March 29, 2024
Uncategorized

பொங்கல் விழா! இயற்கையை வணங்கும் விழா!! பொது விழா!!

Image may contain: 1 person

பொங்கல் விழா! இயற்கையை வணங்கும் விழா!! பொது விழா!!
சாதி, சமயம், மதம், ஆச்சாரம் கடந்த ஒரு இன்பத்திருநாள்-
இயற்கையே இறைவன்.
இயற்கையே சுத்த சன்மார்க்கம். –ஏபிஜெ அருள்-

வள்ளலார் மார்க்கத்தில் இயற்கை என்பதற்கு பொருள் என்ன எனப்பார்க்கும் போது, ” இயற்கை” ஒரு முக்கிய முதன்மை மெய் பொருளாக உள்ளது.
ஆம் அன்பர்களே,
இயற்கையே இறைவன்.
இயற்கையே சுத்த சன்மார்க்கம்.
”இயற்கை உண்மையை” தான் நம் வள்ளலார் சாதி,சமயம்.மதம் கடந்து செய்த நல்ல விசாரணையில் தெரிந்துக் கொண்டார்கள். அவரின் சத்திய அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும். நன்முயற்சிக்கும் இறைவனால் போதிக்கப்பட்டதே சுத்த சன்மார்க்க மரபுகளும், சாகா கல்வியும் ஆகும்- ”இயற்கை உண்மை” நம்மிடம் அக அனுபவத்தில் வெளி ப்படுவாதாக உள்ளதே அன்றி நமக்கு வேறு ஒருவராலோ அல்லது எந்த ஒரு நூல் வாயிலாகவோ கற்பதாக இல்லை. உண்மை அறிய முதலில் நாம் ஒழுக்கம் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
”இயற்கை” யை வள்ளலார் விவரிக்கும் போது:
இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம், இயற்கை அறிவு என்கிறார்.
இங்கு, இயற்கை உண்மை என்றால் “ சத்திய திருவுருவம்”
இயற்கை விளக்கம் என்றால் “சத்திய ஞானசபை’’
இயற்கை இன்பம் என்றால் ‘” சத்திய திரு நடம்”
ஆக, மொத்ததில் இயற்கையே, தனிப் பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுள்! என்கிறார் வள்ளலார்.
மேலும் பார்க்கையில்;
இயற்கை உண்மை நிறைவாகியுள்ளதே ’’சுத்த சிவானுபவ வெளி”
இயற்கை விளக்கம் நிறைவாகி விளங்குவது “அருட்பெருஞ்ஜோதி சொரூபம்”
ஆக,
இயற்கையே (உண்மையாகவும், விளக்கமாகவும்) எங்கும் பூரணராகி விளங்குகின்றது.
இயற்கை நம் உண்மை ஆண்டவர்.
இயற்கையே நம் வழி (சுத்த சன்மார்க்கம்)
இயற்கையானது நாம் சாகாமல் இருப்பதே.
இந்த மரணம் தவிர்த்த இந்த இன்பத்தை பெற நமக்கு குருவாக இருப்பதும் ”இயற்கையே”.

அன்பர்களே, இப்பொழுது சொல்லுங்கள், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்குகிறது தானே.
ஆக, நாம் செய்ய வேண்டியது;
எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைக ளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும்………( நாம் நம்புதல் வேண்டும். இடைவிடாது நன்முயற்சியில் பயிலுதல் வேண்டும்.)
அன்பர்களே, மேலே நாம் செய்த நல்ல விசாரணையும் கடவுள் அருளால் நம் அறிவில் உணர்ந்து செய்ய அருளப் பெற்றுள்ளோம்.
தெரிந்துக்கொண்ட இந்த உண்மை, நம் சத்திய அறிவில் அறிந்து, நம் அனுபவத்தில் அனுபவிக்க அருள் செய்யுமாறு இயற்கை ஆண்டவரை துதிப்போம்.
சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பத்தில்:
இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கையின்பினரென்றும்,…..
தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே!…..
சமரசு சுத்த சன்மார்க்க சங்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில்:
இயற்கை யுண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில், இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய், இயற்கை இன்ப நிறைவாகி யோங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக் கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே!
சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பத்தில்:
இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கையின்ப மென்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாகிய தனித் தலைமைக் கடவுளே!
சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில்;
உத்தர ஞானசித்திபுர மென்றும் உத்தர ஞான சிதம்பர மென்றும் திருவருளா லாக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும் பார்வதிபுரமென்றும் வடலூரென்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ திருவுருவைத் தரித்து, இயற்கையின்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீரது திருவருட் சமுகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரசு சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்.
சில சுத்த சன்மார்க்கப் பாடல்கள்;
”இயற்கையுண்மைத் தனிப்பதியே”..
• இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே…
• எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
எல்லாஞ்செய் வல்லதாகி
• இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
இயற்கையே இன்பமாகி.
• மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
• இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
• இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
• இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
• இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்.
முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
• இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
• ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
• சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
இதுஅது எனஉரைப் பரிதாய்த்
• தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
புத்தமு தருத்திஎன் உளத்தே
அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
• இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-

( இனிய நாளில் ஓரு நல்ல விசாரணை உங்களுடன் செய்தமைக்கு நன்றி.–.)

ஏபிஜெ அருள்

unmai

Channai,Tamilnadu,India