July 30, 2025
tamil katturai APJ arul

அறிவே கடவுளின் வடிவம் அதனால் நமக்கு அறிவே வழி

( வள்ளலார் கண்ட பொது கடவுள் “இயற்கையே” என்ற கட்டுரையின் தொடர்ச்சி – APJ அருள் )

அன்பர்களே !

வள்ளலார் கண்ட பொது கடவுள் “ இயற்கையே “. எங்கும் பரிபூரணமாக நிறைந்துள்ள ஆண்டவரின் வடிவம் இயற்கை உண்மை. இயற்கை உண்மை அறிவாக உள்ளது. அறிவுள் அறிவு அதனுள் சுத்த அறிவின் சொருபமே அருட்பெருஞ்ஜோதி ஆகும் என்கிறது சுத்த சன்மார்க்கம். இயற்கை உண்மை பதியே என்கிறார் வள்ளலார். சுத்த அறிவை அறிவால் பெறுவதே சாதனம்.  அறிவே ஒருமையும் கருணையும் ஆகும். இயற்கை கடவுள் பற்றி முன்பு கண்டோம். அக்கட்டுரையில் இயற்கை பற்றிய சத்திய சொற்களை மீண்டும் நினைவு கூர்வோம்.

  • இறவாத இயற்கை,
  • இயற்கை கடவுள்,
  • இயற்கை உண்மை,
  • இயற்கை விளக்கம்,
  • இயற்கை இன்பம்,
  • இயற்கை நிறைவு
  • இயற்கை முடிபு
  • இயற்கை அருள்
  • இயற்கை தொன்மை
  • இயற்கையுள் இயற்கை
  • இயற்கை வெளி
  • இயற்கை தனிஅனுபவம்
  • இயற்கை சிவம்

இங்ஙனம் விளங்கும் இயற்கை (கடவுள்) சுத்த அறிவாய் உள்ளது. அறிவு ஒன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளி என்கிறார் வள்ளலார்.

அன்பர்களே, இந்த உண்மை அறிவு குறித்த விசாரம் தான் இங்கு நான் (APJ அருள்) திருவருள் துணையால் செய்ய உள்ளேன்.

அறிவு குறித்து பல விளக்கங்கள் நாம் தெரிந்துக் கொண்டிருக்கிறோம். உலகளவில் அறிவு 

குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து செய்தும் வரப்படுகிறது.

பொதுவாக, அறிவு என்பது; தகவல்கள், திறமைகள், உண்மைகள் மற்றும் அனுபவங்கள் எனலாம். இவை, நாம் 

இயற்கையாக (பிறவியால்) பெற்றுள்ள அறிவு (தன் அறிவு), நம்தொடர்பால் பெறப்படும் அறிவு, நல்ல விசாரணையில் வரும் அறிவு (அறிவுக்கு அறிவு) என இதை அறிவு வளர்ச்சி அல்லது உள் அறிவு பெறும் வழிகள் எனலாம். அப்படித்தானே.ஆக, அறிவு என்றால் ஒரு பொருளைப் பற்றிய உண்மை அறிந்திருப்பது, அறிந்துக்கொள்வது,

நிற்க! தானாக அறியப்படும் அறிவு என்ற ஒரு சுத்த அறிவு ஒன்று உள்ளது. அதாவது தானாக அறிந்து கொள்வது. இது அருளால் நடப்பது என்கிறார் வள்ளலார். நல்ல விசாரம் செய்வோம்.

நிற்க! புற (படிப்பு) அறிவு, கலை அறிவு இவை பற்றிய விசாரமில்லை. நம் நிலை என்ன ? நம்மை அனுஷ்டிக்கின்ற கடவுளின் நிலை என்ன? எனக் காணும் முயற்சியை சொல்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.

