சிவம், அருட்பெருஞ்ஜோதி, நடராஜர், சிவ காமவல்லி
சிவம், அருட்பெருஞ்ஜோதி, நடராஜர், சிவ காமவல்லி – இவை எல்லோருக்குமான பொது சொற்களே…
வள்ளலார் ஒரு புதிய மார்க்கம் சுத்த சன்மார்க்கத்தை கண்டாலும், அவர் சமயத்தின் பல சொற்களை இங்கும் பயன்படுத்திருப்பார்கள். அதனால் அவர் சமயத்தை கைவிடவில்லை என்பர். ஆனால் அப்படியல்ல.
திருவருட்பிரகாச வள்ளலார் ஆரம்பகாலத்தில் சைவ சமயத்தில் பற்றுக் கொண்டு, பல சமய தோத்திரப்பாடல்களை பாடியுள்ளார்கள். சமயப்பற்றுக் கொண்டு பாடிய அப்பாடல்களில் பயன்படுத்திய சிவம், நடராஜர், பதி, சிவகாம வல்லி போன்றவை சமயம் மதம் கடந்து விளங்கும் சுத்த சன்மார்க்கத்திலும் மேற்படி சொல்லை சொல்லியுள்ளார் வள்ளலார்.
சைவம் வைணவம், வைதீகம், பௌத்துவம், சமணம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும், இதிகாசம், புராணங்கள் முதலிய கலைகளிலும், சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அதற்கு காரணம் அவையில் முழு உண்மை உரைக்கவில்லை என்கிறார் வள்ளலார். அதனால் கடவுள்உண்மை காண ஒரு புதிய மார்க்கத்தை (வழியை) சுத்த சன்மார்க்கத்தை கண்டு வெளிப்படுத்தியவரே வள்ளலார்.
சுத்த சன்மார்க்கத்தில் கடவுளை சிவம் என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த சிவத்தை சுத்த சன்மார்க்கத்தில் சுத்த சிவம் என்கிறார். சுத்த சிவம் என்று முதலில் சொல்லியப் பிறகே, சிவம் என்பார். இங்கு சேர்க்கப்பட்டுள்ள “சுத்தம்” என்ற சொல்லுக்கு வள்ளலார் தரும் தனிப் பொருள் யாதெனில்; சுத்தம் என்பது ஒன்றுமல்லாது. மறுக்க வந்தது என்கிறார். (ஆதாரம்: உரைநடைப்பகுதி)
அதாவது; சுத்த சன்மார்க்கம் என்றால் இதற்கு முன் வெளிப்பட்டிருந்த சன்மார்க்கத்தையும் சிவ சன்மார்க்கத்தையும் மறுக்க வந்தது சுத்த சன்மார்க்கம் என்கிறார். அதே போல், சுத்த அருட்பெருஞ்ஜோதி என்பது இதற்கு முன் சொல்லப்பட்ட அருட்பெருஞ்ஜோதியை மறுத்தது. அதாவது அவர் அனுபவத்தில் அருளால் கண்டு அனுபவித்த சொரூபம் அருட்பெருஞ்ஜோதி ஆகும். இதே போல் சுத்த சிவம் என்றால்; சமயத்தில் சொல்லப்பட்டுள்ள சிவத்தையும் பரசிவத்தையும் மறுக்க வந்தது சுத்த சிவம் என்கிறார் வள்ளலார். (இதே போல் மற்றதை கொள்க)
மேலும், தமிழ் அகராதிப்படி, சிவம் என்பதற்கு பொருள்; மேன்மை, செம்பொருள் என்கிறது. இந்த பொருள் எல்லோருக்கும் பொதுவானது என்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வரிசையில் தான் “சிவகாம வல்லி” என்ற சொல்லையும் வள்ளலார் புதிய மார்க்கத்தில் பயன்படுத்தி உள்ளார்கள். சிவ காம வல்லி என வரும் பாடல் வரிகளை முதலில் காண்போம் :
(ஆறாம் திருமுறைப்பாடல்களிலும் பல சமய ஸ்தோத்திரப் பாடல்களும் கலந்துள்ளன என்பதையும் இங்கு நினவு படுத்துகிறேன்).
• சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம்
எங்கும் கண்கண்ட தெய்வம்
• சிவ – காமப்பெண் காதல னே
• சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
• மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
• எல்லாம் வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
• மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.
• சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா
• வாரீர் சிதம்பர வல்லி சிவகாம வல்லி மணாளரே வாரீர்
• எம் சிவகாம வல்லிமகிழ் மாப்பிள்ளை பாத மலர்.
• சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளையே திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளையே.
• சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.
• சிவகாமக் கொடியே அடியேற் கருளுகவே
• மன்னுகொடிச் சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
மாலைஇட்டான் பாதமலர்.
• சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
நல்லான்தன் தாட்கே நயந்து.
• தேன்வந்த மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்
இங்குநடஞ் செய்வான் இனி.
• மெல்லியல் சிவகாம வல்லியுடன் களித்து
விளையாடவும் எங்கள் வினை ஓடவும்
• சிவகாம வல்லியைச் சேர்ந்தவனே
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவனே.
• மைக் கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
• மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
அகராதி படி; சிவம் என்பது மேன்மை (கடவுளையும் குறிக்கும்),
காமம் என்பதற்கு பொருள் பல வரும் அதில் ஒன்று ஆசை.
வல்லி என்பதற்கு அளவு, கொடி எனவும் உள்ளது.
“சிவகாம வல்லி” என்ற சொல் பெண்ணைக் குறிப்பதாக உள்ளது. வள்ளலார் மேலும், தனது பாடல்களில் தலைவி, தோழி, தாய், பெண், ஆண் இவை போன்ற சொற்களையும் பயன்படுத்திக் கொண்டு இறைவனின் உண்மைநிலையை விளக்கி இருப்பார் வள்ளலார் அவர்கள்.
“சிவகாம வல்லி மண வாளா” வந்தருள்க என்பதில்; மண வாளா என்றால் இறைவன். இறைவன் இங்கு ஆணாகவும், சிற்றணுவாகிய ஆன்மாவை பெண்ணாகவும் (சிவகாம வல்லியாக) எடுத்துக் கொண்டு விளக்கம் செய்விக்கிறார் வள்ளலார். நடராஜர் என்பதையும் இங்கு பயன் படுத்திருப்பார். இது சமயத்தில் காட்டப்பட்டுள்ள நடராஜர் இல்லை. இறைவனின் இயக்கத்தையே நடராஜர் என்றும், ஆன்மஒளிக்குள் உள்ளொளியின் அசைவே நடராஜர் என்கிறார்.
இறைவனை கணவராக/ஆணாக/தலைவனாகவும்/அறிவாகவும்,சிற்றறணு ஆன்மாவை/ நம்மை பெண்ணாக/மங்கையாக/தலைவியாகவும்/ அறிவாகவும், மற்றும்நமது ஜீவன்/மனம் இவற்றை தோழியாகவும் உருவகப்படுத்தி,பல பாடல்கள் இயற்றி, உண்மை விளக்கம் தந்துள்ளார் வள்ளலார்.
வள்ளலார் உறுதியாக உபதேசித்தது;
தலைவனை தொழுவதே கடமையாகும். இறைவனைத் தவிர மற்றத்தில் லட்சியம் கூடாது. சுத்த சன்மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை அதாவது எல்லாம் அகத்தில் நடப்பதே உண்மையாகவுள்ளது. பதியாகிய தலைவன், தலைவி காமவல்லியுடன் (ஆன்மானுபவத்துடன்) உள்ளத்து சந்திப்பே இன்பம் ஆகும்.
• சிவமே ஞானக் கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா
நல்ல வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா.
• ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை
வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
வல்லி மணாளரே வாரீர்
மணிமன்ற வாணரே வாரீர்.
• ஆறாம் திருமுறை / வருவார் அழைத்துவாடி
மெல்லியல் சிவகாம வல்லியுடன் களித்து
விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து
விண்ணார் செஞ்சுட ரே – சுடர் – மேவிய உள்ளொளி யே
தண்ணார் வெண்மதி யே – அதில் – தங்கிய தண்ணமு தே
கண்ணார் மெய்க்கன லே – சிவ – காமப்பெண் காதல னே
அண்ணா தந்தனை யே – அரு – ளாரமு தந்தனை யே.
ஆக, சிவம், நடராஜர், அருட்பெருஞ்ஜோதி, பதி, சிவகாமவல்லி இவையெல்லாம் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய பொது சொற்களே. இயற்கைகையை / இறைவனை பற்றி நினைக்கும் போது வரும் பொது திருவார்த்தைகள் என அறிக.
நன்றி
APJ அருள்