March 28, 2024
tamil katturai APJ arul

வள்ளலார் சொன்ன உண்மை இதுவே!

வள்ளலார் சொன்ன உண்மை இதுவே! — ஏபிஜெ அருள்.

உலகில் பல சாதிகள்,சமயங்கள்,மதங்கள் உள்ளன. அதில் ஏதோ ஒன்றை தான் நாம் சார்ந்து அதன் கடவுளர், தெய்வம்,கர்த்தர், தலைவர்,ஞானிகள் இவர்களை ஏற்று வணங்கி வருகிறோம். இதை எவரும் மறுக்க முடியாது. இந்த சாதி,சமய,மத, கடவுளை,தெய்வத்தை,கர்த்தாரை,ஞானியை, நாம் ஆண்டவராக பாவித்து அவர்கள் தந்த போதனைகளை, கட்டளைகளை ஏற்று அதன் படி நடக்கிறோம். நிற்க! அவர்களும் அவர்களின் போதனைகளும் எப்படி பட்டவை எனில், அவர்கள் மகான்களாகவும், சான்றோர்களாகவும்,அறிவுடையவர்களாகவும் ஆவார்கள். அவர்கள் சொன்னவை நல்லவையே. அதில் மாற்று கருத்து இங்கே இல்லை.
ஆனால் அவர்கள் தான் உண்மை கடவுளாரா?உண்மை தெய்வங்களா? எனப் பார்ப்பது ஒருவகை தேடுதலும் அறிவும் ஆகும்..

இந்த சாதி,சமய,மதங்களில் சொல்லப்பட்ட அவர்கள் அனைவருமே உண்மை கடவுள் குறித்து தேடியவர்களே. நல்ல விசயங்களை சொல்லி வந்த அந்த ஞானிகளை, மகான்களை நாம் ஆண்டவராக ஆக்கி கொண்டோம். அவர்களை ஆண்டவர், தலைவர், கடவுள், என அழைத்ததை அவர்களில் சிலர் மறுக்காமல் இருந்தனர். அதற்கு அவர்கள் மத கோட்பாடு அப்படி இருந்தது. அவர்கள் எவர் மீதும் குற்றமில்லை. உண்மை எதுவென ஒவ்வொருவரும் அகத்தில் காண்பதாக உள்ளது என இங்கு சத்தியமாக உணர வேண்டும்.

உண்மை கடவுள் யார்? கடவுளின் உண்மை என்ன? என ஆசை கொள்வதே உண்மை அறிவு ஆகும். இதை எவரேனும் மறுக்க முடியுமா? 
ஆக, கடவுளின் நிலை காண ஆசை உள்ளவர்க்கே உண்மை கடவுள் குறித்து விசாரம் செய்ய தோணும். மற்றவர்கள் தங்களுக்கு கடவுள் எனச் சொல்லப்பட்ட காட்டப்பட்டதையே நம்பிக்கையுடன் தொடர்கிறோம். அவை கைவிடுவதற்கு வேண்டிய அவசியம் வாழ்நாள் முழுவதும் இல்லாமல் போகிறது. காரணம் மூன்று; 
1) அவை தீயவை சொல்லி தரவில்லை. நல்லவையே நல்கின்றன. இந்திரிய, கரணமாகிய மனம் இவை கட்டுப்படுகின்றன.

2) கடவுளின் உண்மை நிலை காண நேரமோ ஆசையோ நம்மிடம் இல்லாமல் போனது.

3) இவையில் உள்ள கட்டுப்பாட்டு ஆசாரங்கள் நம்மை மேலும் சிந்திக்க அனுமதிப்பது இல்லை.
எனவே தான் சாதி,சமய,மதங்களை விட்டு வெளியே வர இயலவில்லை.

இதோ வள்ளலார் சொல்கிறார்;
* ஆசை உண்டேல் வம்மீன் இங்கே.
* என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
* என் மார்க்கம் உண்மை அறியும் மார்க்கம்.
வள்ளலார் மார்க்கத்தில் உள்ள வழிபாடே கடவுள் நிலை குறித்த நல்ல விசாரமே! 
அந்த நல்ல விசாரத்தில் கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரம் செய்ய வேண்டும். இதில் தான் ஜூவகாருண்யம் உண்டாகுகிறது என்கிறார் வள்ளலார்.

அன்பர்களே! 
இதில் ஆசை உள்ளவர்களே! கடவுள் குறித்த உண்மை தேடுதலில் இறங்குவர். அவர்களுக்கு எவை தடையாக வந்தாலும் அதை விட்டு விடுவர் அப்படிதானே! அங்ஙனமே தனது விசாரத்திற்கு தடையாக இருந்த தனது சமயத்தை கைவிட்டார் வள்ளலார்.

சமயத்தை ஏன் கைவிட வேண்டும்? என்ற கேள்வி ஏழும். ஆம் , அதில் இவரே கடவுள் எனச் சொல்லப்பட்ட விசயத்தை எப்படி விசாரம் செய்கின்றதற்கு அதன் கட்டுப்பாட்டு ஆசாரம் எங்ஙனம் அனுமதிக்கும்?. அடுத்து நம் விசாரத்தின் தொடக்கத்திலே உண்மை கடவுளுக்கு, மனிதனுக்கு இருப்பது போல் கை கால் மூக்கு உண்டா? என்றும், உயிரை படைத்தவரே அந்த உயிரை பலி கேட்குமா? எங்கும் பரிபூரணமாக நிறைந்துள்ளவர்க்கு குறிப்பிட்ட இடம்,வாகனம்,ரூபம் கொடுக்க முடியுமா?
கடவுளின் தயவை, மந்திரம் தந்திரம் வேண்டுதல் காணிக்கை மூலம் பெறமுடியுமா? இது போன்று அங்கிருந்தே கேட்க முடியுமா?
வள்ளலார் தான் கண்ட உண்மை கடவுள் பற்றி குறிப்பிடும் போது;

 சாதியும் ,மதமும், சமயமும் காணா
 ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி.

நம் சாதியும் சமயமும் மதமும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியவை. அதனை தோன்றிவித்தவர் எங்ஙனம் ஆதியில் தோன்றிய உண்மை கடவுள் ஆவார்? 
கடவுள் நிலை படிப்பினால் அறிவதாக இல்லை. அக்கடவுளின் நிலையை ஒவ்வொருவரும் உள்ளத்திலே உணருவதாக உள்ளது.
அக அனுபவமே உண்மை என்கிறார் வள்ளலார். இங்ஙனமாக நம் ஒழுக்கம் கொண்டு கண்ணீர் விட்டு உண்மை அறிவால் ஒவ்வொருவரும் கடவுள் உண்மையை உணரச் சொல்லும் வழியே உண்மை பொது வழி தானே! அதுதானே அறிவு செயல்.
அதன் பெயரே சுத்த சன்மார்க்கம் ஆகும். 
இன்றே சாருவோம். கடவுள் உண்மை நாமே அறிவால் அறிவோம். அதன் வழியில் உண்மை கடவுள் அருள் பெறுவோம். (தொடருவோம்)

நன்றி:: ஏபிஜெ அருள் கருணை சபை மதுரை.

unmai

Channai,Tamilnadu,India