March 19, 2024

Vallalar

ஞானசரியை பாடல்கள் – வள்ளலார் தனது அறையில் வைத்து வழிப்பட்ட தீபத்தை வெளியில் வைத்து ,இதனை “தடைபடாது ஆராதியுங்கள்”  எனவும், தீப முன்னிலையில்,  28 பாடல்களையும்  தெய்வம் விளங்குவதாக பாவனை செய்து வழிபட வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தி உள்ளார்கள்(இது வள்ளலார் நமக்கு இட்ட கட்டளை).

ஞானசரியை பாடல்களை கேட்க –  https://www.atruegod.org/audio/

To Download this page:

https://www.atruegod.org/wp-content/uploads/2016/06/Vallalar-வள்ளலார்-சுத்த-சன்மார்க்கம்-–-கடவுள்-ஒருவரே-சாகாகல்வி.pdf

ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்)
Gananasariyai (vāypaṟai ārttal)

1. நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே 
  நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு 
  நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான 
  நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
  வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர் 
  மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
  புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் 
  பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

2. புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான் 
  புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர் 
  உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் 
  உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே 
  மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே 
  மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே 
  தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே 
  சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.

3. பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் 
  பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே 
  துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே 
  துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் 
  தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க 
  சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று 
  கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே 
  காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.

4. கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே 
  கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே 
  உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே 
  உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே 
  விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க 
  மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே 
  எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் 
  இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே. 

5. இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம் 
  எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம் 
  அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம் 
  அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப் 
  பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான 
  பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே 
  வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின் 
  மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.

6. தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச் 
  சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை 
  ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய் 
  அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர் 
  ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த 
  ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை 
  நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர் 
  நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே. 

7. நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ 
  நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ 
  சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித் 
  தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான் 
  சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச் 
  சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த 
  ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின் 
  உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.

8. விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே 
  மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர் 
  திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும் 
  செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய 
  வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே 
  வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர் 
  கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக் 
  கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே. 

9. களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம் 
  களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம் 
  தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே 
  செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர் 
  ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன் 
  ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன் 
  அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே 
  ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.

10. ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான் 
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன் 
  ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான் 
  எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான் 
  தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத் 
  திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே 
  மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர் 
  முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே. 

11. அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர் 
  அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம் 
  கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே 
  காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம் 
  இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர் 
  யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன் 
  உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா 
  ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே. 

12. திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச் 
  சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு 
  வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து 
  வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல் 
  பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப் 
  பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே 
  கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர் 
  கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.

13. உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
  உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
  எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான் 
  என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர் 
  தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில் 
  சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக் 
  கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும் 
  கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.

14. தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த் 
  தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை 
  வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே 
  வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத் 
  தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச் 
  சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர் 
  ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும் 
  உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.

15. சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம் 
  தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
  நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
  நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
  அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன் 
  ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
  சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
  சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.

16. நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை 
  நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை 
  எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை 
  என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை 
  சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும் 
  செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர் 
  முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண 
  முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.

17. முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும் 
  முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே 
  இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும் 
  எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர் 
  துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம் 
  தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர் 
  பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப் 
  படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

18. சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர் 
  சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
  இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ 
  தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
  அகமறியீர் அனகமறிந் தழியாத ஞான 
  அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
  முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
  முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.

19. நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
  நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
  வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான் 
  வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே 
  தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர் 
  தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும் 
  ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் 
  யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே. 

20. குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின் 
  கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் 
  வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது 
  மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர் 
  பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில் 
  புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின் 
  செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின் 
  சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.

21. சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத் 
  திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம் 
  ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் 
  உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே 
  வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ 
  மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா 
  சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர் 
  தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.

22. செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் 
  திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை 
  மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம் 
  மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் 
  வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன் 
  மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் 
  பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே 
  புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.

23. பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான் 
  புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே 
  மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே 
  மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே 
  பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில் 
  பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே 
  அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை 
  அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே. 

24. மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் 
  மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ 
  சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே 
  சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை 
  எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும் 
  இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர் 
  பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம் 
  பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே. 

25. இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் 
  இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர் 
  மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு 
  மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர் 
  சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம் 
  சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே 
  பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு 
  பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.

26. உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே 
  உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர் 
  கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர் 
  கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ 
  சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது 
  தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன் 
  இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின் 
  என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.

27. சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத் 
  தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை 
  நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க 
  நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப் 
  புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான 
  பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை 
  அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய் 
  அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே. 

28. சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே 
  சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை 
  நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம் 
  நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி 
  ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை 
  எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை 
  ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின் 
  உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
Vallalar Apj Arul Karunai

ஆம் வள்ளலாரின் “சத்திய சிறு விண்ணப்பம்” அசல் ஆவணம் சென்னை தனியாரின் ஆவண காப்பகத்தில் இருப்பதை அறிந்து அங்கு நண்பர் ரவியுடன் சென்றேன். விண்ணப்பத்தினை கண்டவுடன் அழுதேன்.நண்பரும் கண்கலங்கி அதை தொட்டு வணங்கினார்.
ஆவண காப்பக உரிமையாளரிடம் இது மிகப்பெரிய பொக்கிஷம் பாதுகாத்து வையுங்கள் என்று வணங்கி வேண்டினோம். அதன் ஸ்கேன் காப்பியை தான் இங்கு தரப்பட்டுள்ளது.
அன்புடன் ஏபிஜெ அருள்.

சத்திய சிறுவிண்ணப்பம்-Download Link

 
 
  

வள்ளலார் அருளிய விண்ணப்பங்கள்(4)

அருட்பெருஞ்ஜோதி       அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

1. சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்.