நமது ஞானிகள் பிண்டம் சார்ந்த அறிவை நான்காக பார்க்கிறார்கள்;

  1. இந்திரிய அறிவு,(பிண்டத்தின் புறப்புறம் – கண் முதலிய இந்திரியங்கள்)
  2. கரண அறிவு, (பிண்டத்தின் புறம் – மனம் முதலிய கரணங்கள்)
  3. ஜீவ அறிவு, (பிண்டத்தின் அகப்புறம் – ஜீவன் )
  4. ஆன்ம அறிவு. (பிண்டத்தின் அகம் ஆன்மா)

இவை முறையே;

  • ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக்காணுதல் இந்திரிய அறிவு.
  • ஒரு வஸ்துவின் நாமரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மன அறிவு.
  • ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை யறிந்த அறிவே ஜீவ அறிவு.
  • ஒரு பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம அறிவு.

நம் விசாரம் “ஆன்ம அறிவு” குறித்து. காரணம் பேரின்ப பெரு வாழ்வை பெற்று வாழ்வதே நம் லட்சியம். இதற்கு உண்மை அறிதல் வேண்டும் என்கிறார் வள்ளலார். பொதுவாக அதாவது இயல்பாகவே இந்த அறிவு பல பிறவிகளில் கிடைக்கும். ஆனால், இப்பிறவியிலேயே பெறுதலே நம் முயற்சி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு விதமாகவும் வெளிப்படுத்தியுள்ளனர்; ஞான வகை மூன்று;

உபாய ஞானம் – ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.

உண்மை ஞானம் – ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.

அனுபவ ஞானம் – கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.

உபாய ஞான மென்பது; நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு. உண்மை ஞான மென்பது; சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு. அனுபவ ஞான மென்பது; எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு.

வள்ளலாரின் உபதேசக்குறிப்பில் ;

கடவுள் உண்மை விளங்கும் சுத்த சிவ நிலையை படிப்பால் அறியக்கூடாது. அறிவது எப்படியெனில்: ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். (அறிவு விளங்குவதில் தான் கடவுள் நிலை காண முடியும் என்கிறார் வள்ளலார், நம் அறிவை கொண்டு சுத்த அறிவைப் பெறுதல்). ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும் என்கிறார்.

அறிவாகிய கடவுளை அறிவைக் கொண்டு அறிய முடியும். சரிதானே.

இறவாத இயற்கை கடவுளாக உள்ளது. அக்கடவுளின் வடிவம் இயற்கை உண்மை, இயற்கை உண்மை அறிவாய் உள்ளது. உண்மை அறிவால் தான் உண்மை கடவுளின் நிலை அறியப்படுவதாக உள்ளது என்கிறது வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம். அறிவே வழி. இதுவே கருணை சாதனம். இதை நாம் கருத்தில் மீண்டும் கொள்வோம். கொண்டோம்.

  • ஒரு பொருளினது உண்மையைஅறிதல் ஆன்ம அறிவு.
  • உண்மையை தானே தெரிவித்து அருளுவது கடவுளறிவு.

என் மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம் என்பார் வள்ளலார். ஆக, நம் கொள்ள வேண்டிய அறிவு ஆன்ம அறிவு. இதில் இடைவிடாது நன்முயற்சி செய்தால், ஆண்டவரிடமிருந்து பெற வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம். இதுவே சத்தியம் என்கிறார் வள்ளலார்.

மனித பிறவிக்கு முன் உள்ள யோனி வர்க்கங்களில் அதாவது தாவரம் முதல் விலங்கு வரை புனலறிவு தான் அருளப்பட்டுள்ளது. புலனறிவால் வாழ முடியும். ஆனால் உள்ள உண்மையை (இயற்கையை/கடவுள் நிலையை) அறிந்துக்கொள்ள முடியாது. கடவுளின் உண்மை நிலை அறிவதே நம் லட்சியம்.

அன்பர்களே,

மனித தேகத்தில் தான் ஆறறிவு விளங்க வைக்கப்படுகிறது. வள்ளலார் விண்ணப்பத்தில் விரிவாக விளக்குகிறார். சுருக்கமாக ஒருவாறு காண முயற்ச்சி செய்கிறேன். ( உள்ளபடி முழுமையாக தெரிந்துக் கொள்ள நான்கு விண்ணப்பங்களை ஊன்றி படிக்க வேண்டுகிறேன்).

