April 26, 2024
tamil katturai APJ arul

உண்மையும், ஆசையும், நன்முயற்சியும்

உண்மையும், ஆசையும், நன்முயற்சியும்
– ஏபிஜெ அருள்.

( கடவுளே! உன்னை காண வேண்டும், உன் அருளால் இந்த இயற்கையின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் நாம் என்ற அடிப்படையிலேயே இந்த விசாரணை. ஆசை உள்ளவர்கள் தொடரலாம்)
இவரே கடவுள், இதுவே கோயில், இப்படியே வழிபாடு என்று தான் உலகில் வெளிப்பட்டுள்ள சமயங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. இந்த கொள்கையில் முடிபு தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதாவது கடவுள் யார் என்றும், அக்கடவுளின் அருள் பெற வழியையும், கடவுளால் பெறப்படும் நன்மைகளும் தீர்மானம் ஆகி விட்டது.
நிற்க! கடவுள் இவரே என்ற பிறகு கடவுளின்உண்மை குறித்து விசாரிக்க முடியாது , கட்டுப்பாடு இங்கு விதிக்கப்பட்டுள்ளது. அடுத்து, இதுவே சாதனம் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீற முடியாது. அடுத்து, இறைவனால் அருளப்படும் நன்மைகள் இவையே என்ற பிறகு, இங்கு மேலும் பெரிய பலனை எதிர்பார்க்க வாய்பில்லை.
நம்மை வணங்க வைக்கப்பட்ட கடவுளை தினம் பணிந்து, வணங்கி, வரையறுக்கப்பட்ட வழியில் தோத்திரம் செய்து, தேவையானதை அவரவர் கடவுளிடம் கேட்கிறோம். இது எல்லா சமயங்களிலும் இப்படித்தான் உள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை. 
ஆனால், மனிதனாகிய நமக்கு, மற்ற விசயத்தில் உள்ள சுதந்திரம், நமது சமயத்தில் கடவுள் மீது பெற்றுள்ளோமா என்பதே இங்கு கேள்வி?
அதாவது ,
நாம் பிறந்த நாடு, குடும்பம் அடிப்படையில் நமது சாதி, சமயம், மதம் நமக்கு தீர்மானிக்கப்பட்டு, நாம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளோம் என்பதே உண்மையாகும். இங்கு அறிவுக்கு வேலையில்லை. கட்டுப்பாடே உள்ளது. இதை மனிதன் பொதுவாக அனைவருமே (99% ) இறுதிவரை ஏற்று வாழ்ந்து கடைப்பிடித்து இறந்தும் விடுகிறான். (இதில் வேடிக்கை எதுவெனில் பிறந்த குழந்தைகளை, பெற்றோர்களிடம் மாற்றி வைத்து விட்டாலோ அல்லது மாறி விட்டாலோ மாற்றப்பட்ட குழந்தைகளிடம் சாதி சமயமும் மாறிவிடும். அப்படித்தானே? அப்படி எனில் இந்த சாதி சமயம் பொய்தானே?)
நிற்க! 
நமக்கு பிறந்தவுடனே காட்டப்பட்ட கடவுள் உண்மையான கடவுளா? கடவுளின் சொரூபம் இப்படிதான் இருக்குமா? செய்ய வைக்கப்படும் சடங்குகள் சரிதானா? வேண்டப்படும் கோரிக்கை போதுமானதா? என சிந்திப்பவர்கள் எத்தனை பேர்? நமது நண்பனின், பக்கத்து வீட்டுக்காரரின் கடவுள் வேறாக உள்ளதே? இதில் எது உண்மை? அனைத்தையும் நண்பரிடம், பக்கத்து வீட்டுகாரரிடம் பகிர்ந்துக் கொண்ட நாம் ஏன் கடவுள் வேறுபாடு குறித்து பகிர்ந்து கொள்ளவில்லை? அதற்கு நமக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆசாரமே என இங்கு உணர வேண்டும் அல்லது கடவுளிடத்தில் உண்மை அன்பு இல்லை என்பதே. 