இயற்கை உண்மையரென்றும்,
இயற்கை அறிவினரென்றும்,
இயற்கை இன்பினரென்றும்,
நிர்க்குணரென்றும்,
சிற்குணரென்றும்,
நித்தியெரென்றும்,
சத்தியரென்றும்,
ஏகரென்றும்,
அநேகரென்றும்,
ஆதியரென்றும்,
அமலரென்றும்,
அருட்பெருஞ்ஜோதியரென்றும்,
அற்புதரென்றும்,
நிரதிசயரென்றும்,
எல்லாமான வரென்றும்,
எல்லாமுடைய வரென்றும்,
எல்லாம் வல்லவரென்றும்,

குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த

“திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்”

துதித்தும்,
நினைத்தும்,
உணர்ந்தும்,
புணர்ந்தும்,
அனுபவிக்க விளங்குகின்ற “தனித்தலைமை பெரும் பதியாகிய பெருங்கருணை கடவுளே!”

தேவரீரது திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியோமாகிய யாங்கள் சிற்றறிவாற் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களைத் திருச்செவிக் கேற் பித்தருளி யெங்களை இரஷித்தருளல் வேண்டும்.

எல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும், எல்லா தலைவர்களும் அறிந்து கொள்வதற்கு மிகவு மரியதாய், எல்லாத் தத்துவங்களுக்கும், எல்லாத் தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த ஞான வெளியில் தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதுங் குறிக்கப்படாத தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதியராகி விளங்குகின்ற தேவரீரது தனிப்பெருந் தன்மைக்கு மெய்யறிவுடையோரால் விதிக்கப்பட்ட வேதாகமங்களும் பெருந்தகை வாசகத்தைப் பெறாது சிறுதகை வாசகங்களைப் பெற்றுத் திகைப்படைகின்றன என்றால், மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேமாகிய யாங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பித்தற் குரிய பெருந்தகை வாசகத்தை எவ்வாறறிவோம்! எங்ஙனஞ் செய்வோம்! ஆகலில், கருணாநிதியாகிய கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி யெங்களைக் காத்தருளல் வேண்டும்.

அஞ்ஞானத்திற் பயின்று:

தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே அஞ்ஞான விருளில் அஞ்ஞான வுருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்திற் பயின்று ஏதுந் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங்கருணையாற் பவுதீக உடம்பிற் சிறிதளவு தோற்றி விடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும், அது கொண்டு அறிவே வடிவாய், அறிவே யுருவாய், அறிவே பொறியாய், அறிவே மனமாய், அறிவே யறிவாய், அறிவே யனுபவமாய் அனுபவிக்க தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே யுருவாய்க், குற்றமே பொறியாய்க், குற்றமே மனமாய்க், குற்றமே அறிவாய், குற்றமே அனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய் குற்றமே குறிக்குமென் றறிந்தோமாயினும், குற்றங்குறியாத வகை விண்ணப்பஞ் செய்வதற்கு ஒருவாற்றானு முணர்ச்சி யில்லோ மாதலிற் றுணிவு கொண்டு விண்ணப்பிக்கிறோம். குற்றங்களையே குணங்களாகக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கியற்கையாதலின் இவ்விண்ணப்பங்களிற் குற்றங்குறியாது கடைக்கணித்தருளிக் கருணை செய்தல் வேண்டும்.

அஞ்ஞான விருளில் ஒன்றுந் தெரியா துணர்ச்சி யின்றிக்கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே,

தாவரயோனி வர்க்கம்:

இவ்வுளகினடத்தே புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று முதலியவாகவும் பிறந்து பிறந்து, களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல், கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தாவரயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,

ஊர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கம்:

பின்னர் எறும்பு, செல், புழு, பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும் தவளை, சிறுமீன், முதலை, சுறா, திமிங்கிலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து, தேய்ப்புண்டல், நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்வூர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,

பறவையோனி வர்க்கம்:

பின்னர் ஈ, வண்டு, தும்பி, குருவி, காக்கை, பருந்து, கழுகு முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல், உலைப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்திறந்து அப்பறவையோனி வர்க்கங் களெல்லாஞ் சென்று சென்று உழன் றுழன்று அலுப்படைந்தேம்;

விலங்குயோனி வர்க்கம்:

பின்னர் அணில், குரங்கு, நாய், பன்றி, பூனை, ஆடு, மாடு, யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிறந்து பிடியுண்டல், அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து அவ்விலங்குயோனி வர்க்கங்க ளெல்லாம் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படைந்ததேம்;

தேவயோனி வர்க்கம்:

பின்னர் பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர், சுரர் முதலியராகப் பிறந்து பிறந்து, அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைபடுதல் முதலிய பல்வேறு அவத்தை களால் இறந்து இறந்து அத்தேவயோனி வர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன் றுழன்று அலுப்படைந்தோம்;

நரகயோனி வர்க்கம்:

பின்னர் காட்ட கத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியராக பிறந்து பிறந்து பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படந்ததேம்.(1)

கைமாறு:

அங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் களைப்பும் துன்பமும், திருவுளத் தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெருதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைமாறு ஒன்றுந் தெரிந்தோ மில்லை.

உயிர்களின் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!

வீண்போது:

இம்மனித தேகத்திற் செலுத்திய காலத்திலும் தாய் வயிற்றிலும் சிசுப் பருவத்திலும் குமாரப் பருவத்திலும் பல வேறு அவத்தைகளால் அறிவின்றி யிருந்தோமாகலில், தேவரீர் பெருங்கருணை திறத்தை அறிந்து கொள்ளாமல் வீண்போது கழித்தோம்.

ஓர் உண்மை கடவுள்:

அப்பருவங்கள் கழிய இப்பருவத்தினிடத்தே, எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருட்களையும், மற்றை யெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும்(2), எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மை கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்திங்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள்ளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும், எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட வுணர்த்தியருளப் பெற்றோம்,

எஞ்ஞான்று செய்வோம்:

அவ்வுணர்ச்சியைப் பெற்றது தொடங்கிக் கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம்? கடவுள் திருவருள் விளக்கம் எந்நாளடைவோம்? மரணம், பிணி, மூப்பு, முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும்? என்று மழியாத பேரின்ப சித்தி எக்காலங் கிடைக்கும்? என்று எண்ணி யெண்ணி வழிதுறை தெரியாமல் வருந்திநின்ற தருணத்தே.