“ என்னை சிறிது அறிவு விளங்கசெய்து, மனித தேகத்தில் பிறப்பிக்க வைத்த இறைவா… வந்தனம் வந்தனம் என்கிறார் வள்ளலார்”. – வள்ளலார் அருளிய விண்ணப்பங்கள்

உயர்வுடையதாகிய ஆறாவது அறிவுள்ள, ஏழாவது பிறவியாகிய மனிதப் பிறவிக்கு, தேகம், ஆன்ம சித்தி கலைகள், உபயோக தத்துவ உறுப்புகள், உட்பட மற்றவைகளையும், இவைக்கான இடங்கள், அதிகரித்தற்கான இடங்கள், தொழில், தொழில் இயற்றும் போது இயைபு, இச்சை,அறிவு முதலிய கருவிகளும், மற்ற எல்லாம் அமைத்து, ஆறாவது அறிவில் சிறிது மட்டும் விளங்கச் செய்து விடுகிறார் ஆண்டவர்.

நிற்க! நாம் பெற்றுள்ள சிறிய (ஆறாவது) அறிவானது, (அடுத்த மனிதப்) பிறவிகள் தோறும்தான் வளர்ச்சி பெறுகிறது. பிறவிகளுக்கு காரணம் அறிவு விருத்திக்கே. ஒவ்வொரு பிறவிலும் பெற்ற அறிவளவு இன்பம் அருளப்படுகிறது. அதனால் எல்லா நிலையும் அருளே என அறிக.

நிற்க! இந்நிலையில் தான், வள்ளலார், இப்பிறவிலேயே அறிவை முழு விருத்தியாக்கிக் கொண்டு, உண்மையை முழுமையாக இப்பிறவிலேயே தெரிந்துக் கொள்ள அதி தீவிர விருப்பம் கொள்கிறார். அவ்விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள சமய மதங்களில் வழித்துறை இல்லாததால், ஒரு புதிய வழியை காண்கிறார். அதுவே சுத்த சன்மார்க்கம்.

இவ்வழியில் வள்ளலார் கண்ட உண்மை யாதெனில்;

இனி, மேலும் பிறவிகள் இல்லாது, இப்பிறவிலேயே உண்மை நிலை அறிந்துக்கொள்ள இறைவனிடமே வேண்டி அருள் பெறுவதே ஒரே வழி எனக்கண்டார். இறைவன் மட்டுமே உண்மையை விளக்குவதாக உள்ளது. அதனால் இறைவா, நீயே, விரைந்து வந்து, உண்மையை எனக்கு விளக்க வேண்டும், என்னை பேரின்ப பெருவாழ்வில் வாழ வைக்க வேண்டும் என கண்ணீர் விட்டு நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து வேண்டுவதாக உள்ளது என்கிறார் வள்ளலார். சுத்த மெய்ஞ்ஞான யோகப் பயிற்சி இதுவே.

நிற்க! அறிவின் அடிப்படையில் தான் தேவர்கள், நரகர்கள், மனிதர்கள் என்றழைக்கப்படுகிறது என்கிறார் வள்ளலார். அறிவு நிலைகள் அறிய திருவள்ளுவரின் உரிய அதிகாரங்களை ஊன்றி வாசிக்க வேண்டும்.

