சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி 25 – 11 – 1872

சித்திவளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்புப் பத்திரிகை

ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் நாள்,

ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்தி லுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றனர் என்றும், அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக்கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம். அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்றவகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினும் அல்லது உண்டாகிறதா யிருந்தாலும் உடனே ஜாக்கிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும்.

அப்படி யிருத்தல் மேல்விளைவையுண்டுபண்ணா திருக்கும். அப்படி இனிமேல் ஒருவரை யொருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைதாலும் அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர்களோடு மறுபடி அத் துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது. அப்படி மருவாதவர்களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது. அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும். அப்படி தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்த லனாவசியம். அப்படிப்பட்டவர்களை ஒரு பேச்சு மில்லாமல் இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது.

சிதம்பரம் இராமலிங்கம் (வள்ளலார்)

unmai

Channai,Tamilnadu,India

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.