ஓர் ஞான சபை காணுதல்:

களைப்பறிந்துதவுங் கருணைக் கடலாகிய கடவுளே! தேவரீர் நெடுங்காலம் மரண முதலாகிய அவத்தைகளால் துன்பமுற்றுக் களைப்படைந்த உங்களை அவ்வவத்தைகளினின்றும் நீக்கிக் களைப்புங் கலக்கமுந் தவித்து அழியாத பேரின்ப சித்தியை அடைவித்தற் பொருட்டாகவே பூர்வஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதிபுரமென்று குறிக்கப்படுகின்ற உத்திரஞான சித்திபுரத்தில் யாம் அளவுகடந்த நெடுங்காலம் சித்தியெல்லாம் விளங்கத் திருவருள் நடனம் செய்வோ மென்றும் அது தருணம் மிகவும் அடுத்த சமீபித்த தருண மென்றும், “அப்பதியினிடத்தே யாம் அருள் நடனம் புரிதற்கு அடையளாமாக ஓர் ஞான சபை காணுதல் வேண்டு” மென்றும் திருவருட்குறிப்பால் அறிவித்தது மன்றி, அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாதோர் தடைகளுமின்றி அத்திருஞான சபையையுந் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையை கருதுந்தோறும் பெருங்களிப்படைகின்றோம்.

இனி அத்திருஞான சபையை அலங்கரித்தல் வேண்டுமெனக் குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்க தொடங்குகின்றோம்.

அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் அருளுருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள செய்யும் இவ்வலங்காரத்திருப்பணியில் எவ்விதத்தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணஞ் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தருளல் வேண்டும்,

சர்வ வல்லபராகிய தனித்தலைமை கடவுளே!

அத்திருவலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மையின்பத்தை அளித்துச் சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!
தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

==============================================================
2. சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்:

இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ வெளியில், இயற்கைவிளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி செரூபராய், இயற்கைஇன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக்கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே!
அறிவு என்பது ஒரு சிறிதுந் தோற்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில் நெடுங்காலம் சிற்றணூப்பசுவாகி அருகிக்கிடந்த அடியேனுக்கு உள்ளொளியாகி இருந்து அப் பாசந்தகாரத்தின்றும் எடுத்து எல்லாப் பிறப் புடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய ஆறறிவுள்ள இம்மனிதப் பிறப்புடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரதுதிருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்ஙனம் அறிவேன்! எவ்வாறு கருதுவேன்! என்னென்று சொல்வேன்!

எல்லாம் உடைய இயற்கை விளக்க கடவுளே! தாய் கருப்பையில் சோணிதத் திரளில் சேர்த்து என்னை ஓர் பூதப் பேரணு உருவில் பெருகி வெளிப்பட இருத்திய காலத்திலும் எனக்குள் உள்ளொலியாகியிருந்து அப் பூதப் பேரணு உருவைச் சிருட்டித் தருளினீர். அன்றிப் புறத்தில் எவராலும் சிறிதும் சகிக்கப்படாத அதன் அசுத்தம் அருவருப்பு துற்கந்தம் முதலியவற்றைப் பொறுத்து அச்சோணிதத் திரளில் ஓர் ஆவி உருவாகியிருந்து அத்திரளினுள்ள பல்வகை விரோத தத்துவங்களால் சிறிதும் தடைபடாமல் என்னுருவைக் காத்தருளினீர்.அன்றியும் அவ்விடத்து எதிரிட்ட துரிசுகள் எல்லாவற்றையும் நிக்கிரகஞ் செய்தருளினீர். அன்றி அங்ஙனம் பூத்த ஆன்ம சத்திக் கலைகள் வாட்டமடையாது வெளிப்பட்டு விளங்க வளர்த்தருளினீர். அன்றியும் தாய் கருப்பையினிடத்துப் பூதப் பேரணு உருவில் கிடந்த என்னை அக்கருப்பையில் பவுதிக பிண்ட வடிவில் இருத்தும் வரையில் நச்சுக்கிருமி நச்சுக்காற்று நச்சுச்சுவாலை முதலிய உற்பாத வகைகளால் எனது பூதப்பேரணுஉருச் சிதறி வேறுபடாமலும் காத்தருளினீர்.

அன்றியும் தாய் கருப்பையில் பவுதிக பிண்ட வடிவில் என்னை இருத்திய காலத்திலும் எனது இச்சை ஞானக் கிரியைகளை வெளிப்படுத்துதல் முதலிய உபகரிப்பு அதிகரிப்புகளுக்கு உரிய உபயோக தத்துவ உறுப்புகள் எல்லாவற்றையும் குறைவின்றி வகுத்தமைத்து வளர்த்துக் காத்தருளினீர். அன்றியும் அடியேன் தாய் கருப்பையில் பிண்ட வடிவில் கிடந்த காலத்து இரும்பில் பெரிதும் கடினமுடையதாய் இருட்குகையில் பெரிதும் இருளுடையதாய் மிகவும் சிற்றளவுடையதாய் அசுத்தம் முதலியவற்றால் நிரம்பிய அக்கருப்பையினுள் நெருக்கத்தாலும் வெப்பத்தாலும் புழுங்கிய புழுக்கத்தினால் வருந்தி வருந்திக் களைத்தபோ தெல்லாம் அங்ஙனம் அமுதக் காற்றை அடிக்கடி மெல்லென வீசுவித்து அவ்வருத்தமும் களைப்பும் தவிர்த்துக் காத்தருளினீர். அன்றியும் தாய் கருப்பையில் பிண்ட வடிவில் கிடந்து பசியினால் பரதவித்து மூர்ச்சித்த போதெல்லாம் பூதகாரிய அமுதத்தை எனக்கு ஊட்டுவித்துப் பசியை நீக்கி மூர்ச்சை தெளிவித் தருளினீர். அன்றியும் தாய் கருப்பையில் பிண்ட வடிவில் கிடந்து பேய்வெருட்டாலும் பேரிருட்டாலும் பயந்த போதெல்லாம் நாத ஒலியால் பேய் வெருட்டையும் விந்து விளக்கத்தால் பேரிருட்டையும் தவிர்த்து என் பயத்தை நீக்கியருளினீர், அன்றி தாய் கருப்பையிங்கண் நேரிட்ட பெருந்தீ பெருக்காற்று பேரோசை பெருவெள்ளம் பெரும்புழு முதலிய உற்பாத துரிசுகள் அனைத்தயும் தவித்துக் காத்து அப்பிண்ட வடிவில் எனக்கு ஓரறிவையும் விளக்கி அருளினீர்.
அன்றியும் உலகனிடத்தே பிறந்து அனுபவிப்பதற்குரிய சுபஅனுபவப் பெருக்கம் ஆயுட் பெருக்கம் முதலிய நன்மைகளையும் எனக்கு அப்பிண்ட வடிவின்கண்னே அமைத்தருளினீர். அன்றியும் சோணிதக்காற்றின் அடிபடல் யோனி நெருக்குண்ணல் முதலிய அவத்தைகளால் அபாயம் நேரிட ஒட்டாமற் காத்து இவ்வுலகினிடத்தே தோற்றுவித்தருளினீர்.

