December 8, 2023
tamil katturai APJ arul

” சும்மா ” தானே இருக்கிறாய் ? சிந்தித்தால் என்ன?

unmai-visaram

” சும்மா ” தானே இருக்கிறாய் ?
சிந்தித்தால் என்ன?
— இ.
ஆம், ” கோரானா நோய் ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருப்பவன் நான்.

தூக்கம் கலைந்து எழுந்து, கடவுளை வணங்கி, டிபனை வயிற்றில் நிரப்பி, சந்தோசமா டிவியில் சினிமா, சீரியல், நண்பர்களிடம் செல்லில் பேசி, இடையில் கொடுக்க ப்பட்ட நொறுக்கு தீனிகள், மீதி படம், சூப்பர் சாப்பாடு, ஒரு குட்டி தூக்கம், அதை கலைக்க டீ, வடை, மீண்டும் டிவி, செல், புத்தகம் படித்து, சுவையான இரவு டிபன், டிவி, உறக்கம் வந்ததால் உறங்கச் சென்று, இங்ஙனம், இங்ஙனம் மட்டுமே நாள்கள் கடந்து செல்கிறது.

நேற்று இரவு வசூலில் சாதனை படைத்த படத்தை மீண்டும் பார்த்து தூங்கச் சென்றேன்.

ஒரு குரல்…

” சும்மா தானே இருக்கிறாய்.

கொஞ்சம் சிந்தித்தால்தான் என்ன? ”

யாரு என்றேன்?….

” யாராய் இருந்தால் என்ன, பதில் சொல்லு…”

— என்றது குரல்.

சும்மா நான்.. இருக்கலியே…என்றேன்.

“அடச்.. சீ…

சிந்தித்தாயா… சிறிதாவது”

— என்றது குரல்.

குரலுக்குரியவரை பார்க்க திரும்பினேன்… கட்டிலிருந்து கீழே விழுந்ததில், தெரிந்துக் கொண்டேன் ” கனவு ” என்று.

ஆனால் அந்த வார்த்தைகள்.

தினம் நான் செய்த வேலைகள்..??

காலை எழுந்தேன். கடவுளை வணங்கினேன்.

— இதில் என்ன சிந்திக்க வேண்டும்?

அடுத்து,

சாப்பாடு, டிவி யில் செய்தி, படங்கள் சீரியல்கள்.

— இதில் என்ன சிந்திக்க வேண்டும்?

அன்றைய இரவு வந்தது…..

படம் பார்த்ததால், மனம் பாதித்து, தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு..,
அதிகாலையே எழுப்பப் பட்டேன்.

எழுந்து,

நான் தினம் வணங்கும் தெய்வப் படத்தை கண்டேன்.

உற்று நோக்கினேன். இந்த உலகில் எத்தனையோ சமயமதங்கள்,மார்க்கங்கள் உளது. அதில் பல்வேறு கடவுளர்…..
ஆம்,
தனிமையும், பொழுதும் என்னை உள்ளழுந்தி சிந்திக்க வைத்தது. என் அறிவை இன்று தான் உணர்ந்தேன். என்னுள் ஒரு விசாரம் தானாகத் தொடங்கியது.

……….

எனக்கு காட்டப்பட்ட கடவுளரிடத்தில் நம்பிக்கை கொண்டு தினம் வணங்கி வந்தேன்.

ஆனால்,

கடவுளை பற்றி நான் சிந்திக்கவே இல்லையே ?

உலகில் எண்ணிலடங்கா சமயமத மார்க்கங்கள். அவற்றில் பல கடவுளர்.
இந்த கடவுளர் மத்தியில்
உண்மை கடவுள் யார்? அக்கடவுளின் உண்மை என்ன?
சாதி சமயங்களில் நான் வைத்த பற்று, கொடுக்கும் காணிக்கை, பலி,
செய்யும் வழிபாடு, சடங்கு சம்பிரதாயம்,
இவை சரியா? நான் வணங்கிவரும் கடவுளின் உண்மை தன்மை என்ன?

இதற்கு ஏன் ஆசைப் படவில்லை இது நாள் வரை?

எது என்னை தடுத்தது?

அமைதியாக ஆழ்ந்தேன்.

………

“எனது அன்றாட நிகழ்வுகள்”

# டிவி #

(சில (டிவி-) நிகழ்ச்சிகளை தவிர)

திரையில் காட்டப்பட்டதில் அனைத்துமே காதல், ஆடல் பாடல், குரோதம், காமம், சாதி, சமயமதம், அதிகார வர்க்கம், அரசியல்,வறுமை, இவையில் ( காட்டப்பட்ட காட்சியால்) ஏக்கம், பக்தி,கோபம், வெறி, தவிப்பு, வருத்தம் இவையாவும் என்னுள் பதிந்து நினைவில் நீடிக்கிறது. திரைகாட்சி தானே இது.

