கடவுளா? கடவுள்களா? உண்மையில் கடவுள் எத்தனை பேர் ? வள்ளலார் கண்ட கடவுள் உண்மை என்ன?

கடவுளா? கடவுள்களா?
உண்மையில் கடவுள் எத்தனை பேர் ? 
வள்ளலார் கண்ட கடவுள் உண்மை என்ன? – ஏபிஜெ அருள்

நல்ல நண்பர்களாக இருப்போம் – ஆனால் சாதியில், சமயத்தில் வேறுப்பட்டு இருப்போம் – எல்லாவற்றையும் நமக்குள் பேசி விசாரித்து முடிவு எடுப்போம் – ஆனால் நமக்குள் வேறுப்பட்டியிருக்கும் கடவுளரில் எந்த கடவுள் உண்மை எனவோ ? அல்லது கடவுளின் உண்மை என்ன? எனவோ விசாரிக்க முன் வந்ததில்லை அப்படித்தானே? இது (மிகப்) பெரியவர்களாக இருந்தாலும் அல்லது தாழ்ந்த தரத்தில் இருந்தாலும் இப்படிதான் – அப்படித்தானே?

எல்லாம் அறிந்து வருகிறோம் – அறிவால், அறிவியலால், அன்பால், நாம் உண்மையை தெரிந்து, அறிந்து வருகிறோம் –

எந்தொரு பெரிய பதவியில் இருந்தாலும், பெரிய படிப்பு படித்திருந்தாலும், பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தாலும், அல்லது மேற்படியானவையில் மிகவும் தாழ்ந்த தரத்தில் இருந்தாலும் சாதி, சமயம் என வரும் போது எந்தொரு மாற்றமும் மனிதர்களிடத்தில் ஏற்படாமல் சாதியில், சமயத்தில் தான் வைத்திருக்கும் பிடியை தளர்த்திக் கொள்ள முடியாதளவு பற்றும் ஆச்சாரமும் உடையவனாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருவரும் முதலில் அறிய வேண்டும்-

படிப்பு, பதவி, தொழில், இடம், வீடு, மனைவி, இன்பம் முதலியவையில் அது சரி இதுதான் சரி என விசாரித்து நல்லதை தேர்ந்தெடுக்கும் மனிதா உனக்கு பிறப்பால் தீர்மானிக்கப்படும் சாதியை, சமயத்தை மாற்றவோ, விடவோ உரிமையில்லை என்பதை ஏன் சிந்திக்க வில்லை? – உன்னை கட்டுபடுத்தியுள்ள இந்த ஆச்சாரங்களை ஏன் விட்டொழிக்கவில்லை? சாதியை, சமயத்தை பற்றி சிந்திக்க உரிமை தராத ஆச்சாரத்தை ஒழிக்க அறிவில்லாத போது, கடவுள் உண்மை குறித்த விசாரணை செய்ய ஆசை எழுவது எங்ஙனம்?

இதற்கு எது காரணம்? 
ஆச்சாரத்தை கடமை, ஆண்டவர் கட்டளை என போதிக்கப்பட்டதே காரணம்?
கடவுளை அறிவாலும் ஒழுக்கத்தாலும் அறியக் கூடியவர் என போதிக்கப்படவில்லை – கடவுள்(கள்) இவரே என காட்டப்பட்டுள்ளது-