எல்லாமாகிய இயற்கை இன்பக் கடவுளே! தந்தை என்பவனது சுக்கிலப் பையின்கண் யான் வந்தமைந்த கணப்போதிற்கு முன்கணப்போது வரையுமாக என்னால் ஒருவாறு அளவிடப்பட்ட ஒரு கோடி ஒன்பது லஷத்து அறுபதினாயிரம் கணப்போது பரியந்தம் எவ்வகைத் தடைகளும் வாராதபடி, பகுதிப் பேரணு உருவிற்கிடந்த எனது அகத்தினும் புறத்தினும் அருவாகியும் உருவாகியும் சலித்தல் முதலிய இன்றி அன்பொடும் அருளொடும் பாதுகாத்திருந்த தேவரீரது திருவருட்பெருங்கருணைத் தன்மைக்கு இவ்வுலகில் ஒருவாறு ஒருகணப்போது பாதுகாத்தலில் சலிப்படைந்தும் தளர்ச்சியடைந்தும் அருவருப்புற்றும் சுதந்தரமற்றும் பாராக்கிலிருந்தும் தடைபடுகின்ற தந்தை முதலிய ஜீவர்கள் கருணைத் தன்மையை ஒப்பென்று சொல்வதற்கு எவ்விதத்தினும் சிறிதாயினும் மனம் துணியாமையால் அங்ஙனம் உபசரியாதவனாகி இருக்கின்றேன். ஆகலில் தேவரீரது திருவருட் பெருங்கருணையை என்னென்று கருதுவேன்! என்னென்று துதிப்பேன்!

அருட்பெருஞ்ஜோதித் தனித்தலைமைக் கடவுளே! தாய் என்பவளது சோணிதப் பையிங்கண் யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி இவ்வுலகில் தோன்றிய கணப்போதிற்கு முங்கணப்போது வரையுமாக என்னால் ஒருவாறு அளவிடப்பட்ட ஆறுகோடி நாற்பத்தெட்டு லஷங் கணப்போது பரியந்தம் எவ்வகைத் தடைகளும் ஆபத்துகளும் வாராதபடி பூதப்பேரணு உருவிலும் பிண்டப் பெரு வடிவிலும் கிடந்த எனது அகத்தினும் புறத்தினும் அருவாகியும் உருவாகியும் சலித்தல் முதலிய இன்றிப் பெருந்தயவினோடு பாதுகாத்திருந்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் தன்மைக்கு இவ்வுலகில் பரதந்திரித்தும் பராக்கடைந்தும் தடைபடுகின்ற தாய் முதலிய ஜீவர் கருணைத் தன்மையை ஒப்பென்று சொல்வதற்கு எவ்வகையினும் எத்துணையும் மனம் துணியாமையால் அங்ஙனம் உபசரியாதவனாகி இருக்கின்றேன். ஆகலின் தேவரீரது திருவருட் பெருங்கருணையை என்னென்று கருதுவேன்! எங்ஙனம் துதிப்பேன்! யாவராலும் பிரித்தற்கு ஒருவாற்றானும் கூடாத பாசம் என்னும் மகாந்தகாரத்தில் யான் அது என்னும் பேதந் தோன்றாது அருகிக் கலந்து அளவிறந்த காலம் முன்பின் என்பதின்றி மூர்ச்சித்துக் கிடந்த என்னை அம்மகாந்தகாரத்தி னின்றும் ஒரு கணப்பொழுதினுள் அதிகாரணக் கிரியையால் அதிகாரணப் பகுதி உருவில் பிரித்தெடுத் தருளிய தேவரீரது திருவருட் பேராற்றலை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

சத்திய ஞானானந்தத் தனித்தலைமைக் கடவுளே! காரணக் கிரியையால் காரணப்பகுதி உருவினும், அதிசூக்குமக் கிரியையால் அதிசூக்கும பகுதி உருவினும், சூக்குமக் கிரியால் சூக்குமப்பகுதி உருவினும், பரத்துவ சத்திசத்தரால் பூத உருவினும், அபரத்துவ சத்திசத்தரால் பவுதிக வடிவினும் ஒரு கணப்போதினுள் என்னை செலுத்திய தேவரீரது திருவருட் பேராற்றலை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

