April 20, 2024
tamil katturai APJ arul

வள்ளலார் தெய்வமா?  மற்ற ஞானிகளுக்கும் வள்ளலாருக்கும் உள்ள வேறுபாடு என்ன? நமக்கு வள்ளலார் யார்?

வள்ளலார் தெய்வமா? 
மற்ற ஞானிகளுக்கும் வள்ளலாருக்கும் உள்ள வேறுபாடு என்ன? நமக்கு வள்ளலார் யார்?
— ஏபிஜெ அருள்.

என்ன இப்படி ஒரு தலைப்பு என நினைக்க வேண்டாம். இதோ வள்ளலாரே சொன்னது;
“—-“தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!” என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.”
ஆக,
வள்ளலார் தெய்வமில்லை. அவதாரமும் இல்லை. வள்ளலார் நம்மை போல் மனிதரே. ஆனால், தனது ஒழுக்கத்தால், சத்திய அறிவால் , இடைவிடாது கருணை நன்முயற்சியில், தனி வழியில், உண்மை கடவுள் நிலை காண சுத்த ஞான யோக நிலையில் இருந்து, உண்மை கடவுளை கண்டு தரிசித்து அருள் பெற்ற முதல் “சுத்த ஞானியே” வள்ளலார்.
வள்ளலாருக்கும் 
மற்ற ஞானிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன எனில்;
மற்ற ஞானிகளும் கடவுள் அருள் பெற ஒழுக்கமும் இரக்கமும் சாதனமாக கொண்டு தவம் செய்தவர்கள் தான்.
ஆனால் இவர்கள் அனைவருமே,
1)தத்தம் சமய மதங்கள் காட்டிய கடவுளையே முடிபாக கொண்டு அக்கடவுளையே கருத்தில் ஏற்றிக்கொண்டு அச்சமயம் ஆசார அடிப்படையில் தியானித்ததால், அந்த அளவுக்கு மட்டுமே சித்திகள் பெற்றார்கள். பெற்ற சித்திகளால் பெருமை கொண்டு, மக்களை ஆசீர்வதித்து வந்தார்கள்.
அல்லது
2) வள்ளலார் போல் ஆண்டவரை இரக்கத்தால் நன்முயற்சி மற்றும் கடின யோகத்தால் தவமிருந்து பெரியளவு சித்திகளும் (பல நூற்றாண்டுகளாக வாழுதல்) பெற்ற ஞானிகளும் உண்டு. இந்த ஞானிகள் தாங்கள் பெற்ற சித்திகளால் பேரின்பம் அவர்கள் மட்டுமே அடைந்தார்கள். 
ஆனால்….
கடவுளை கண்ட வள்ளலாருக்கும் பல சித்திகள் அருளால் கிடைத்தது. பல சித்திகளை பெற்ற வள்ளலார் மீண்டும் கடவுளை நோக்கினார். கடவுள் வள்ளலாரிடம் ; என்ன? என்றதற்கு, 
வள்ளலார் கீழ்வருமாறு வேண்டினார்:
“நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். என்னைப் போல் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்”என்றார் வள்ளலார். 
இதை கண்ட கடவுள்;
தன்னிடம் என்ன கருணை உண்டோ அதே கருணையை பொது நோக்கத்தால் பெற்றுத் திகழ்ந்த வள்ளலாருக்கு “பரிபூரண சித்திகள்” முழுவதையும் கொடுத்தருளினார். அவரின் தேகத்தையே தனி வடிவமாக்கி (ஒளி உடம்பு), 
தன்னை போலவே படைத்தல் முதல் அனைத்து செயல் செய்து மகிழும் நித்திய பேரின்ப பெருவாழ்வை தந்து அருளினார். 
வள்ளலாரை போல் வேறு எவரும் இங்ஙனமாக மற்ற அனைவருக்குமாக வேண்டி நிற்கவில்லை.
அன்பர்களே!
வள்ளலார் பெற்ற பேரின்பத்தை இன்று நாம் பெறுவதற்கு யாதொரும் தடையில்லை. இதை வள்ளலாரே சத்தியமிட்டு நம்மிடம் உரைக்கிறார். தான் வந்த வழியில் எவர் ஒருவர் பழகி நன்முயற்சி மேற்கொள்கிறாரோ அவர் என்னை போல் ஏறாநிலை பெறுவது சத்தியமே என்கிறார்.
# வள்ளலார் ஆண்டவரை குருவாக கொண்டார். நமக்கும் குரு ஆண்டவரே.
# வள்ளலார் உண்மை கடவுளை காணும் வரை தன் கருத்தில் ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபட்டார்.
நாமும் இங்ஙனமாகவே கருத்தில் கொள்ள வேண்டும்.
# எந்தவொரு ஆசாரமில்லாமல் உண்மை அன்பு உண்மை இரக்கம் மட்டுமே வழிபாட்டு சாதனமாக கொண்டார். நமக்கும் இதே சாதனம் தான்.
சரி, அப்படின்னா,வள்ளலாருக்கும் நமக்கும் உள்ள உறவு?
ஆம், வள்ளலார் உண்மை கடவுள் குறித்து விசாரிக்கும் போது அவருக்கு துணையாருமில்லை. ஆனால் நமக்கோ வள்ளலார் துணை இருக்கிறது.உண்மை கடவுளை காண உண்மையாக ஆசை உள்ள எவருக்கும் எல்லாவகையிலும் வள்ளலார் துணை இருக்கும் பாக்கியத்தை பெற்றுள்ளதை அவர்கள் சத்தியமாக உணருதல் வேண்டும். 
ஆக நமக்கு இனி,
“வள்ளலார் துணை”
“ஆண்டவர் அருள்”
(அன்புடன் ஏபிஜெ அருள்).
சுத்த ஞானி வள்ளலார் துணையுடன்
சுத்த சிவநிலை 
கண்டோம், 
காண்கிறோம், 
காண்போம்.
இது சத்தியம். இது சத்தியம்.

unmai

Channai,Tamilnadu,India