நீங்கள் ஒவ்வொருவருமே இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் – 
அதாவது;
நாம், நமக்கு கடவுள் என அறிமுகப்படுத்தப்பட்ட கடவுளை போற்றி, பணிந்து, வணங்கி, வேண்டி வருகிறோம் – 
மீண்டும் ஒருமுறை படித்து பார்க்கவும் – நாம், நமக்கு கடவுள் என அறிமுகப்படுத்தப்பட்ட கடவுளை போற்றி, பணிந்து, வணங்கி, வேண்டி வருகிறோம் – அப்படித்தானே !
நம்மில் யாராவது நாம் செல்லும் கோயில் அல்லது புனித இடத்தில் என்றாவது ஒரு நாளாவது நாம் வணங்கும் கடவுள் குறித்த உண்மையை விசாரித்து உள்ளோமா?
கடவுள் உண்மையில் இப்படித்தான் இருப்பாரா? வணங்கும் முறை சரிதானா? ஒருவரா? அல்லது இருவரா? பலரா? இன்று இந்த உண்மையை தெரிந்து கொள்ளாமல் அடுத்த வேலை எதுவும் கிடையாது என முடிவு எடுத்துள்ளோமா?
அல்லது; வணங்கும் கடவுளை நேரில் கண்டு, பேச வேண்டும் இன்று இதற்கு முயற்சி செய்ய வேண்டும் என நினைத்து ஆசைப்பட்டோமா?
இல்லை – இல்லை – இல்லை – என்பதே உண்மை உண்மை உண்மை –

அதற்கு காரணம் என்ன?
நமக்கு இங்ஙனம் செய்ய சொல்லிதரப்படவுமில்லை – நம்மிடம் இங்ஙனமாக ஆசைக்கொள்ள அறிவும் எழவில்லை – அப்படித்தானே!

ஆக, சொல்லப்பட்டதை அப்படியே நம்ப வேண்டும், விசாரணைக்கு இடமில்லை என்பதின் பெயரே “ கட்டுப்பாட்டு ஆச்சாரங்கள்” என்கிறார் வள்ளலார் – இந்த கட்டுப்பாட்டு ஆச்சாரங்களே எல்லோரிடமும் இயற்கையாகவே உள்ள கருணையை விருத்தி செய்ய தடையாக உள்ளது என்ற உண்மையை கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்துகிறார் வள்ளலார் – இதுவே வள்ளலார் கண்ட உண்மை – இந்த உண்மையை தான் வள்ளலார் சொல்லி வந்தார்கள்- ஆனால் முடிபாக சொல்லியது யாதெனில்:
உண்மை சொல்ல வந்தனனே என்று
உண்மை சொல்ல புகுந்தாலும்
தெரிந்துக் கொள்வாரில்லை – வள்ளலார்

வள்ளலார் சாதி சமய கட்டுப்பாட்டு ஆச்சாரங்களை விட்டொழித்து, கருணையால் கண்ட உண்மை இதோ கீழே:

ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்

 உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்

 அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

 ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்

 என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்

 யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்

 ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

 ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
தெய்வம் ஒன்றே ! ஒன்றேனும் ஒன்றே !! என நாம் சத்தியமாக அறிதல் வேண்டும் –
கடவுள் ஒன்று என்றும், இல்லை கடவுள் இருவர் என்பதும், இல்லை ஒன்று இரண்டுமானவர் என்பதும் அல்லது அப்படி இப்படி என்பதும் இல்லை என அறிதல் வேண்டும் –
இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் அவரவர் அறிவால் அக அனுபவத்தில் உணருவதாக உள்ளது என்கிறார் வள்ளலார் –
அன்பர்களே! கடவுளின் நிலையை ஒவ்வொருவரும் காண ஆசை கொள்வதே உண்மை அறிவு ஆகும் என்கிறார்கள் –
இதோ இன்னும் சிலப்பாடல்கள்:
  அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்

 அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்

 மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை

 மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்

 துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்

 துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்

 உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி

 ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்

 ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே

 கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்

 கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்

 கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்

 கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்

 ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்

 ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்

 பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான

 ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்

 இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்

 நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்

 நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்

 ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

 ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்

 இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்

 பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்

 பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்

 விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி

 விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்

 உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

 ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்

 அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்

 பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்

 பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ

 டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்

 இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த

 ஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே

 ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

 வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்

 வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்

 புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே

 புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி

 மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்

 விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி

 உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

 ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

 ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

 செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

 திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்

 வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்

 மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்

 உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

 ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம் –
என் மார்க்கம் அறிவு மார்க்கம்-
என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை – என்கிறார் வள்ளலார்-
இது நல்ல விசாரணை தானே ? நன்றி அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்

 

unmai

Channai,Tamilnadu,India