அகண்ட பூரணானந்தராகிய அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே! ஜீவனை ஆதரிப்பிக்கும் பூதப் பிருதிவித் தோற்றமும், ஜீவனை விருத்தி செய்விக்கும் பூத நீர்த் தோற்றமும், ஜீவனை விளக்கஞ் செய்விக்கும் பூதாக்கினித் தோற்றமும், ஜீவனை அதிகரிப்பிக்கும் பூத வாயுத் தோற்றமும், ஜீவனை வியாபகஞ் செய்விக்கும் பூத வெளித் தோற்றமும், உபப்பிருதிவி உபநீர் உபாக்கினி உபவாயு முதலிய தோற்றங்களும், அவைகள் இருக்கும் இடங்களும், தொழிலிடம் முதலிய இடங்களும், ஒலி அறிவு, உருவ அறிவு, சுவை அறிவு, நாற்ற அறிவு, பரிச அறிவு, என்னும் ஐவகைக் குணஅறிவுகளும், அவைகள இருத்தற்குரிய செவி கண் நாக்கு மூக்கு மெய் என்னும் உள்ளிடப் பொறிகளும், அவைகள உத்தியோகித்தற்குரிய வெளியிடப் பொறிகளும், வசனித்தறிதல் நடந்தறிதல் கொடுத்தெடுத் தறிதல் மலம் விடுத்தறிதல் சலம் விடுத்தறிதல் என்னும் ஐவகைத் தொழிலறிவுகளும், அவைகள இருத்தற்குரிய வாக்கு பாதம் கை நீர்வாயில் அபானவாயில் என்னும் கரும உள்ளிடப் பொறிகளும், அவைகள் தொழிற்படற் குரிய கருமப் புறவிடப்பொறிகளும், நினைத்தல் விசாரித்தல் நிச்சயித்தல் அகங்கரித்தல் என்னும் சூக்குமக் கரணத் தொழில்களும், அவைகளை இயற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் சூக்கும கரணங்களும், அவைகளை இயற்றுவிக்கும் அதிசூக்கும கரணங்களும் அக்கரணங்களின் உபகரணங்களாகிப் பலபல பேதப்பட்டு விரிந்த சத்துவம், ராஜசம், தாமச முதலிய குணங்களும், பருவஞ்செய்தல் தகுதிசெய்தல் இச்சைசெய்தல் தெரிவுசெய்தல் அதிகாராஞ்செய்தல் காரணஞ்செய்தல் காரியஞ்செய்தல் முதலிய இடைப்பாட்டுத் தொழில்களும், அவைகளை இயற்றும்பொழுது இயையு இச்சை அறிவு முதலிய கருவிகளும், அக்கருவிகளுக்குரிய இடங்களும், அவைகள் உத்தியோகித்தற்குரிய இடங்களும், துரிசு நீக்குவித்தல் சுகம் விழைவித்தல் தூய்மை செவித்தல் இன்பமடைதற்கு வழியாயிருத்தல் துணையாயிருத்தல் முதலிய பரத்துவத் தொழில்களும், அவைகளை இயற்றுதற்குரிய தத்துவங்களும், அவைகளிருத்தற்குரிய இடங்களும், பிரேரித்தற்குரிய இடங்களும், அறிதல் அறிவித்தல் அனுபவித்தல் அனுபவிப்பித்தல் முதலிய முக்கியத் தொழில்களும், அவைகளை இயற்றுகின்ற சத்தி சத்தர்களும், அவர்கள் இருத்தற்குரிய இடங்களும், அவர்கள் அதிகரித்தற்குரிய இடங்களும், வாதவிருத்தி பித்தவிருத்தி சிலேட்டும விருத்திகளும், அவைகள் இருக்குமிடங்களும், உத்தியேகிக்குமிடங்களும், சூரியசத்தி சந்திர சத்தி அக்கினி சத்தி தாரகைசத்தி பிரமசத்தி மாயாசத்தி ருத்திரசத்தி முதலிய சத்திகளும் அவர்கள் இருத்தற்கும் அதிகரித்தற்கும் உரிய இடங்களும், அச்சத்திகளை நடத்தும் சத்தர்களும் அவர்கள் இருத்தற்கும் அதிகரித்தற்கும் உரிய இடங்களும், நனவு கனவு சுழுத்தி முதலிய அவத்தைகளும் அவைகள் இருத்தற்குரிய இடங்களும் இங்ஙனம் இன்னும் பற்பல அக உறுப்புகளும் அகப்புற உறுப்புகளும், மீத்தோல் புடைத்தோல் வந்தோல் மென்தோல் தோல்வகைகளும் வெண்ணரம்பு செந்நரம்பு பசுநரம்பு சிறுநரம்பு பெருநரம்பு முதலிய நரம்பின் வகைகளும், பேரென்பு சிற்றென்பு நீட்டென்பு முடக்கென்பு முதலிய என்பின் வகைகளும், நல்லிரத்தம் புல்லிரத்தம் கலவையிரத்தம் கபிலையிரத்தம் முதலிய இரத்த வகைகளும் மெல்லிறைச்சி கல்லிறைச்சி மண்ணிறைச்சி நீரிறைச்சி முதலிய இறைச்சி வகைகளும், மேல்நிலைச்சுக்கிலம் கீழ்நிலைச்சுக்கிலம் முதலிய சுக்கில வகைகளும், ஓங்காரமூளை ஆங்காரமூளை முதலிய மூளைவகைகளும், தலையமுதம் இடையமுதம் முதலிய அமுதவகைகளும், வெண்மை செம்மை பசுமை கருமை பொன்மை என்னும் வண்ண வகைகளும், வெண்மையிற்செம்மை வெண்மையிற்பசுமை வெண்மையிற்கருமை வெண்மையிற்பொன்மை, செம்மையின் வெண்மை, செம்மையிற்பசுமை செம்மையிற்கருமை செம்மையிற்பொன்மை, பசுமையின் வெண்மை பசுமையிற்பொன்மை பசுமையிற்கருமை, கருமையின்வெண்மை, கருமையிற்செம்மை கருமையிற்பசுமை கருமையிற்பொன்மை, பொன்மையின்வெண்மை பொன்மையிற் செம்மை பொன்மையிற்பசுமை பொன்மையிற்கருமை என்னும் வண்ண பேதவகைகளும், இவைகள் இவைகள் இருத்தற்குரிய இடங்களும் செயல்வகைகளும் பயன் வகைகளும் இங்ஙனம் இன்னும் பற்பல புறஉறுப்புகளும் புறப்புறஉறுப்புகளும் எனக்கு உபகரிக்கும் பொருட்டு இப்பவுதிக வடிவின்கண் ஒருங்கே உள்நின்று தோன்ற உள்நின்று தோற்றாது தோற்றவித்து தேவரீரது திருவருட் பேராற்றலை எங்ஙனம் அறிந்து எவ்வாறு கருதி என்னென்று துதிப்பேன்!

