September 16, 2024
tamil katturai APJ arul

சமரச சுத்த சன்மார்க்கம்

Samarasa Suddha Sanmargam from vallalar urainadai book

கலை அறிவும் அருள் அறிவும்

பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலைஅறிவை, ஒருவன் அருள்முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்

ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்

சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.

ஷடாந்த சமரச சுத்த சிவ சன்மார்க்கம் என்பதில் ஷடாந்தம் என்பது யாது? வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன. மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விவரம்: வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.

இவற்றிற்கு அதீதம் ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரசசுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம். மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள் அநந்நியமாய் விளங்கும்; அந்நியமல்ல. மேற்படி சமயமத மார்க்கங்கள் எவை எனில், சமய சன்மார்க்கம் மதசன்மார்க்கம் என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பத்தாறு, விரிவு அறுகோடி. இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களில் காலப் பிரமான பரியந்த மிருக்கும்; அதற்குமேலிரா.

மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த சமரச முளதோவெனில்: உளது. யாதெனில்: வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப்பூட்டாகச் சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.

இதன் தாத்பரியம் யாதெனில்: சமரசம் என்பதற்குப் பொருள் – எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் குருதுரிய ஸ்தானம். சுத்த சமரச மென்பதற்கு நியாயம்: விந்து பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும். சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமரச சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று; ஆதலால் ஷடாந்த சமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.

சன்மார்க்கம் என்பதில் வகை தொகை விரிவு அனந்தம். இதன் தாத்பரியம் யாதெனில்: சமய சன்மார்க்கத்தின் பொருள் குணத்தினது லக்ஷியத்தை அனுசந்தானஞ் செய்வது. குணமென்பது யாது? சத்துவகுணம். இயற்கை உண்மை ஏகதேசமான சத்துவ குணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய மார்க்கம் யாதெனில்: சத்போதம், சத்கர்மம், சத்சங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சற்சனம், சற்செய்கை முதலியனவும் சத்துவ சம்பந்தம் உடையன. இதனியல்பாவன: கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரியநிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் வாச்சியானுபவம் பெற்றுச் சொரூபானுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.

சமயாதீத மாவது மதம். மத சன்மார்க்கத்தின் பொருள் நிர்க்குண லக்ஷியஞ் செய்வது. நிர்க்குணமாவது பூர்வகுண மாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதல். யாதெனில்: சோகம், சிவோகம், தத்வமசி, சிவத்துவமசி என்னும் வாக்கியத்தில் முக்கியானுபவம். அனுபவம் என்பது யாது?…. சத்துவகுண நிர்க்குண லட்சியத்திற்கு மார்க்கம் நான்கு: எவை எனில் சத்துவ குணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், இரண்டாவது புத்திரனாகப் பாவித்தல், மூன்றாவது சிநேகிதனைப் போலப் பாவித்தல், நான்காவது தன்னைப்போலப் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரனாதல், சிநேகனாதல், கடவுளேதானாதல். இது சத்துவகுண லட்சியார்த்த மாகிய மத சன்மார்க்க முடிவு.

சத்துவகுண விளைவு என்பதற்குப் பொருள் சத்துவகுணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வ சித்தியோடு ஞானசித்தியைப் பெறுதல். நெல்லை விதைத்தான் என்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்த்து அனுபவிக்கிற பரியந்தம் அடங்கியிருப்பதுபோல் சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருளெனக் கொள்க. குண நிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம். இம் மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.

சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில்: சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மதானுபவங்களைக் கடந்தது. சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை: அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம். இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலை பெறில் விளங்கும். ஏகதேசத்தில் ஒருவாறு பூர்வம் என்பதற்குப் பொருள்: சிருஷ்டியாதி அனுக்கிரக மீறாகச் செய்யும் பிரமாதி சதாசிவ மீறாகவுள்ள பஞ்ச கிருத்திய கர்த்தர்களி லொவ்வொரு கிருத்தியத்தின் விரிவு ஐந்தாக விரிந்த கர்த்தர் பேதம் இருபத்தைந்தாக விரிந்த மஹாசதாசிவாந்த அனுபவ காலத்தை அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய கால அளவு எவ்வளவோ அக்கால அளவு சுத்த மகா சதா சிவானுபவத்தைப் பெற்றுச் சுத்த தேகியா யிருப்பது. சத்தென்பது பரிபாஷை அது அனந்த தாத்பர்யங்களைக்கொண்டு ஓர் வாக்கிய பதமாய் நின்றது. மார்க்கம் என்பது யாதெனில்: துவாரம், வழி, வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். ஆதலால், எவ்வகையினும் உயர்வுடையது பாவனாதீத அதீதம், குணாதீதஅதீதம், லட்சியாதீதஅதீதம், வாச்சியாதீதஅதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கம்.

மேற்படி மார்க்கத்தின் ஏகதேசம் அடியிற் குறிக்கும் அனுபவங்கள்: எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமரவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யக்ஷானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மேற்குறித்த மார்க்கத்தின் முடிபு. ஒருவாறு சத் என்னும் சொல் பரிபாஷை என்பதற்குக் குழூஉக் குறியாக இதன் கீழ்வரும் சில மந்திர வாசக பதவர்ணாதிகளை உணர்க. காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும், காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி, ஓம் முதலியவும், காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட் ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும் இவ்வண்ணம் குறித்த பரிபாஷைகளின் உண்மை ஆன்ம அனுபவத்திலும் வகர தகர வித்தையிலும் விளங்கும்.

மேலும், மேற்குறித்த வண்ணம் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்காநின்ற விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள். சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும்.

சன்மார்க்க சங்கம்

சமரச வேத சன்மார்க்க சங்க மென்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலின் முடிவான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சத்புத்திர மார்க்கம், மித்திர மார்க்கம், சன்மார்க்கம்.

சத்திய மார்க்கம்

ஷடாந்தங்களினது அனுபவம் ஒன்றானாலும் காலம் இடம் முதலியவற்றால் அவை வேறுபடும். ஆதலால் ஷடாந்தங்களு மிப்போது வெளிக்கு வியாபகமில்லாம லிருக்கின்றன. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இந்த 2-ல் வேதாந்தத்தில் போதாந்தமும் யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்தமும், கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. ஆதலால் வேதாந்த சித்தாந்தமே சிறந்தது. வேதாந்த அந்தாதீத சித்தாந்த அந்தாதீத சுத்த சன்மார்க்கமே நீடூழி அழியாத சத்திய மார்க்கம்.

சமரசம்

சமரசமென்பது யாது? எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தில் நின்று மருவியதால் சமரசமாயிற்று. இதற்கு நியாயம்: விந்து பரவிந்து இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த விந்துவானது போலும்: சிவம் பரசிவம் இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது போலும்; சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இவ்விரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். ஆகவே ஷடாந்த சமரசசுத்த சன்மார்க்க மென்று மருவியது.

சத்துவகுண லட்சியம்

சன்மார்க்க மென்பது யாது? அது 3 வகைப்படும். சமய சன்மார்க்கம், மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம்.

சமய சன்மார்க்கமாவது சத்துவகுண லட்சியானு சந்தானம். சத்துவகுண சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய சேர்க்கை யெல்லாம் சன்மார்க்கம். அதாவது சத்போதம், சத்கர்மம், சத்ஸங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சத்ஜனம், சத்செய்கை முதலியவை சத்துவகுண சம்பந்தமானவையாம். சத்துவகுண இயல்பாவது கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்ணியம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இந்த உண்மையைக் கொண்டு சத்துவ குணத்தின் வாச்சியத்தை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்.

