்கலாமா?
👉 தலைமை சங்கம், சான்றோர்கள் முன் வரவேண்டும்
– APJ அருள்.
👇👇👇👇
# திருவருட்பிரகாச வள்ளலார் சைவ சமயத்தில் பற்றுக் கொண்டிருந்தார்கள். பல சைவ சமயத் தலங்களுக்கு சென்று, சமய கடவுளர்களைப் போற்றி, நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரப் பாடல்கள் பாடியுள்ளார்.
# சமயப்பற்று காலத்திலேயே அவரிடம் ஒரு விருப்பமும், ஒரு தேடுதலும் இருந்து வந்தன.
சமய கட்டுப்பாட்டு ஆசாரத்தில் அவர் தள்ளியே இருந்து வந்தப் பயனால் அவரின் தேடுதலில் அவர் முன்னேற்றம் கண்டார்.
👉 அவரின் விருப்பம் எதுவெனில்;
மரணம் உட்பட எல்லா அவத்தைகளையும் நீக்கிக் கொண்டு, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொள்ளுதல்.
👉 அவரின் தேடுதல் எதுவெனில்; உண்மை கடவுளின் நிலை கண்டு தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுதல்.
# அவரின் விருப்பமும் தேடுதலின் விளைவு, அவர் வைத்திருந்த சைவ சமயப்பற்றை கைவிடுகிறார். சைவ சமயம் மட்டுமில்லை உலக சமய மத மார்க்கங்கள் அனைத்தையும் கைவிடச் சொன்னவர் வள்ளலார். மேலும், அவற்றின் ஆசாரங்களை விட்டு ஒழித்துக்கொள்ள சொல்கிறார். உலக ஆசாரங்கள் எதனிலும் பற்றுக் கூடாது என்கிறார். உண்மை கடவுளை தொழுவதே கடமை என்கிறார். “உண்மையை இறைவனே வந்து தெரிவிப்பதாகவுள்ளது” என்கிறார். ஒவ்வொருவரும் கண்ணீர் விட்டு, கருணை நன்முயற்சியில் இடைவிடாது வேண்டச் சொல்கிறது வள்ளலாரின் முடிவான “சுத்தசன்மார்க்கம்”.
கடவுளின் அருளை பெற்றுத்தரும் கருணை, அதன் விருத்திக்கு தடையாக உள்ள (பதின்மூன்று) சாதி மற்றும் சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை விட்டு ஒழித்துக்கட்டி, உண்மை அறிவு ஆசாரத்தால் விசாரம் செய்து பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ள வேண்டும். இதுவே “சுத்த சன்மார்க்கக் கொள்கை.”
நிற்க! இதுவே வள்ளலாரின் ஆன்மிகப் பயணத்தில் ஏற்பட்ட திருப்பம். இதை முதலில் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
வள்ளலார் தான் இருந்த சமயப்பற்றுக் காலத்தை குறித்து மற்றும் இயற்றிய சமய ஸ்தோத்திரப் பாடல்கள் பற்றி வள்ளலார் சொன்னது என்ன? எனப்பார்க்கும் போது;
👇
“…..இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற – திருவருட்பாவில் அடங்கியிருக்கிற – ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது….”
மேலும்;👇
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.
மேலும்;👇
நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது….”
🙏
மிகத்தெளிவாக வள்ளலார் எழுதி குறிப்பிட்டுள்ளார்.🙏
• நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை
• ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
• இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.
• நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.
• சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.
• சமய ஆசாரம் உட்பட பதின்மூன்று ஆசாரங்களை விட்டொழியுங்கள்.
அன்பர்களே,
சாதி சமயம் வேத ஆசார வகைகள் இவைகள் குறித்து பல நூறுப்பாடல்கள் பாடியுள்ளார் வள்ளலார். வள்ளலார் சமய மதப்பற்றை கைவிட்டுவிட்டு ஒரு புதிய மற்றும் பொது மார்க்கம் கண்டார் என நீதிமன்றமும் தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது.
நிற்க!
👉 இந்நிலையில் வள்ளலாரை மீண்டும் சமயப் பற்றாளராக காட்ட முயல்வது ஒரு நியாயமான செயல் ஆகாது. அப்படித்தானே.
👇
வள்ளலார் இயற்றிய பாடல்களை அச்சிட்டு வெளியிட வேண்டுமென பக்தர்கள் சிலர் வள்ளலாரிடமே வேண்டினார்கள். இக்காலத்தில் வள்ளலார் சமயத்தில் தான் உள்ளார். அதாவது சுத்த சன்மார்க்க வழி உறுதியாகவில்லை எனலாம். தனது விசாரம் சமய மதம் இவை கடந்து செல்வதை அவர்களிடம் சொல்கிறார். இதை காதில் வாங்காது விடாப்பிடியாக அவர்கள் வள்ளலாரிடம் இதுவரை பாடிய சமயப் பாடல்களை அச்சிட்டு வெளியிட அனுமதிக்கேட்டு வற்புறுத்துகிறார்கள். அதில் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபடுகிறார். இவர்களின் செயலால், சமய ஸ்தோத்திரங்கள் உட்பட எல்லா பாடல்களும் திருவருட்பா என்றப்பெயரில் அச்சிடப்படுகின்றன.