சுத்த சன்மார்க்க லக்ஷிய சத்திய ஞானக் கடவுளே! ஜீவர்களாற் கணித்தறியப்படாத பெரிய உலகின்கண்ணே, பேராசை பெருங்கோபம் பெருமோகம் பெருமதம் பெருலோபம் பேரழுக்காறு பேரகங்காரம் பெருவயிரம் பெருமடம் பெருமயக்கம் முதலிய முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்குரிமையாகிய மற்றை இடங்களிற் பிறப்பியாமல், குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிமையாகிய இவ்விடத்தே, உறுப்பில் குறைவுபடாத உயர் பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னை பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

அருட்பெரு வெளியின்கண்ணே அருட்பெருஞ்ஜோதி வடிவராகி விகற்பமில்லது விளங்குகின்ற மெய்ப்பொருட் கடவுளே! சிசுப் பருவந் தொடங்கிக் குமாரப் பருவம் வரையில் பேய்வெருட்டல் தோஷந்தாங்கல் பால் எதிரடுத்தல் சவலைக்குருந்தாதல் நோய்ப் பிணிப்புண்டல் பசியால் அரற்றல் பயத்தால்உலம்புதல் உண்டிஉவட்டல் உடம்பொடுநேர்தல் முதலிய எவ்வகைத் தடைகளாலும் தடைபடாமல் எனது அகத்தும் புறத்தும் காத்திருந்து வளர்த்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

அறிவார் அறியும் வண்ணங்களெல்லாம் உடைய பேரருட் பெருஞ்ஜோதிப் பெருந்தகைக் கடவுளே! குமாரப் பருவத்திற்றானே உலகில் சிறுவர்களுடன் கூடிச் சிறுவிளையாட்டியற்றல் சிற்றுண்டிவிழைதல் சித்திரம்பயிறல் அதிசயம்பார்த்தல் அசங்கியம் பேசல் அவலித்தழுதல் சிறுசண்டை செய்தல் சிறுகுறும்பியற்றல் தன்வசத்துழலல் தாய்வயிற் சலித்தல் முதலிய குற்றங்களில் என்னை சிறிதும் செலுத்தாமல் ஒரு சிறிய அறிவு விளங்கப் புரிந்து இடந்தனித்திருத்தல் இச்சையின்றி நுகர்தல் ஜெபதபஞ்செய்தல் தெய்வம்பராவல் பிறவுயிர்க்கிரங்கல் பெருங்குணம்பற்றல் பாடிப்பணிதல் பத்திசெய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் என்னைச் செலுத்திய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே! குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர்.

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய்ச் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.

அச்சிறு பருவத்திற்றானே ஜாதிஆசாரம் ஆசிரம்ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேல்நிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்.

வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.
அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர். வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக்கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர். அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.

அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம் என்னும் சாகாக் கலானுப தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும் கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி முதலிய எல்லா சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழிவில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ் ஜோதியராகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.
இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்

================================================================================

3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்

இயற்கை விளக்கம் எங்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை எங்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்பம் எங்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங் கருணைத் தனிப் பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுளே!

தேவரீர் திருவருட் சமூகத்தை அடைந்த உண்மை ஞானிகளின் சித்திவல்லப தரத்தை வகுத்தறிந்து வாழ்த்துதும் என்று அளவிகந்த முகங்களை கொண்டு அளவு கடந்த நெடுங்காலம் தத்தம் அளவைகளால் தனித்தனி அளந்தளந்தும் ஒருமித்து அளந்தளந்தும் ஒருவாற்றினும் முடிவு தோற்றாமையின் வேதாகமங்கள் அனைத்தும் ஆங்காங்கு கோடித்து அதிசயிக்கின்றன என்றும், அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் படைத்தல் காத்தல் துரிசு நீக்கல் முதலிய தொழில்களால் நிகழ்த்துகின்ற அதிகாரத் தலைவர்களும் எவ்வகைத் தத்துவங்களையும் காரண காரிய திறத்தால் நடத்துகின்ற சத்தி சத்தர்களும் உண்ர்ந் துணர்ந்தும் உணர்ச்சி சொல்லாமையின் முயற்சி பற்றாது மயங்குகின்றன ரென்றும், பேரறிவாற் சிறந்த பெரியர்களெல்லாம் வியந்து வியந்து விளம்புகின்றனர். அதனால் திருவருட் சமூகத்தை யடைந்த உண்மை ஞானிகளின் சித்தி வல்லப தரத்தை ஒருவராலும் ஒருவாற்றானும் உணர்ந்து கொள்ளுதல் கூடா வென்று ஐயுறவின்றி அறிந்து கொண்டேன். இங்ஙனம் அறிந்துகொண்ட சிறியேன் அவ்வுண்மை ஞானிகளுக்குச் சித்தி வல்லப தரத்தைக் கொடுத்தருளிய திருவருட் சமூகத்தின் இயற்கை உண்மை விளக்கத் தரத்தை எங்ஙனம் அறியத் தொடங்குவேன்!
மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேன் பொய்யறிவாற் புனைந்து உரைத்த பொய்யுரைகளையும் மெய்யுரைகளாகத் கருணையினாற் கடைக்கணித்தருளிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தின் இயற்கைப் பெருங் கருணைப் பெருந்தன்மையைக் கருதுதற்கு விரும்பிய ஐந்தொழிற் கருத்தர் முதலியோர் தூய்மையுடைமை அன்புடைமை முதலிய சுபகுணங்களைக் கருதுதற் கருவியாய தமது கரணங்கள் முற்றப் பெற்றிலவென்று கருதுதலின்றி எண்ணி எண்ணி இரங்குகின்றனர் என்று அறிவுடையோர் வியந்துரைத்தலைப் பலகாற் பயின்று கேட்டறிந்தேன்.

இங்ஙனங் கேட்டறிந்த சிறியரிற் சிறியேன் அத்திருவருட் சமூகத்தின் இயற்கைப் பெருங் கருணைப் பெருந்தன்மையைக் காமம் வெகுளி முதலிய அவகுணங்கட்கெல்லாம் வைப்பிடமாகி பராய் முருட்டன்ன கருங்கற் கரணத்தால் எங்ஙனங் கருதத் தொடங்குவேன்!

நாயிற் கடையேன் செய்த குற்றங்களை எல்லாம் குணங்களாகக் கொண்டு என்னுள்ளகத்தே அமர்ந்து உயிரிற் கலந்து பெருங்கருணைப் பெருமானே! தேவரீரது திருவருட்சமூகத்தின் இயற்கைப் பெருங்குணப் புகழைத் துதித்தற்கு விரும்பிய மூர்த்திகள் முதலியோர் துதித்தற் கருவியாய தத்தஞ் செந்நாயுறுப்புகள் வாய்மைகூறல் இன்சொற்புகறல் முதலிய ஒழுக்கங்களிற் சான்றில என்று துதித்தலின்றி அச்சுற்று நிற்கின்றனர் என்று அறிஞர் உண்மை வாசகத்தால் அறிந்தேன்.