சமயாதீத மத சன்மார்க்கம் – நிர்க்குண லட்சியமாகிய சத்துவ குணத்தின் லட்சியார்த்தத்தைக் கொள்வது மத சன்மார்க்கம். அதாவது சோகம், சிவோகம், அவன், அவள், நான் என்னும் அனுபவம். அதாவது சத்துவகுணத்திற்கு மார்க்கம் 4. சத்துவகுணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், 2-வது புத்திரனைப் போல் பாவித்தல், 3-வது சினேகிதனைப்போல் பாவித்தல், 4-வது தன்னைப் போல் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாகுதல், புத்திரனாகுதல், சிநேகிதனாகுதல், கடவுளே தானாகுதல். இது சத்துவ குண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்கத்தின் முடிபு. சத்துவ குணத்தின் விளைவென்று சொன்னதற்குப் பொருள் சத்துவ குணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வசித்தியோடு ஞானதேகம் பெறுகிறவரையில் உள்ள அனுபவம் நெல் விளைத்தா னென்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்க்கிறவரையில் அதன் தாத்பரிய மடங்கி யிருப்பது போல்.

சுத்தம்

சுத்த சன்மார்க்கமாவது குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதங்களினது அனுபவமன்று. சுத்த சன்மார்க்க மென்பது சத் சன்மார்க்கமேயாம். சுத்தமென்பது ஒன்றுமில்லாதது. ஆதலால், சுத்தமென்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன் வந்தமையால், முன் சொன்ன சமயமதங்களைத் தாண்டினது. அதன் அனுபவங்களையும் கடந்தது.

சத்மார்க்கம்

சத்மார்க்கம் என்பதற்குப் பொருள் 4 வகை: பூர்வம், பூர்வ பூர்வம், உத்தரம், உத்தரோத்தரம். ஆதலால் இதன் முக்கிய லக்ஷ்யம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும். பூர்வம் என்பதற்குத் தாத்பரியம் ஒருவாறு: சிருஷ்டி, ஸ்திதி, சம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம் எனும் பஞ்சகிருத்திய தத்துவங்களைக் கர்த்தாவாக வழங்கி வருகிற பிரமா விஷ்ணு ருத்திரன் மயேசுரன் சதாசிவமென்னும் தத்துவங்களில், சிருஷ்டியில் சிருஷ்டி, மேற்படி ஸ்திதி, மேற்படி சம்மாரம், சிருஷ்டியில் திரோபவம், மேற்படி அனுக்கிரஹம் இதுபோல் 5 ஆக விரிந்த தத்துவங்கள் 25. இந்த இருபத்தைந்தையும் அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய காலம் எவ்வளவோ அவ்வளவு கால பரியந்தம் மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று, சுத்த தேகியாக இருப்பது. வருஷம் தொகை மொத்தம் ஒரு கோடி அறுபது லக்ஷம்.

சத்தென்பது பரிபாஷை. குழூஉக்குறிப் பெயர். அனந்த தாத்பரியத்தைக் கொண்டு ஓர் மொழியானது. மார்க்கமென்பது வழி. வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம். ஆகையால் எவ்வகையிலும் உயர்வுடையது சுத்த சன்மார்க்கம்.

சன்மார்க்கத்தின் ஏகதேசமென்பது எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது.

சர்வ சித்தி

சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36. அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்தினும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை யுண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா மூர்த்திகள் ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதொழிய, அதற்குமேல் இரா.

சமய மதங்களினும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம் இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப் பூட்டாக, சமரசசுத்த சன்மார்க்கமென மருவின. இதற்குச் சாதனம் ஒருவாறு ஷடாந்த சமரசம்.

ஆன்மாவுக்கு அனன்னிய அருள் எப்படியோ, அதைப்போல் சுத்த சன்மார்க்கத்துக்கு அனன்னியமாக இருப்பது சர்வ சித்தியாம். சத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று. ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1, சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3. ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3: சிற்சபை 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3. இவைகள் மூன்றுந்தான் படிகளாக இருக்கும்.

சுத்த தேகத்தினுடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம் விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாய் தெரிவிப்பார்.

பரிபாஷையும் சுத்த சன்மார்க்கமும்

பரிபாஷை – அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.

