உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
மாண்புமிகு திரு து.அரிபரந்தாமன் அவர்கள்

மதுரை கருணை சபை-சாலை நடத்திய முப்பெரும் விழாவில்
ஆற்றிய உரையில் முக்கிய சிலப்பகுதிகள்:

அனைவருக்கும் வணக்கம்.
எல்லோரும் பேசினார்கள் வள்ளலாரை போற்றியும்,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்றார்கள்.
நான் அப்படி இல்லை. ஆனால் வள்ளலாரை நீங்கள் ஒரு கோணத்தில் பார்க்கிறீங்க. நான் ஒரு கோணத்தில் பார்க்கிறேன். நீங்கள் எந்தளவுக்கு வள்ளலாரை நேசிக்கிறீர்களோ அதுக்கு குறைவாக நேசிக்கவில்லை. உங்கள் அளவுக்கு படிக்காவிட்டாலும் ஒரளவு வள்ளலாரை பற்றி தெரிந்துள்ளேன்.
சுவாமிகள் என்று தன்னை அழைப்பதை வள்ளலார் எடுக்கச் சொன்னார்கள். தான் ஒரு ஆசாமி என்கிறார். வேலாயுத முதலியார் போன்றோர் வள்ளலாரிடம் மன்றாடி பாடல்களை பெற்று தான் வெளியிட்டார்கள். அவரை சாமியாக்கினால் அவர் மார்க்கம் மதமாகி விடும். நான் அவரை தமிழ் தேசியத்தின் ஒர் அடையாளம் என்கிறேன். சாதி சமயங்களை தூக்கி எறிய வேண்டும். பெண்கள் கணவரை இழந்தால் தாலி அறுக்க வேண்டாம். (அப்படியென்றால் தாலி போடவும் தேவையில்லை என்று பொருள். போட்டாலும் அறுக்க தேவையில்லை.) இங்ஙனமாக 19ம் நூற்றாண்டில் ஒலித்த ஒரு கலக குரலே வள்ளலார் குரல். அது புரட்சி குரல். மன்னிக்க வேண்டும். நான் ஒரு நாத்திகன். அதானால் வள்ளலாரை ஒரு புரட்சிக்காராகப் பார்க்கின்றேன்.
நீங்கள் இந்த 21ம் நூற்றாண்டில் பார்க்காதீர்கள். 19ம் நூற்றாண்டை பாருங்கள். அந்த நூற்றாண்டில் சாதியை, சமயங்களை, மதங்களை, ஆச்சாரங்களை, வேதத்தை, புராணத்தை, இதிகாசத்தை,மூடப்பழக்கங்களை மறுத்து, ஓங்கி ஒலித்த முதல் குரல் வள்ளலாரின் குரல். இந்தியாவில் ஒலித்த முதல் குரலும் வள்ளலார் குரலே. அடுத்ததாக சொல்ல வேண்டுமானால் கேரளத்தில் நாராயணகுரு. அவர், மனிதனே,உனக்கு மனிதன் தான் சாதி; மனிதனே மதம்; மனிதன் தான் கடவுள்; என்றார்.
வள்ளலாரின் ஆறாம்திருமுறை பாடல்களை தந்தை பெரியார் குடியரசில் பல முறை பதித்து வந்துள்ளார். அக்காலத்தில் மதமும் அரசும் பிண்ணி பிணைந்து கிடந்தது. மன்னர், ராஜாக்கள் மக்களிடையே பெயர் வாங்கிருக்கலாம். ஆனால் அரசு ஏதாவது ஒரு மதம் சார்ந்திருந்தது. சாதியை சாடியதில் வள்ளலாரை போல் யாரும் இல்லை. சாதிகள் குறித்து சமய, மதங்களில் தான் எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்தை விட 19 ம் நூற்றாண்டில் சாதி இறுகிப் போயிருந்தது. மடங்களில் மட்டுமே கல்வி இருந்தது. எல்லோரும் போய் படிக்க முடியாது. அங்கு சமய நூல்கள் தான் கற்றுக் கொடுக்கப்பட்டது. சங்க இலக்கியங்களோ, திருக்குறளோ, சிலப்பதிகாரமோ, சொல்லிக் கொடுக்கப்படவில்லை. இது குறித்து வ.உ.சாமிநாத அய்யர் அவர்கள்(ஆனந்த விகடனில் வந்தது) எழுதிய சரித்திரத்தில் காணலாம். சேலம் இராமசாமி சாமி நாத அய்யரிடம் பேசும் போது இவை குறித்து காணலாம்.
இந்த நேரத்தில் வள்ளலார் திருக்குறள் போதித்தார் என்பது சிறப்பு. அன்பு, அருள், கருணை, வாய்மை, புலால் உண்ணாமை, கொல்லாமை, இவைகள் வழிக்காட்டுதலாக உள்ளது. மற்றொரு பிரச்சனையும் 19 நூற்றாண்டில் இருந்தது. வடமொழியின் ஆதிக்கம். வடமொழியின்றி தமிழ் மொழி இயங்காது என்று சிலரால் சொன்ன நேரம். அந்த நேரத்தில் வள்ளலார் தமிழ் மொழி தனித்து இயங்கும் என்கிறார். அவரின் தமிழ் பற்றுக்கு தலை வணங்க வேண்டும். சங்கராச்சாரியாரும் வள்ளலாரும் சந்தித்ததாக சொல்கிற போது, சங்கராச்சாரியார், வடமொழி தான் அனைத்து மொழிக்கும் மாத்ரூ பாஸை (தாய் மொழி) என்கிறார். அதற்கு அதை எதிர்க்காமல் அமைதியாக வள்ளலார் சங்கராச்சாரியாரிடம் வடமொழி மாத்ரூ (தாய்) மொழியென்றால், தமிழ் மொழி பித்ரு பாஸை அதாவது தந்தை மொழி என்று பதில் கொடுத்தார்.