இங்ஙனம் அறிந்த கடையேன் பொய்யுரைத்தல் பயனிலகூறல் முதலிய தீமைக்கட் பயின்று தடித்த எனது நாவினால் தேவரீர் திருவருட் சமூகத்தின் இயற்கைப் பெருங்குணப் பெரும்புகழை எங்ஙனம் துதிக்கத் தொடங்குவேன்!

அண்ட பிண்ட முதலிய எல்லாவற்றிற்கும் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்கின்ற அருட்பெருஞ் ஜோதித் தனிப் பெரும் பதியாய பூரணரே! தேவரீர் திருவருட் சமூகத்தின் இயற்கை உண்மைத் தரத்தை அறிதல் வேண்டு மென்றும், இயற்கைப் பெருங் கருணைப் பெருந் தன்மையைக் கருதுதல் வேண்டுமென்றும், இயற்கைப் பெருங்குணப் பெரும்புகழைத் துதித்தல் வேண்டுமென்றும், எனது உள்ளகத்தே ஓவாதுறைந்து ஊற்றெழுந்து விரைந்து விரைந்து மேன்மேற் பெருகின்ற பேராசைப் பெருவெள்ளம் அணைகடந்து செல்கின்ற தாகலின், “அறிவார் அறிகின்ற வண்ணங்களும் கருதுவார் கருதுகின்ற வண்ணங்களும் துதிப்பார் துதிக்கின்ற வண்ணங்களும் ஆகிய எல்லா வண்ணங்களையும் உடையவர் அருட்பெருஞ்ஜோதித் தனித்பெருங்கடவுள்” என்ற சத்தியஞானிகளது உண்மை வாசகத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு, தன்மைசாலாத் தமியேன் அறிதற்கும் கருதுதற்கும் துதித்தற்கும் தொடங்கினேன்.

இங்ஙனந் தொடங்குதற்கு முன்னர், எனது அறிவிற்கும் கருத்திற்கும் நாவிற்கும் இயல்வனவாகத் தோற்றிய வண்ணங்களுள் ஒன்றேனும் ஈண்டு இயற்படத் தோற்றாமையின், அருட்பெருஞ்ஜோதித் தனிப்பெருங் கடவுளே!

தேவரீர் திருவருட் சமூகத்தின் இயற்கை வண்ணங்கள் எத்தன்மையவோ! எத்தன்மையவோ! என்று உணர்ந்து உணர்ந்து கருதிக்கருதி உரைத்து உரைத்து அதிசயிக்கின்றவ னானேன்.

இயற்கை உண்மைத் தனிப்பெரும் பொருளாயும் இயற்கை விளக்கத் தனிப் பெரும் பதமாயும் இயற்கை இன்பத் தனிப்பெருஞ் சுகமாயும் பிரிவின்றி நிறைந்த பெருந் தன்மையராய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே!

தேவரீர்! திருவருள் வலத்தால் பொறி புலன் கரண முதலிய தத்துவங்கள் அனைத்தையும் வென்று நின்மலராகித் தத்துவாந்தத்தில் நின்று தம் உண்மைக்கண் இயற்கை இன்பானுபவஞ் செய்கின்ற சுத்த யோகாந்தர்களும் சுத்த கலாந்தர்களும் சுத்த போதாந்தர்களும் சுத்த நாதந்தர்களும் சுத்த வேதாந்தர்களும் சுத்த சித்தாந்தர்களும் சுத்த சன்மார்க்க ஞானிகளின் திருக்கூட்டங்களை நன் முயற்சியால் தனித்தனி அடைந்து பத்தியாற் பணிந்து, ‘அற்புதப் பெருஞ் செயல் புரிகின்ற ஐயர்களே! அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் உள்ளம் உவந்துரைத் தருளல் வேண்டும்’ என்று விண்ணப்பிக்கின்ற தோறும், ‘எல்லா பொருள் கட்கும், எல்லாக் குணங்கட்கும் எல்லா பயன்கட்கும் எல்லா அனுபவங்கட்கும் மற்றெல்லாவற்றிற்கும் உருவ சொரூப சுபாவ முதலிய இலக்கணங்கள் அனைத்தும் தாமேயாகியும் தாமல்லாராகியும் தாக்கியும் தாக்கற்றும் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற இயற்கை உண்மைக் கடவுளது இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் அந்தோ! அந்தோ!! எங்ஙனம் அறிவோம்! எவ்வாறு கருதுவோம்! என்னென்று கூறுவோம்!’ என்று அவ்வவ் கூட்டங்களினுந் தனித்தனி உரைத்து உரைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து நெட்டுயிர்க்கின்றார்கள் என்றும், எல்லாத் தத்துவங்களையும் எல்லாத் தத்துவிகளையும் தோற்றுவித்தலும் இயக்குவித்தலும் அடக்குவித்தலும் மயக்குவித்தலும் தெளிவித்தலுமாகிய தொழில்களை எளிதிற் கொடுத்தற் குரிய பூரண சுதந்தரத்தவர்களாய், இயற்கைச் சத்தியஞான சுகானுபவ பூரண சொரூப சாத்தியர்களாய், எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத நித்திய சுத்த ஞாந்தேகிகளாய், பூதசித்தி, கரணசித்தி, இந்திரிய சித்தி, குண சித்தி, பிரகிருதிசித்தி, புருடசித்தி, விந்துசித்தி, பரசித்தி, சுத்தசித்தி, காலசித்தி, கலாசித்தி, விசுவசித்தி, வியோமசித்தி, பிரமசித்தி சிவசித்தி முதலிய பிண்டசித்தி, அண்டசித்தி, பகிரண்ட சித்தி, அண்டாண்டசித்தி என்கின்ற அந்தரங்க பகிரங்க தத்துவ தத்துவி சித்திளெல்லாவற்றையும் திருக்கடைக் கணிப்பாற் செய்யவல்லவராய், சடாந்த சமரச சத்தியராய் விளங்குகின்ற சமரச சுத்த சன்மார்க்க ஞானிகளது சித்விலாசத் திருச்சபைக் கண்ணே, புண்ணிய வசத்தால் புகுதப் பெற்று மனங்கனிந்து வணங்கி நின்று, ‘சர்வ சுதந்தரராய சாத்தியர்களே! இயற்கை உண்மைத் தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் திருவுளம் பற்றித் திருவாய் மலர்ந்து திருவார்த்தை அளித்தருளல் வேண்டும்’ என்று விண்ணப்பிக்கின்ற தோறும் திருவார்தை அளித்தலின்றிப் பெருங்கருணைத் திருக்கண்களில் ஆன்ந்தநீர் பொழிந்து சும்மா இருக்கின்றனர் என்றும், உணர்ந்தோர் வியந்துரைப்பக் கேள்வியுற்று, ‘இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் என்னையோ!! என்று குலாவிக் குலாவிக் கூவுகின்றவனானேன்.’