இந்த சிந்திப்பு எதற்கு? என்ன தேவைக்கு? எனக் கேட்க கூடும்.
இந்த சாதி சமயத்தில் மட்டுமே மனிதன் பிறப்பிலே கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளான் என்கிறேன். மற்றவற்றில் அவன் அறிவால் ஆசையால் தேடிக் கொள்கிறான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. நீங்கள் நினைக்கலாம்; பிறப்பிலேயே சமயத்தையும், கடவுள் முடிபையும் நம் மேல் திணித்திருப்பதில் கேடு விளையவில்லையே! 
என் சமய மதத்தில் பிரியமுடனும், நம்பிக்கையுடனும் ஆனந்தத்துடனும் தானே நான் உள்ளேன் என நீங்கள் கூறலாம். நிற்க! 
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படியல்ல.
பொதுவாக எல்லா சமயங்களும் நல்லதையே போதிக்கின்றன என்பதில் மாற்று கருத்து கிடையாது. “நல்லது” என்பதை விட “உண்மை எது ?”என்பது சிறந்தது இல்லையா? உண்மை நோக்கிய அறிவு தான் மனித குலத்தின் லட்சியம்.அப்படிதானே? இதுவே மனிதராகிய நம் முயற்சி ஆகும். ஒவ்வொரு சமயங்களிலும் “கடவுள்” இவரே என்பதினால் பல கடவுள்கள் வெளிப்பட்டிருப்பதில் கேடு இல்லை எனச் சொல்ல முற்பட்டாலும், இதில்” உண்மை” இல்லை என்பது வெட்ட வெளிச்சமே.
நாம் எல்லோரும் ஒரு இனமாகிய மனிதர்கள். ஆனால், எனக்கு ஒரு கடவுள், உனக்கு ஒரு கடவுள், அவருக்கு மற்றொரு கடவுள் என்பதில் என்ன அறிவு (உண்மை) உள்ளது என்கிறீர்கள்? 
இயற்கையின் உண்மை மிக சிறியளவிலேயே அறிந்துள்ள நாம், ஆண்டவர் இவரே என எப்படி முடிவு செய்தோம்? 
இந்த சாதி சமய மதம் தவிர மற்றவற்றில் படிப்பு,வேலை,சொத்து, இன்பங்கள், துன்பங்கள் இவை நம்மிடம் பொதுவாகவே உள்ளது. (இவையின் அளவு அவரவர் அறிவில் முயற்சியில் மாறலாம்.அது வேறு).
சமயமதத்தில் அறிவு தேடல் என நமக்கு சுதந்திரம் எங்குள்ளது?
மனிதராகிய நமக்கு வெளிப்படுத்திய கடவுள்களில் உண்மை கடவுள் யார்? என விசாரிப்பதில் ஆசை வருவது மேன்மையான உயர்ந்த அறிவுதானே! 
இங்கு கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை என்பதை கருத்தில் கொள்க.
கடவுள் உண்டு, 
அக்கடவுளின் உண்மை என்ன?
அக்கடவுளின் சொரூபம் காண ஆசையை நிறைவேற்றுவது எப்படி?
அக்கடவுளின் அருள் பெறுவது எப்படி? 
நித்தியமாக விளங்கும் இயற்கை உண்மையாகிய ஆண்டவரை கண்டு அவர் அருளால் அவத்தைகளை நீக்கி பேரின்பமாக வாழ முயற்சிப்பது குறித்து தான் இங்கு விசாரம் செய்தோம் என்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன்.
இங்ஙனமாக கடவுளின் உண்மை நிலை காண நம்மை தடுக்கும், நம் மீது திணிக்கப்பட்ட சாதி சமய மதங்களை பொய் பொய்யே என்றும், ஓர் உண்மை கடவுள் உண்டென்றும், அதில் ஆசை கொண்டு, உண்மை அன்பால் வழிபாடு செய்ய சொல்லும் ஓர் உண்மை பொது மார்க்கமே வள்ளலார் கண்ட 
“சுத்த சன்மார்க்கம்” . இது 19 நூற்றாண்டில் தோன்றிய புதிய தனி உண்மை மார்க்கம் என்று இன்று தெரிந்துக் கொண்டோம்.

நன்றி ஏபிஜெ அருள்.
மேலும் வள்ளலார் மார்க்கம் அறிய www.atruegod.org.

unmai

Channai,Tamilnadu,India