அன்பர்களே!
வள்ளலார் முடிவான சுத்த சன்மார்க்கக் கொள்கையை வெளிப்படுத்திய பின், வள்ளலாரின் முந்தைய சமய காலத்தில் பாடிய (ஒன்று முதல் ஐந்து திருமுறைகளில்) “சமய ஸ்தோத்திரங்களிலில் மட்டும் தான்” லட்சியம் கூடாது எனச் சொல்கிறோம்.
முதல் ஐந்து திருமுறைகளில் உள்ள சமய ஸ்தோத்திரப் பாடல்களை நீக்கி மற்ற பாடல்கள் இந்த சமுகத்திற்கு, அறிவிற்கு பயனைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்,
• இன்று பலர், சுத்த சன்மார்க்கத்திற்கு எதிராக, வள்ளலாரின் கட்டளைக்கு எதிராக, திருவருட்பா முற்றும் ஓதுதல் என்றப்பெயரில், முதல் ஐந்து திருமுறைகளில் உள்ள சமய ஸ்தோத்திரங்களையும் பாடுகிறார்கள். இது முரணானது தானே.
• இன்னும் சிலர், முதல் ஐந்து திருமுறைகளையும் (சமய ஸ்தோத்திப் பாடல்கள் நீக்காமல்) தேரில் வைத்து ஒரு ஆசார சடங்குகள் போல் செய்து வருகிறார்கள்.
• இன்னும் சில பாடகர்கள், (தன்னை சுத்த சன்மார்க்கி எனச்சொல்லி கொண்டு) வள்ளலாரின் சமய ஸ்தோத்திரப் பாடல்களையும் மேடையில் பாடி வருகின்றனர்.
• வள்ளலார் பாடல்கள் தானே என்ற வியாக்கியானம் வேறு பேசி, சமயத்திலேயே வள்ளலாரை காட்டி வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்கம் வெளிப்படாமல் செய்கின்றனர். வேதனையாக உள்ளது.
சுத்த சன்மார்க்கச் சொன்றோர்கள் அல்லது
தலைமை சங்கம் முன் வர வேண்டும்.
அன்பர்களே!
சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறியை கண்டு அதன் வழியில் சென்று இறையருளை பெற்று பேரின்ப பெருவாழ்வை பெற்றார் வள்ளலார். இந்த பொது தனி வழியை நமக்கு உலகிற்கு வெளிப்படுத்திய நாள் ஒருவாறு சித்திரை முதல் தேதி ஆயிரத்து எண்ணூற்று ஒன்றாம் வருடம் (12-04-1871) ஆகும். இதற்கு பின்பு வள்ளலார் உபதேசித்தவை, பாடியவை, எழுதியவை இவைகளின் மூலம் சுத்த சன்மார்க்க கொள்கையை நாம் தெரிந்துக் கொள்ள போதுமானதாக உள்ளது என்பதை இங்கு நாம் சத்தியமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இல்லை..இல்லை.. சமய மதம் சாத்திரம் சாராத பல பாடல்கள் முதல் ஐந்து திருமுறைகளில் உள்ளதும், அது வெளிப்பட வேண்டும் என்பவர்கள் அதற்கான முயற்சியை செய்யாமல், அப்படியே சமய ஸ்தோத்திரங்களையும் சேர்த்துக்கொண்டு பாடுவது, ஓதுவது, அச்சிடுவது, இவை எந்த விதத்தில் நியாயம்? என்றுதான் கேட்கப்படுகிறது.
“சுத்த சன்மார்க்கச் சொன்றோர்கள்” அல்லது “தலைமை சங்கம்” அல்லது “நிலைய நிர்வாகம்” உடனே முன் வர வேண்டும். ஆம், வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளில் உள்ள சமய, மதம், குலம், மரபு, அந்தம், சாத்திரம், சாதி, ஆச்சிரமம், கலை, சாதனம், தேசம், லோகம் மற்றும் கிரிய ஆசாரம் இவை சார்ந்த ஸ்தோத்திரங்களை (பாடல்களை) அடையாளம் கண்டு, அவைகளை நீக்கி, மற்றப் பாடல்களை எடுத்துதர வேண்டும். ஒழுக்கம் மற்றும் அறிவை விருத்தியாக்கிக் கொள்ள, தத்துவங்களின் உண்மை தெரிந்துக்கொள்ள, மற்றப் பாடல்கள் உதவியாக இருந்து அருளும் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்குமில்லை.
முற்றும் ஓதுதல், திருவருட்பா தேர்கள் இழுத்தல் என்று சொல்லி வள்ளலாரின் சமய ஸ்தோத்திரப் பாடல்களை கைவிடாது வைத்திருக்கும் செயல் நியாயமாகாது. வள்ளலாரின் கட்டளைக்கு எதிரானது. தெரிந்தோ அல்லது தெரியாமலோ சமய ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவது, கருத்தில் கொள்வது இவை சுத்த சன்மார்க்க நெறியை உள்ளது உள்ளபடியாக உலகில் வெளிபடாது மறைக்கும் அநாகரிகச் செயலாகும். உண்மை அறிக, சுத்தசன்மார்க்க பொது தனி நெறி ஓங்குக. – APJ அருள்.

unmai

Channai,Tamilnadu,India