சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்

சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்

சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்பவற்றிற்குப்பொருள் யாதெனில்:- அடியில் வருவனேயாம். சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும். ஆத்ம தத்துவாதி சிவகரணம் 36, நிர்மல குருதுரியாதீதம் 7; ஆக நிலைகள் 43. இந்த 43 நிலைகளில் ஒவ்வொரு நிலைகளிலும் மேற்குறித்தவை உள. மேலும் இவை மூன்றும் பிண்டத்தில் நாலிடத்திலும் அண்டத்தில் நாலிடத்திலும் உள. அவைகள் பிண்டாண்ட ருத்திர சதாசிவ பேதம். சாகாக் கல்வியைக் குறித்த 43 நிலைகளில் முதல்நிலை அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனது காலம் ஒரு கல்பம். இப்படி 43 நிலைகளையுமேறி அனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்த காலாதீதன்.

மேற்குறித்த மூன்றும் பரமார்க்கமாகிய ஞானயோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள். அபர மார்க்கத்தில் சிலர் உப்பு வகைகளின் பேதமென்றும் ஓஷதி பேதமென்றும் பூதபேத மென்றும் சொல்லுவது உபாயமார்க்கம். அக அனுபவமே உண்மை. உபாய வகையாகிய அபரமார்க்கம் தேக பூஷணாதி காமிய சித்தியைத் தரும். உண்மை, நீக்கமற்ற சொரூப ஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயங்கள் தவிர வேறு எவ்வித சமயங்களிலுமில்லை. அப்படி யிருப்பதாகச் சொல்லியிருப்பதும் ஏகதேசமென்றறியவும். மேற்படி ஏகதேசங்கள்… மந்திரங்களிலும் மேற்படி மூன்றும் வழங்குகின்றபடியால், ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தையடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க, மகத்துவங்க ளுண்டாகும். மேலும் மேற்படி உயர்வுடைய தங்கத்தில் விக்கிரகஞ் செய்து வைத்து ஓஷதியாதி லவணங்களை அதற்குச் சேர்த்து வைத்தால், விசேஷ சித்தி விளங்கும். இஃது திரிசியக் காட்சி. சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை. மேற்படி மூன்றையும் இலக்ஷியமாகவே கொள்க. உபாய வகையான வாச்சிய திரிசியக் காட்சிகள் பரோபகாரம். ஆதலால், சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனலென்பவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். இஃது ரகசியம்.

Leave a Reply