ஆனால், கதாநாயகன் வந்து சரி செய்தது போக,

என்னுள் காமம்,பக்தி, சாதி சமயம், அரசியல் வெறி, குரோதம் இவை பதிந்து தங்கியது எப்படி?

……..

நான் தெய்வப் பற்று கொண்டிருந்தாலும்,

இன்று என்னுள்…,

உண்மை கடவுள்,
கடவுளின் உண்மை நிலை, என் நிலை,
என்னை சுற்றியிருக்கும் இயற்கையின் திறங்கள்,

– இவை குறித்து நான் தெரிந்து கொள்ள, காண இப்ப ஆசை வந்தது.

இது நாள் வரை “சும்மா” இருந்து விட்டேனே!

இப்ப என் நினைவுக்கு வருகிறது, வள்ளுவரின் குறள்:

” எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ”

அப்படியெனில்,
கண்ணால் கண்டது?
காதால் கேட்டது?

இதற்கு குறள் பதில்..?

” எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ”

ஆமாம்..
எங்க தாத்தா எனக்கு சொன்ன பழமொழி ஞாபகம் இப்ப வருது…

“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்”

வள்ளலாரும் இதை தான்
சுட்டி காட்டினாரா?
பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த பாடல்:

” கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.”

சரி…
சிந்திக்க யார் துணை நாட?

இன்று இந்த சிந்தனையை செய்தது நான் தானே!

பதில் கிடைத்ததும் என்னிடம் தானே!.

ஆம்,

” நோய்க்கும் மனித செயலே காரணம். அந்நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பவனும் மனிதனே.”

எல்லாம் என்னிடமே.

இது எல்லோரிடத்திலும். எல்லோரிடத்திலும் அகம் ஒரே மாதிரி.

அப்படி என்றால் கொடுத்தவர் ஒருவரே!
ஆனால்,
மனிதன் வெளிப்படுத்தும் தன்மையில் பல்வேறாக உள்ளதே?

அது அவரவர் பெற்ற அறிவு அடிப்படையில்! இது புறம்.

ஆனால், அகம் ஒன்றே..?

நாம் பெற்ற அறிவில் சிந்தித்து, விசாரம் செய்தால் அக அறிவு தோன்றும். ஆக, “அறிவை விருத்தி செய்தல், விருத்திக்கு விசாரம் செய்தல்”

இதுவே,

மனிதன் மட்டும் பெற்றிருக்கும் ஆறாம் அறிவு ஆகும்.

ஆகா, நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேனே!

இதுவரை இந்த சிந்தனையை என்னிடம் தடுத்தது எது?

கற்பனை திரை காட்சிகள், காம, குரோதம், பொய்யான சாதி, கருணையின்மை, தீர்மானமாக கொண்ட கட்டுப்பாட்டு சமய ஆசாரம், இவையே.

“விட்டு விட்டேன்” அவற்றை இந்த நிமிடம் முதல்.

ஆகா..,

அருமை…அருமை..

மீண்டும் ஆழ்வோம் சிந்தனையில்….
உண்மை உணரும் வரை.

…….

அது.. என்ன சத்தம்….??

” ஏங்க.. உங்களத்தானே, என்ன செய்றீங்க…,
” சும்மா ” தானே இருந்தீங்க, பால் வாங்கி வைத்திருக்கலாமே..எதுவும் செய்ய மாட்டாராம்,
ஆனா..
உடனே காப்பி கேட்பீங்க, அப்பறம் டிவி, செல்லு, டிபன்,அப்பறம் தூக்கம்..
அடச்.. சீ.. ”

அதற்கு நான்:

” இல்லம்மா.. சிந்திஞ்சிட்டு இருந்தேன்….”

” என்னது?.. நான் தான் பார்த்தேனே..”சும்மா” இருந்துட்டு சிந்திஞ்சிட்டு இருந்தாராம் … சரி.. இன்னிக்கு நீங்க வேலையை பாருங்க.. நானும் உங்கள மாதிரி கொஞ்ச சிந்திக்கிறேன்…”

….!!! ???

நன்றி:

நா.இ., மதுரை.

ஆமாம் நாம் சிந்தித்ததை “சும்மா ” என்றாலே?

” சும்மா ” ன்னா என்ன? சாரி..சாரி.. “சும்மா”

முடிந்தது.
( ஆனால் விசாரம் தொடங்கியது) — N.E.

# கோரானா
பணியில் அயராது உழைத்து வரும் கருணையாளர்கள் அனைவருக்கும், எங்கள் அன்பரின் இக்கட்டுரையை சமர்ப்பித்து, நன்றியுடன் வணங்குகிறோம்.
? ஏபிஜெ அருள்,
கருணை சபை சாலை, மதுரை.

unmai

Channai,Tamilnadu,India