ஆக,

  • கடவுளறிவால் (கடவுளால்) உண்மை தெரிவிக்கப்படும் என்பதால், உண்மை தெரிந்துக் கொள்ளும் இடத்திலிருந்து (ஆன்ம அறிவு கொண்டு) உடனே முயற்சிக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.
  • மரணம் நெருங்கி வருகிறது, காலம் குறைவாக உள்ளதாலும், இந்திரியங்கள், கரணங்கள், ஜீவன் ஆகிய படி நிலைகள் (இந்திரிய அறிவு, கரண அறிவு, ஜீவ அறிவு) மூலம் முயற்சிப்பதை கைவிடுகிறார்.
  • மேலும், இதுவரை கற்ற, பற்றிய பற்றுகளை பற்றற கைவிட்டு விட வேண்டும். வள்ளலார் கைவிட்டு விட்டதாக தெரிவிக்கிறார். மேலும்,
  • யோகத்தில் ஞானம் என்ற மூன்றாவது சாதனத்தில் நாலாவது நிலையில் முயற்சியை தொடங்கியதாக சொல்கிறார் வள்ளலார்.

அறியாமல் அறிகின்ற அறிவுள் அறிவாகிய சத்திய அறிவே என்கிறார்.

  • மெய்ப்பொருளாகவும்,
  • அன்பாகவும், கருணையாகவும்,
  • வெளியாகவும், ஒளியாகவும்,
  • உயிரொளியாகவும்,
  • அனுபவமாகவும் இன்பமாகவும்

இயற்கை வெளிப்படுகிறது என்கிறார் வள்ளலார்.

வள்ளலாரின் பாடல்களில் அறிவு குறித்த உண்மை காண்போம்;

  • அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
  • அறிவு ஒன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே ..
  • மெய் அறிவு ஆனந்த நிலை விளக்குகின்ற சுடரே
  • சுத்த அறிவான வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே..
  • நின் கருணை உளந்தான் அறிவு …
  • அன்பே அறிவே அமுதே அழியாப் பொன்னே மணியே பொருளே அருளே
  • உயிர்க்குயிர் ஆகிய ஒளியே ஆதியே நடுவே அந்தமே ஆதி நடுஅந்தம் இல்லதோர் அறிவே.
  • என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே …
  • அறிவு ஒரு வகை முதல் ஐவகை அறுவகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
  • அறிவு உறு சித்திகள் அனந்த கோடிகள் பிரிவற விளக்கும் …
  • அறிவவை பலவாய் அறிவன பலவாய் எறிவற விளக்கிடும் ..
  • அறிவுக்கு அறிவினில் அதுவது அதுவதுவாய் எறிவற்று ஓங்கிய …
  • அறிவுருவனைத்தும் ஆனந்தமாயிட பொறியுறு மான்மதற் போதமும் போயிட
  • ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை ..
  • அறிவான தெய்வம் அவ்வறிவுக்கு அறிவாம் அன்பான தெய்வம்…
  • ஆரணஆகமத்தின் அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவு..
  • மனம் தருவானை தவிர்த்தோர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற.. (தருவானை என்றால் வெளிப்படுத்துதல்)
  • சற்புதர் அறிவில் அறிவென அறிகின்ற அறிவே (சற்= நல்லபுதர்/ சிறிய)..
  • என் அறிவாம் என் அறிவின் இன்பமாம் என்னறிவின் தன் அறிவாம் உண்மைத் தனி நிலையாம் ..
  • அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்த திரு நடம் நான் காணல் வேண்டும்..
  • எனக்குள்ளும் புறத்தும் மெய்த் துணையாய் விளங்கும் அறிவே …
  • இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாகி ..
  • அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே..
  • பேரன்பர் அறிவின்கண் அறிவாய் அவ்வறிவில் விளைந்த சிவானந்த அமுது..
  • இயல் உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன்..
  • பிறிவு உற்றறியாய் பெரும் பொருளாய் என் அறிவுக்கு அறிவாம் அருட்..
  • அறிவுக்கு அறிவு தோன்றுமிடம்:
  • பற்றிய பற்றனைத்தினையும் பற்றற விட்ட அறிவாம் பாண்மை ஒன்றே வடிவாகி .. (பாண்மை = முறை / தாழ்ச்சி )
  • மெய் தூரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் ( இது விளங்க அறிவுக்கு அறிவு )
  • அருளறிவு ஒன்றே அறிவு மற்ற எல்லாம் மருள் அறிவென்றே வகுத்த மெய்ச் சிவமே

“அயர்வறு” என்றப் பாடலில் அறிவு விளங்கும் நிலைகளை காண முடிகிறது.