அடிநிலைக் கருமஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைக் கருமஞானசித்தி அனுபவங்களினும், அடிநிலை யோகஞான சித்தி அனுபவங்களினும், முடிநிலை யோகஞான சித்தி அனுபவங்களினும், அடிநிலைத் தத்துவ ஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைத் தத்துவ ஞானசித்தி அனுபவங்களினும், அடிநிலைத் ஆன்ம ஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைத் ஆன்ம ஞானசித்தி அனுபவங்களினும், சுத்த ஞானசித்தி அனுபவங்களினும், சமரச சுத்த ஞானசித்தி அனுபவங்களினும், அது அதுவாகி நிறைந்தும் அதுஅதுவாகி விளங்கியும், அதுஅதுவாகி இனித்தும், ஆங்காங்கு ஆதீதமாகிக் கலந்தும், இவை அனைத்துமாகி ஒருமித்தும், அதீதா தீதமாகித் தனித்தும் வயங்குகின்ற பெருங் கருணைப் பெரும்பதியாய கடவுளே! எல்லாச் சத்திகளுக்கும், எல்லாச் சத்தர்களுக்கும் எல்லா மூர்த்திகளுக்கும் எல்லா மூர்த்தர்களுக்கும், எல்லாத் தேவிகளுக்கும் எல்லா தேவர்களுக்கும் எல்லாச் சாதனர்களுக்கும் எல்லாச் சாத்தியர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் எல்லாத் தத்துவங்களுக்கும் எல்லா பொருட்களுக்கும் எல்லாக் குணங்களுக்கும் எல்லாச் செயல்களுக்கும் எல்லா அனுபவங்களுக்கும் மற்றெல்லாவற்றிற்கும் முதற்காரணமாயும் நிமித்த காரணமாயும் துணைக் காரணமாயும் இவை அல்லவாயும் விளங்குகின்ற திருவருட்சமூகப் பெருங்கருணைப் பெரும் பதியாய தேவரீர் இயற்கைத் திருவண்ணம் அறிந்துகொள்ளுதல் எங்ஙனமோ! எங்ஙனமோ!!
ஓ! ஒப்புயர்வின்றி விளங்குகின்ற ஒருவரே! தேவரீர் திருவண்ணமும் திருவருட் சமூகத் திருவண்ணமும் அறிதற்கும் கருதுதற்கும் துதித்தற்கும் எத்திறத்தானும் கூடாவாயினும் அடிமை அளவிற்கு இயன்றபடி அறியாது அறிந்தும் கருதாது கருதியும் துதியாது துதித்தும் எனது உரிமையை ஊற்றஞ் செய்கின்றவனானேன். வந்தனம்! வந்தனம்!!

இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்

================================================================================

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை    அருட்பெருஞ்ஜோதி

4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.

உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.  பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேகசுதந்தரத்தையும், போகசுதந்தரத்தையும், ஜீவசுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமும் தேற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.

இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!

இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்

================================================================================

பேருபதேசம்

ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள் 1873, புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.
இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற – பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் – வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது – வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் – அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையிலிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் – இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் – இதைவிடக் – கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது – துக்கமே விசாரமென்கின்றது – அது தப்பு; அவ்வர்த்தமுமன்று. சார மென்கின்றது துக்கம். விசார மென்கின்றது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி ஆதலால், விசாரமென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி – சாரமென்பது: வி விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால் இடைவிடாது நன் முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.
மேலும், சிலர் “இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?” என்று வினவலாம். ஆம், இஃது – தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் – ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.
மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.
________________________________________

* இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக
செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
– திருஅருட்பா 4176
________________________________________

இதுபோல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக்கின்றார்கள். எவ்வாறெனில்: தொண்ணூறு தொள்ளாயிரம் என்கிற கணிதத்தின் உண்மை நான் சொன்ன பிறகு தெரிந்து கொண்டீர்களல்லவா? இப்படியே ஒன்று இரண்டு முதல் நூறு முதலான இலக்கணங்களுக்கும் உகர இறுதி வருவானேன்? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக இட்டிருக்கிறார்கள். தொல் – நூறு தொண்ணூறென்றும், தொல் – ஆயிரம் தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது. தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னதுபோல் சொன்னால், சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.
இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் – அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற – திருவருட்பாவில் அடங்கியிருக்கிற – ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், “எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, “தேடியதுண்டு நினதுருவுண்மை” என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். “கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக”** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.
________________________________________

* மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல்உன் தன்னையே மதித்துன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவவே றெண்ணிய துண்டோ
தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவதுன் கடனே.
– திருஅருட்பா 3635
** கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
– திருஅருட்பா 3503
________________________________________

அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட “நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று…” ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது நீங்கள் – இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் – சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது – அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.
சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. “தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!” என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் – இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் – இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் – இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள். இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.
இப்படியே “காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் – ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் – காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா” என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.
இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் – கொஞ்ச காலம் – சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள். மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்…. நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.
இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை – தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை – எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த – உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. “சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்”* என்னும் பிரமாணத்தால் உணர்க.
________________________________________

* தாயுமான சுவாமிகள் – கருணாகரக்கடவுள் – 7.
________________________________________

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.
இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

பேருபதேசம் முற்றிற்று.