April 20, 2024
tamil katturai APJ arul

நாம் மனிதர்களா? — உங்கள் ஏபிஜெ அருள்.

areyouahuman

என்ன கேள்வி இது? என்கிறீர்களா அன்பர்களே!
ஆம் வள்ளலாரின் சத்திய வாக்கியத்தினை வாசிக்கும் போது இப்படி தான் கேள்விக் கேட்டு நல்ல விசாரணை செய்ய தோணுகிறது.
(வள்ளலாரின் சத்தியவாக்கியத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை.
உள்ளது உள்ளபடி)
வள்ளலார் தனது முதல் விண்ணப்பத்தில் பக்கம் 556 ல்;

நாம் அஞ்ஞான இருளில் ஒன்றும் தெரியாது உணர்ச்சி இன்றிக் கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே, இவ்வுலகினிடத்து…
1) தாவர யோனி வர்க்கங்கள்
2) ஊர்வன நீர் வாழ்வன யோனி வர்க்கங்கள்
3) பறவை யோனி வர்க்கங்கள்
4) விலங்கு யோனி வர்க்கங்கள்
அடுத்து ….????
என்ன பிறவி என்று நாம் நினைப்போம்.?
மனிதப் பிறவி என்று தானே?
அன்பர்களே அது தான் இல்லை.
விலங்கு வர்க்கங்களுக்கு பின்பு,
இரு பிறவி யோனி வர்க்கங்களில் பிறந்து பிறந்து இறந்து இறந்து பின்பே ஏழாவது பிறவியிலேயே மனித தேகம் வரும்..

அந்த இரு யோனி வர்க்கங்கள் எதுவெனில்:
—- (5) தேவ யோனி வர்க்கங்கள்
அதன் பின்பு
—- (6) நரக யோனி வர்க்கங்கள்
இவர்கள் யார்?
தேவ யோனி வர்க்கங்கள் என்பவர்கள் யார் எனில்:
இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

“பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர். சுரர் முதலியராகப்
பிறந்து பிறந்து
அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல்,
அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல்
முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து
அத்தேவயோனி வர்க்கங்களெல்லாஞ்
சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;

நரக யோனி வர்க்கங்கள் என்பவர்கள் யார் எனில்:
இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

” காட்டகத்தார், கரவு செய்வார், கொலை செய்வார்
முதலியராகப் பிறந்து பிறந்து
பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;”

ஆக,
எவர் ஒருவர் அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல்
முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் தேவர்கள்.

எவர் ஒருவர், பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் நரகர்கள்.

இப்ப சொல்லுங்கள் நாம் மனிதர்களா?

மனித தேகமே அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயர் அறிவுடையது என்கிறார் நம் வள்ளலார்.
அன்பர்களே!
அச்சம் கொள்ளத் தேவையில்லை. நம் வள்ளலார் இருக்க கவலை எதற்கு?
இதோ நம் வள்ளலார் பாடலை இங்கு காண்போம்.

”வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு
வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன்
தந்தை நீதரல் சத்தியம் என்றே
குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக்
குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை
செய்க வாழ்கநின் திருவருட் புகழே.”

அன்பர்களே,
நாம் இன்று,
அலைப்படவில்லை,அகப்படவில்லை,அகங்கரிக்கவில்லை,
அதிகரிக்கவில்லை,மறந்து, நினைந்து நிற்கவில்லை, மயக்குறவில்லை,போரிடவில்லை,கொலைப்படவில்லை.
எனவே நாம் தேவ யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.

நாம் இன்று
பயப்படவில்லை, சிறைப்படவில்லை, சிதைப்படவில்லை அதணால் நாம் நரக யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.

இன்று எல்லா வல்ல ஆண்டவரின் திருவுளத்தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய இம் மனித தேகத்தை பெற்று உள்ளோம்.
அன்பர்களே! வள்ளலார் அவர்கள் மற்றொரு இடத்தில் சொல்லியதை இங்கு நினைவு கூர்வோம்: (பக்கம்:377) அதாவது; “அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே யெந்தக் காரணத்தினாலும் அல்ல.”
ஆம், சுத்த சன்மார்க்க ஒழுக்கம் உடையவர்கள். பக்கம் 410 ல் வள்ளலார் குறிப்பிட்டது போல் இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாக கொள்ளவில்லை. எல்லா பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டு தலைவனையே தொழுபவர்கள். எனவே நாம் மனித தேகம் எடுத்துள்ளோம் என்றுச் சொல்லுவோம். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி மட்டுமே தழுவுகிறோம்.

இடைவிடாது நன்முயற்சி செய்வோம். வள்ளலாரின் கட்டளைப்படி
உலகில் காணும் சமய,மத,மார்க்கங்களில் பற்று வைக்காமல் இருப்போம். அதன் ஆச்சாரங்களில் மனம் பற்றாமல் இருப்போம். முக்கியமாக நம் அறிவு, ஒழுக்கம் ஒத்தவர்களுடன் மட்டுமே நல்ல விசாரணைச் செய்வோம்.

காலமில்லை இன்றே காரியத்தில் இறங்குவோம்.
வெற்றி நமதே. வள்ளலார் இருக்க அச்சமில்லை.
”நாம் மனிதர்களே.”
நன்றி
அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India