அயர்வறு பேரறிவு- அவ்வறிவுக்கு அறிவாய் –

அறிவுஅறிவுள் அறிவாய் – ஆங்கதனுள்ளோர் அறிவாய் –

மயர்வறுமோர் இயற்கை உண்மை தனியறிவாய் –

செயற்கை மன்னுமறிவு அனைத்தினுக்கும் வயங்கி …

பேரறிவு என்பது மறைப்புகள் அறியா அறிவு ஆகும், பேரறிவு உள்ளவர் சமயக் குழியில் விழாதவர் (பாடல் ஆதாரம் : “வெறிக்கும்..”)

நாம் பெற்றுள்ள சிறிய அறிவு புன்மை அறிவு.

புன்மை அறிவால் பொய் உரைத்து இகழ்ந்து போதல். கொலை புரிதல், புலை நுகர்ந்து இருத்தல், அலைதரு மனம், எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தல், சமய வலை அகப்படல், மயங்கிய மதி, நல்லோர் நலையல எனவே திரிதல் இவை பெறும் அறிவாகும். (ஆதாரம் பாடல்கள்). இந்த அறிவை விருத்தியாக்கி அதாவது அறிவுக்கு அறிவு அதனுள் சுத்த அறிவு பெற வேண்டும்., சற்புதர் அறிவில் அறிவென அறிகின்ற அறிவே என்கிறார். நிற்க!

இது தெய்வ திருவருளால் மட்டுமே சாத்தியம். தகுதியுள்ளவர் பெறுவது சத்தியம். கருணை ஒன்றே சாதனம். கருணை என்பது; (புறத்தில்) எல்லா உயிர்களிடத்தும் தயவும், (அகத்தில்) ஆண்டவரிடத்தில் அன்பும். இதற்கு ஒருமை வேண்டும். ஒருமை என்பது; தனது அறிவும் ஒழுக்கமும் (மேற்படி அறிவு வழியும்) ஒத்த இடத்தில் தானே தோன்றுவது என்கிறார் வள்ளலார்.

மயங்குறாத மெய் விளங்கிய மாமணி விளக்கே ..

என் உள்ளே அறிவித்த உண்மையால் …

துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வதலால்

என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே, 

-என்கிறார் வள்ளலார்.

 

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்

இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்

மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்

விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய் மீட்டும்

இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்

இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ

பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்

பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.

நன்றி : ஆசிரியர் : APJ அருள் @ N. இளங்கோ 8778874134

************************************************************************

அன்பர்களே, 

நல்ல விசாரணையில் நாம் உறுதி செய்து, கருத்தில் கொண்டவை;

Ø  வள்ளலார் கண்ட உண்மை கடவுள் இயற்கை.

Ø  இறவாத இயற்கை உண்மையின் வடிவம் அறிவு.

Ø  அறிவின் திருவுருவம் ஒளி, அருட்பெருஞ்ஜோதி.

Ø  வெளியில் ஜோதிமயம், உயிருக்குயிர் ஒளியே.

Ø  அறிவால் அருளை பெறுவதே ஒரே வழி.

Ø  கருணை அருள் அனுபவம் என்பது இயற்கை விளக்கம்

Ø  எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்பும் என்ற கருணையே வழிபாட்டு சாதனம்.

Ø  ஒழுக்கம் நிரப்பி, ஆண்டவரே நீரே விரைந்து வந்து உண்மை தெரிவிக்க வேண்டுமென நினைந்து உணர்ந்து கண்ணீரால் நெகிழ்ந்து தொழுதல். இறவா நிலை நாம் பெறுவது லட்சியம்.  

Ø  நித்திய பேரின்ப வாழ்வை அருளுவது இயற்கை இன்பம்.  

unmai

Channai,Tamilnadu,India

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.