சாத்திய நிலை

சமய மத சன்மார்க்கிகளில் தாயுமான சுவாமிகளும் இன்னும் அனேக பெரியோர்களும் சுத்தப் பரப் பிரமத்தினிடத்தில் இரண்டறக் கலந்துவிட்டதாக முறையிடுவது வாஸ்தவமா அவாஸ்தவமாவென்றால், அவாஸ்தவம். சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும். என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிக ளாதலால், அவற்றில் ஐக்கிய மென்பதே யில்லை. தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர். மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்தியதேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.

சுத்த சன்மார்க்கக் கொள்கை

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி – தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளாகியவர் ஒரு தொழிலுடைய பிரமாவும், இரண்டு சித்தியுடைய விஷ்ணுவும், மூன்று சித்தியுடைய ருத்திரனும் – இதுபோன்ற மற்றையர்களும், மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகிற இது வரையிலுமுள்ள அணுக்கள் மேற்குறித்தவர்களது பதப்பிராப்தியை – மேற்படி அணுக்கள் – லேசம் பெற்றுக் கொண்டார்கள். ஆதலால் இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் சர்வ சித்தியையுடைய தனித்தலைமைக் கடவுளின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள. ஆதலால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியை யுடைய கடவுளுக்குக் கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள். ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது சன்மார்க்கக் கொள்கை. மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.

இதற்குப் பிரமாணம்: “சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்” என்னும் திருஅருட்பாசுரத் திருஉள்ளக்கிடையானும், “அறங் குலவு தோழி இங்கே”* என்னும் அருட்பாசுர உள்ளக் கிடையானும் பெரும்பதி தெரிவித்தார். இதன்றி, திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் “இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.

* திருஅருட்பா 5452, 5695

சன்மார்க்கக் கொள்கை

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசுசெய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக்கொண்டவன் பிரமன்; சிருட்டி, திதி, ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் விஷ்ணு; சிருட்டி, திதி, சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ருத்திரன். இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக்கின்றவர்கள் இவர்களை அந்தந்தச் சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்துவந்தார்கள். இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வசித்தியையுடைய கடவுள் சித்தியின் இலேசங்கள்; அதில் ஏகதேசம்கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்தச் சர்வசித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள். ஆகையால், சமயத்தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமயத் தெய்வங்கள் பெற்றுக்கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேறவேண்டிய படிகளெல்லாம் ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல், சர்வசித்தியையுடைய கடவுளொருவர் உண்டென்றும், அவரை உண்மையன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை யாண்டவர் தெரிவித்தார்.

ஆங்கீரச வருடம் ஆவணி மாதம் **. இதற்குப் பிரமாணம்: அருட்பிரகாச வள்ளலார் அருட்பாவில் “சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்” “அறங்குலவு தோழியிங்கே நீயுரைத்த வார்த்தை” என்னும் இரண்டு திருப்பாசுரங்களின் தாத்பர்யத்தால் காண்க.

96. சுத்த சன்மார்க்க முடிபு

சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை. சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி.

சாகாத கல்வி

வேதங்கள் முக்கியம் சாகாதகல்வியைச் சொல்லியிருக்கின்றன. தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.

சாகாக்கல்விக்கு ஏது

தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருடஞ் சீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்துகொண்டி ருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.

(வேறுகுறிப்பு) ஒருவன் இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருஷம் ஜீவித்திருப்பான். எப்போதுஞ் சலிப்பில்லாமல் சுத்தக் கரணமாய் அருள் வடிவாய்த் தானாக நிற்றலே சாகாக் கல்விக்கு ஏது.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் – இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.

* இவ்விடம் என்பது மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தைக் குறிக்கும். அடிகள் அங்கிருந்த காலத்திற் செய்த உபதேசம்.

 சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் புருஷார்த்தம்

நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு. அவையாவன:

ஏமசித்தி.

சாகாக்கல்வி.

கடவுணிலை யறிந்து அம்மயமாதல்.

தத்துவநிக்கிரகம் ஆக 4.

unmai

Channai,Tamilnadu,India