சுத்த சன்மார்க்கத்தில் “குரு” தேவையில்லை – APJ அருள்
அவத்தைகளை நீக்கிக் கொண்டு, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி, பேரின்ப பெருவாழ்வில் வாழ்தல் எதனால் பெறக்கூடும்? உண்மை ஆண்டவர் யார்? கடவுளின் உண்மை நிலை என்ன?
மேற்படியான தேடுதலுக்கு, “குரு” என யாரும் தேவையில்லை என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம். இதுவே இங்கு விசாரம்.
பொதுவாக, உலக சமய மத மார்க்கங்களில் குரு என்பவர் மிக முக்கியமாக கருதப்படுகிறார். குருவே (அல்லது தூதுவர்) சமய மத சன்மார்க்கங்களில் வழிகாட்டியாக உள்ளார். குரு (தூதுவர்) இல்லாமல் இறையருள் அடைதல் முடியாது என்கிறது.
ஆனால் வள்ளலார் தான் பயணித்த புதிய பாதையில் (சுத்த சன்மார்க்கத்தில்) ஆண்டவரையே குருவாக கொண்டார். இதற்கு காரணம் அவர் கொண்டிருந்த விருப்பமும் கொள்கையுமே ஆகும். ஆம், சுத்த சன்மார்க்கத்தின் லட்சியமாக உள்ள, அதாவது, எல்லா அவத்தைகளையும் நீக்கி, நித்திய வாழ்வு பெறுதல், அதற்கு வழிதுறை காட்டுபவர் ஆண்டவர் ஒருவரே என்ற கொள்கை. அதனால் இம்மார்க்கத்தில் வழிபாடே எதுவெனில்; “ஆண்டவரே, நீரே விரைந்து வந்து உண்மையை தெரிவிக்க வேணுமாய் வேண்டுவதே.”
அன்பர்களே, குருவால் போதிப்பது எந்தளவெனில், அவர் எந்தளவு அனுபவம் பெற்றிருந்தாரோ, அந்தளவுக்கு மட்டுமே போதித்து நமக்கு வழி காட்ட முடியும். ஆனால் ஒருவர் முழு உண்மையை தெரிந்துக் கொள்ள விருப்பம் கொண்டிருந்தால், அவர் ஆண்டவரையே குருவாக கொள்ள வேண்டும்.
இங்கு முழு உண்மை என்பது; உண்மை ஆண்டவரின் சொரூபம் காணல், அண்டம், பிண்டம் உட்பட எல்லா உண்மையும் அறிதல் மற்றும் நித்திய வாழ்விற்கான அருளை ஆண்டவரிடம் பெறுதல் ஆகும்.
ஆண்டவரின் முழு உண்மையை, ஆண்டவராலேயே தெரிவிக்க முடியும். அப்போதுதான் ஆண்டவர் எல்லாம் வல்லவர். மிகப்பெரியவன் ஆவர் என்பது சரிதானே. இதில் வெற்றியும் கண்டார் வள்ளலார். ஆம், ஆண்டவரே குருவாக இருந்து அனைத்தும் தெரிவித்து, தன்னை ஏறாநிலை மிசை ஏற்றியதாக கூறுகிறார் வள்ளலார்.
இதோ பாடல் வரிகள் சில…
அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே…
(அனித்தம் என்றால் நிலையற்றது/நிலையாமை
உத்தமசற் குருவே…
களித்தெனைத் தேற்றிஅருள் செய்தகுருவே..
நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே…
ஆம் கடவுளே குருவாக இருந்து நான்கு மரபுகளை சொல்கிறார்.
ஆக, நெறியை சொல்லி தருபவர் ஆண்டவரே.
… குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.”
மேலும்;
“…அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே
மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே. (ஒக்கல் என்றால் உறவு எனலாம்)
ஆக, சுத்த சன்மார்க்கத்தில் குருவாக இருந்து, எல்லாம் தெரிவித்தது, அருளியது எல்லாம் ஆண்டவரே என்கிறார் வள்ளலார்.
குரு எங்கே இருக்கிறார்? என்றால்;
இதோ அவர் இருக்கும் இடத்தை வள்ளலார் அருள் விளக்க மாலையில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
அடியேன் அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்த அருட் குருவே…”
உலகெலாம் விளங்க வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
கோயிலில் கண்டுகொண் டேனே.”
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
குருவையான் கண்டுகொண் டேனே.”
அன்பர்களே, இதை ஊன்றி விசாரித்து இன்பம் அடைய வேண்டும். மேலும்,
வள்ளலாருக்கு மற்ற நம்பிக்கை மீது இருந்த இச்சையை எடுத்து விட்டு, ஆண்ட குருவே என்கிறார். அதற்கான பாடல்:
இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.
அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்.
ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
மக்களும் மனைவியும் உறவும்
நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
நம்பினேன் கைவிடேல் எனையே.
இங்ஙனம் ஆண்டவரையே குருவாக கொண்டிருந்த வள்ளலாருக்கு
மேலும் கிடைத்தது என்ன தெரியுமா? இதோ பாருங்கள்:
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்
திரமுற வருளிய திருவருட் குருவே
மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே
கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
மாண்பத மளித்து வயங்குசற் குருவே
செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே
அதனால்,
நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரையே குருவாக கொண்டு, அவரிடமே உண்மையை உரைக்க வேணுமாய் உருகி அழுது வேண்ட வேண்டும் என்கிறது சுத்த சன்மார்க்கம்.
வள்ளலார் எப்படியெல்லாம் வேண்டுகிறார் பாருங்கள்:
படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
தானாகி நானாடத் தருணம்இது தானே
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.
குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
குணமே கொளும்என் குருவே அபயம்
பற்றம் பலமே அலதோர் நெறியும்
பதியே அறியேன் அடியேன் அபயம்
சுற்றம் பலவும் உனவே எனவோ
துணைவே றிலைநின் துணையே அபயம்
சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.
தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின்
சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன்
பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.
தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
சாமியும் பூமியும் பொருளும்
சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
சுற்றமும் முற்றும்நீ என்றே
சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
திருவுளம் தெரிந்ததே எந்தாய்
நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
நீதியோ நின்அருட் கழகோ.
வந்தருள் புரிக விரைந்திது தருணம்
மாமணி மன்றிலே ஞான
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
சுத்தசன் மார்க்கசற் குருவே
தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
தனிஅருட் சோதியை எனது
சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
செய்வித் தருள்கசெய் வகையே.
ஆண்டவர் குருவாக இருந்து உண்மையை உரைத்ததுக்கு மற்றும் அருளியதுக்கு
நன்றி சொல்கிறார் வள்ளலார், இதோ பாடல்களை பாருங்கள்:
எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி மன்னிய வடிவளித் தறிஞர்
குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் கொடுத்துளே விளங்குசற் குருவே
பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் பலத்திலே அன்பர்தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்கஎன் மொழியே.
சாற்றுவேன் எனது தந்தையே தாயே
சற்குரு நாதனே என்றே
போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
பூரணா எனஉல கெல்லாம்
தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
தூயபேர் உதவிக்கு நான்என்
ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
அப்பநின் சுதந்தரம் அன்றோ.
கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
கொள்கையாய்க் கொள்கையோ டளவா
அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
வண்மையைத் தடுப்பவர் யாரே.
நன்றி : APJ அருள் – 8778874134