ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள்.

‘நினைந்துநினைந்து” எதை நினைந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி –1

ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள்.

‘நினைந்துநினைந்து” எதை நினைந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி –1 

அன்பர்களே!
காலம் போய்க் கொண்டிருக்கிறதே இன்னும் உண்மை அறிந்திட்டப் பாடில்லை. இன்று விசாரத்தில் அழுந்தி நான் செய்த முயற்சியை என் அறிவும் ஒழுக்கமும் ஒத்தவர்களுடன் சொல்லி நல்ல விசாரத்தை தொடர்கிறேன். அன்புடன் ஏபிஜெ அருள்.
உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை பெற என்ன செய்ய வேண்டும் என வள்ளலார் சொல்லியுள்ளார்கள் எனப் பார்க்கும் போது, மிக முக்கியமாக ஒன்றை குறிப்பிடுகிறார். அது “மரணமில்லா பெருவாழ்வு” ஆகும். இந்த வாழ்வை நல்கும் சாகாகல்வி ஆண்டவரின் அருளால் தான்,நம் ஒவ்வொருவர்க்கும் உரைக்கப்படுகிறது.
ஆக, ஆண்டவர் அருளை நாம் பெறுவதற்கு காரணமே நித்திய வாழ்வுக்காக தான் என்பதை சத்தியமாக நாம் உணர வேண்டும். இந்த மரணமில்லா பெருவாழ்வை பெறுவதற்கு
ஆண்டவரின் அருள் வேண்டும். அருளை பெற ஆண்டவரை காண வேண்டும். எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும் இறைஒளியை நாம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் உணர்ந்து மெய்பொருளின் உண்மை சொரூபத்தை காணலாம். இதற்கான வழி என்ன என வள்ளலார் சொல்லியுள்ளார்கள்?. அது
கீழே வரும் பாடலில் உள்ளது.
                     நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே 
                     நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு 
                     நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான 
                     நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
                     வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர் 
                     மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
                     புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் 
                     பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. 

இப்பாடலினின் படி நாம் செய்யவேண்டியது::
1) நினைந்துநினைந்து
2) உணர்ந்துணர்ந்து 
3) நெகிழ்ந்துநெகிழ்ந்து
4) அன்பே நிறைந்துநிறைந்து
5) ஊற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந்து
6) அருளமுதே நன்னிதியே ஞான 
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம்..
ஆக, மேற்படி 6 யையும், நன்முயற்சி பயிற்சியில் நாம் செய்தே ஆக வேண்டும்.
வரிசையாக காண்போம்.
1) நினைந்துநினைந்து…
இங்கு நாம் எவையை நினைந்து நினைந்து பார்க்க வேண்டும்?
நாம் பெருவாழ்வில் பெருங்களிப்புறவே சித்தி எலாம் வல்ல சிவசித்தன் உளம் கலக்கப் போவது சத்தியமே என நாம் நினைந்து,(உறுதியாக கருத்தில் கொள்ள வேண்டும்)
அடுத்து, நாம் வேறு கடவுள் வேறு என்று பிரித்து பார்க்காமல், அந்த உத்தம சற்குருவை ஓர் உறவே என நினைந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார்
வள்ளலார்.
அடுத்து, வள்ளலார் கட்டளைப்படி
நாம் உலக பழக்க வழக்கங்களைத் தவிர்த்துக் கொண்டுள்ள நமது உள்ளகத்தே கடவுள் அமர்ந்து அருள் பாலிப்பது உண்மை என நினைந்திருக்க வேண்டும். (பாடல் ஆதாரம் : சார் உலக…),
மேலும் மற்றொரு பாடலில்;
“பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் 
பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே 
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று 
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே 
காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.”
மேற்படி பாடல் மூலம் நாம் நினைந்து உரைக்க வேண்டியவை;
பரம்பரமே 
சிதம்பரமே 
பராபரமே 
வரமே 
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே 
துரியமுடி அனுபவமே 
சுத்தசித்தாந்தமதாய்த் 
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே 
சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே
என்பவைகளே.
அன்பர்களே!
மேற்படியானவை முறையே பார்க்கும் போது;
மேலானவரே!
அறிவுவழியானவரே!
முடிவாகிய உயர்வானவரே!
வலமாகிய இறவாவாழ்வை அருளுபவரே!
இதுவரை (வேதத்தில்) வெளிப்பட்ட அனுபவமில்லாத தனி அனுபவத்தை தந்தவரே!
இதுவரை எவரும் பெற்றிடா உயர்நிலை தருபவரே!
இதுவரை முடிந்தமுடிவை கடந்து பேரின்ப சித்தி பெருவாழ்வை அருளுபவரே!
சாதாரணநிலையில் பெரும்சுகத்தை பெறவைப்பவரே!
உண்மை பொது வழியில் கண்டுகொள்ளக்கூடிய மெய்பொருளே!
நீயே ஒன்றெனும் ஒன்றாகிய இயற்கை உண்மை கடவுள்!
என நாம் கருத்தில் முதலில் ஏற்றி, பின்பு உண்மை அன்பால் நினைந்து நினைந்து நன்முயற்சியில் இருக்க வேண்டும்.
ஆக,
மொத்தத்தில் நாம் நினைந்து பார்க்க வேண்டியது: (இங்கு நாம் என்பது உலக பழக்கவழக்கங்களை தவிர்த்தவர்கள் ஆவர்).
# ஓர் உண்மை கடவுளே! என நினைந்து,
# அக்கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட
நாம் வேறு கடவுள் வேறு என்று பிரித்து பார்க்காமலும்
# அக்கடவுளின் நிலைஉள்ளத்தில் உரைவதாக உள்ள உண்மையை நினைந்து
# ஆண்டவரின் அருளால் பெற்ற சாகாகல்வியின் பயனாகிய மரணமில்லா பெருவாழ்வில் வாழ்தலை நினைந்து,நினைந்து முயற்சித்தல் வேண்டும்.
இங்ஙனமாக கடவுளை உள்ளபடி நினைந்து, உள்ளமெல்லாம் கனிந்துருகி நினைந்து இருத்தல் வேண்டும். 
(தொடரும்).நன்றி.

unmai

Channai,Tamilnadu,India