19 நூற்றாண்டில் கோயிலுக்குள் எல்லோரும் போய் விடமுடியாது. சாதியும் சமயமும் அதுவும் சாதியினால் பல பாதிப்புகள் இருந்தது.ஆனால், அவர் கட்டிய ஞான சபையிலே, தர்ம சாலையிலே, சித்தி வளாகத்திலே எந்த சாதியினரும், எம்மதத்தவரும், எச்சமயத்தவரும் எல்லோரும் வந்து தரிசிக்கலாம் பிரார்த்தனை செய்யலாம். இந்த செய்கையினால் தான் வள்ளலாரை நோக்கி என்னை தள்ளியது. ஞானசபையினுள் சாதி சமய வேறுபாடில்லாமல் கருணை அன்பு இரக்கம் உடையவர்கள், புலால் உண்ணாதவர்கள் எல்லோரும் வரலாம் என உள்ளது. ஆனால் அந்த கண்டிஸன் கூட இல்லாமல், தர்ம சாலைக்கு பசித்த எவரும் வரலாம் என்று உள்ளது. என்னை பாதித்த பாடல்கள் எவை எனச் சொல்ல முற்பட்டால் நேரம் காணாது. சாதி, சமயம், சாத்திரங்கள் தவிர்த்து கடவுளை கருணை, தயவு, இரக்கத்தால் மட்டுமே வழிபாடு செய்ய வேண்டும் என்ற அவரின் சமரச சுத்த சன்மார்க்கம் 1874 க்கு சில ஆண்டுகள் முன்பிலிருந்து தான். அதற்கு முன் அவர் பழுத்த சைவ சமயம். அந்த சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு பாடியது மேலும் பல ஸதலங்களுக்கு சென்று பாடிய சமய ஸ்தோத்திரப் பாடல்கள் தான் 1 முதல் 5 திருமுறையில் அதிகம் உண்டு. இதற்கு வள்ளலார் சொல்கிறார் அதன் பால் சைவ சமயத்தின் பால் நான் கொண்ட அளவில்லா அன்புகளுக்கு எனது ஸ்தோத்திரங்களே சாட்சியாக இருக்கும். அப்போது நான் சிற்றறிவாக இருந்தேன் என்கிறார். அவைகளில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்.
ஒருமையுடன் என்ற பாட்டை நான் பாடுவேன். அதில் கடைசி வரியை விட்டுவிடுவேன். எத்திராஜ் கல்லூரியில் இது தான் கடவுள் வழிபாடாக உள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர் மீது எனக்கு கோபம் கிடையாது. கருணை, அன்பு, உண்மை பேசுதல் வேண்டும், இரக்கம் வேண்டும் என்கிறார்கள். இன்று மாட்டை கொல்ல கூடாது என்கிறார்கள். மாட்டை மட்டும் ஏன் கொல்லக் கூடாது என்கிறார்கள்?. வள்ளலார் எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்கிறார்.
நான் பேசும் இந்த இடம் ஒரு மகானின் ஆலயம் என்றார்கள். செருப்பு போட்டு மேலே ஏறக்கூடாது என்ற பலகையில் உள்ளதைக் கண்டு கழற்றி விட்டு தான் ஏறினேன். வள்ளலாரை சைவ நெறியில் அடக்கி விட்டார்கள். அவருக்கு பட்டை போட்டு விட்டார்கள். பட்டை போடக் கூடாது என்று சொல்லவில்லை. என் அப்பா கடைசி வரை பட்டை போட்டிருந்தார்கள். ஆனால் வள்ளலார் சைவ சமயத்தை விட்டு விட்டார்கள். அதணால் தான் அவருக்கு பட்டை போடாதீர்கள் என்கிறேன். வள்ளலார் மேலும் சொல்றதை கேட்டா புரியும். காதிலே, மூக்கிலே கம்மலுக்காக ஓட்டை போடும் சடங்கு கடவுளுக்கு சரியென்றால் மற்ற ஓட்டைகளை போட்டு அனுப்பினதை போல் இதற்கும் ஓட்டை போட்டியிருக்க மாட்டாரா? என்கிறார் வள்ளலார். சாதி, சமய சாத்திரங்களை மறுத்தவருக்கு விக்கிரக வழிபாட்டை முடியாது என்று சொன்னவருக்கு என்ன எல்லாம் நடந்து வந்தது?. இங்கு இருக்கும் ஏபிஜெ அருள் மற்றும் அவர் அன்பர்கள் வழக்கிட்டு மீட்டார்கள். நல்ல காலம் அருள் மற்றும் நீங்கள் சொன்னதை, வள்ளலாரின் நெறியை, இணை ஆணையர் புரிந்துக்கொண்டு ஆணையிட்டார். அதை திரு பிச்சாண்டி உறுதிபடுத்தி அதன்பின்பு நீதிபதி திரு சந்துரு தனது தீர்ப்பில் உறுதி படுத்தினார். அதணால் தான் சொல்கிறேன்.வள்ளலாரை மீண்டும் சைவ சமய சிறைக்குள் அனுப்பி விடாதீர்கள்.
நீங்கள் வள்ளலாரின் கொள்கையை தொடர்ந்து பேசுங்கள்
எனக் கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன். வணக்கம்.

 

unmai

Channai,Tamilnadu,India