முக்கியம் — ஐப்பசி ஏழாம் நாள் வள்ளலார் மகா பேருபதேசம் ஆற்றிய நாள்
1873 ம் வருடம் அக்டோபர் 22 ந்தேதி (தமிழ் ஐப்பசி- 7) வடலூர் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் சுத்த சன்மார்க்கத் திருக்கொடி ஏற்றி, ஒரு மகா பேருபதேசம் செய்தார் வள்ளலார். அவர் ஆற்றிய இந்த உபதேசம் சுத்த சன்மார்க்கத்தின் மிக முக்கியப் பகுதியாக பார்க்கப்படுகிறது. காரணம் இந்த இனிய நாளில் தான் சில மிக முக்கிய குறிப்புகளை தனது உபதேசத்தில் சுட்டிக் காட்டுகிறார் வள்ளலார். இதுவே இன்றைய நம் நல்ல விசாரம்.
திருமந்திரம், கொடி, வேதம், ஆகமம், புராணம், சமயம், மதம், கலைகள், சிவாயநம, சொர்க்கம் நரகம், நல்ல விசாரம், திரைகள், தவம், சகோதரத்துவம், தயவு, ஒருமை, உரிமை, அக அனுபவம், இன்னும் பல முக்கிய வார்த்தைகள் குறித்து விளக்கி நீண்ட பேருபதேசத்தை செய்த நாள்.
ஒருவர் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத் தனி நெறி குறித்து தெரிந்துக்கொள்ள விருப்பம் கொண்டால் முதலில் அவரின் மகா பேருபதேசத்தை ஊன்றி படிக்க வேண்டும். வள்ளலாரின் மகா பேருபதேசத்தில் படிப்பவரின் தேடுதலுக்கு பதில் இருக்குமேயானால் அதாவது அவருக்கு இந்த உபதேசக் குறிப்புகளில் ஒருமை (ACCEPTANCE) வருமேயானால், அவர் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவராகி (தேர்வாகி) விடுவார். வள்ளலாரின் மகா பேருபதேசத்தில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
- சுத்த சன்மார்க்கத்தின் மகா மந்திரத்தை உலகிற்கு வெளிப்படுத்திய நாள்.
மகாமந்திரம்:
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
- சுத்த சன்மார்க்கத்திற்கு தனிக் கொடி அருளிய நாள்.
கொடி நிறம் : மஞ்சள் (பொன்) நிறம் கால் பங்கு
வெள்ளை (வெண்மை) நிறம் முக்கால் பங்கு.
சுத்த சன்மார்க்கக் கொடியை கட்டி, அக்கொடிப் பற்றி வள்ளலார் உபதேசித்தது:
”…இக்காலமே சன்மார்க்கக் காலம். இதற்கு சாட்சியாக, இப்போது தான், கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்; நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது. அந்த நாடி நுனியில் புருவ மத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது. அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம், மேற்புறம் மஞ்சள் வர்ணம். அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது. இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்…”
- சமயத்தில் வைத்திருந்த லட்சியம் என்னை தூக்கிவிடவில்லை… ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது, ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.
… என்னை எறாநிலை மிசை ஏற்றிவிட்டது யாதெனில்; தயவு. தயவு என்னும் கருணை தான் என்னை தூக்கி விட்டது..” எனத் தெளிவாக உபதேசித்த நாள்.
- சுத்த சன்மார்க்கத்தின் நன்முயற்சியும் பயிற்சியும் என்பது நல்ல விசாரமே என்று அறிவித்து, நல்ல விசாரம் குறித்து நீண்ட உபதேசத்தை அருளிய நாள்.
- சுத்த சன்மார்க்கத் தனி நெறியை கண்டு உலகிற்கு வெளிப்படுத்திய நாள் சித்திரை 1, 1871 என்பதை உறுதி செய்ய சத்திய வாக்கியம் அருளிய நாள்:
வள்ளலார் உபதேசித்தது: “.. இரண்டரை வருசமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை….” (நிற்க! இந்த நாள் அக்டோபர் 1873 லிருந்து 2 ½ வருடங்களை கழித்தால் வரும் மாதம் ஏப்ரல் 1871 ஆகும். வள்ளலார் ஏப்ரல் மாதத்தில் சித்திரை முதல் நாளில் ஓர் அறிவிப்பு வெளியிடுகிறார் (அதாவது 12-04-1871 அன்று). அதில் 25 மாதத்திற்கு மேல் என்று சொல்லியுள்ளார் வள்ளலார். அங்கிருந்து இதை கூட்டினால் வரும் மேல் மாதம் அக்டோபர் 1873 என அறிக. நன்றி APJ அருள்)
- தன்னை தெய்வமென எண்ணக் கூடாது என்று கட்டளையிட்டு, அதற்கான விளக்கத்தை அருளிய நாள்.
உபதேசித்தது: “…தெய்வத்தைத் தெரிந்துக் கொள்ளாது, இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமென சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதர்கள் தெய்வத்தை தெரிந்துக் கொள்ளாததினாலே அல்லவா நம்மை சுற்றுகின்றார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்றால்; ஒரு பதார்த்தை அனுபவித்தால் அன்றி அந்த பதார்த்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அது போல், தெய்வத்தை உள்ளதுபடி அனுபவித்தால் அல்லது தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஆதலால், தெய்வத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கின்ற முக்கிய லட்சியத்திலிருந்து கொண்டு விசாரம் செய்துக் கொண்டிருங்கள் …” என்கிறார்.
- எவற்றில்எல்லாம் லட்சியம் வைக்க கூடாது என்பதை தெளிவாக உபதேசித்த நாள். அதற்கான காரணத்தை விளக்கிய நாள்.
உபதேசித்தது:
“… நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகளில் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம்…”
“…. இதுபோல், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்.”
“சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையை குழுஉக் குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாக காட்டாது, சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களை சேர்த்து, ஓன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, பத்து, பதின்மூன்று, பதினைந்து, பதினாறு, இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்க விட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.. நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்ம லாபமாகிய சிவானுபவமே அன்றி வேறில்லை.”
“ இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களை செய்து அற்ப பிர்யோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டு திருவருள் துணையால், கருணை நன்முயற்சி எடுத்துக் கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை..”
அன்பர்களே, சுத்த சன்மார்க்கத்தின் தனி நெறியை தெரிந்துக்கொள்ள முதலில் மகா பேருபதேசம் அடுத்து நான்கு விண்ணப்பங்கள், அடுத்து நினைந்து… எனத் தொடங்கும் 28 பாசுரங்கள், 12-04-1871 பின்பு உள்ள கட்டளைகள், அறிவிப்புகள், திருஅகவல் மற்றும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள் இவை காண வேண்டும்.
அன்பர்களே! வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் நன்கு தெரிந்துக்கொண்டு, உண்மை பொது நெறியை மட்டுமே சார்ந்திருந்து ஒருவர் நல்ல விசாரத்தை தொடர்ந்து செய்து வந்தால், எந்தளவுக்கு முயற்சியுடனே இருந்தாரோ அதற்கு தக்க லாபத்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார் வள்ளலார். எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக சுத்த சன்மார்க்கம் விளங்குகிறது. அதே நேரத்தில், நம்மிடையே உள்ள கருணையின் விருத்திக்கு தடையாக உள்ளது சாதி மற்றும் சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் என்கிறார் வள்ளலார். மேற்படி ஆசாரங்களை விட்டொழித்து, பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ள வேண்டும். இதுவே வள்ளலாரின் தனி வழி. அன்புடன்: APJ அருள் 877887413.